Tuesday, January 10, 2012
வியாழக்கிழமைகளில் மவுனவிரதம் இருப்பது ஏன்?
மவுனமாக இருந்து பழகினால், மனசாட்சியின் மெல்லிய குரலை நம்மால் கேட்க முடியும் என்பர். மோனம் (மவுனம்) என்பது ஞானவரம்பு என்று அவ்வையார் குறிப்பிடுகிறார். சிவாலயங்களில் கல்லால மரத்தின் கீழ் தட்சிணாமூர்த்தி சீடர்களுடன் தெற்கு நோக்கி வீற்றிருப்பார். இவர் பேசும் மொழி என்ன தெரியுமா? மவுன மொழி. ஆம்..இவர் பேசுவதில்லை. சைகை மூலம் உலகத்துக்கு பெரும் தத்துவத்தைச் சொல்கிறார். இதனால் தான் இவருக்கு ஊமைத்துரை, மவுனச்சாமி என்ற பெயர்கள் உண்டு. வீரபாண்டிய கட்டபொம்மனின் தம்பிக்கு ஊமைத்துரை என்று தான் பெயர். மவுனமாக இருப்பது வழிபாட்டு வகைகளில் ஒன்றாகும். வியாழக்கிழமைகளில் தட்சிணாமூர்த்தியை தியானித்து மவுனவிரதம் மேற்கொள்வது இதனால் தான். பெரும்பாலான துறவிகள் வியாழக்கிழமைகளில் பேசுவதில்லை. மவுனத்தில் மூன்று வகை உண்டு. அவை உடல் மவுனம், வாக்கு மவுனம், மன மவுனம் என்பன. உடலைச் சிறிதும் அசைக்காமல் கட்டைபோல இருப்பது உடல் மவுனம். இவர்கள் பத்மாசனத்தில் அமர்ந்து சின்முத்திரை காட்டி தியானத்தில் ஆழ்ந்திருப்பர். வாக்குமனம் என்பது பேசாமல் அமைதி காப்பதாகும். மனதாலும் மவுனமாக இருப்பதே மன மவுனம். இந்த மவுனங்களை கடைபிடிப்பவர்கள் ஞானநிலை எய்துவதுடன், கடவுளோடு பேசி உறவாடும் சக்தியையும் பெறுகிறார்கள்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment