மீனாட்சி பட்டணமான மதுரையை உருவாக்க குலசேகரப்பாண்டியன் என்ற மன்னனின் கனவில், ஒரு கார்த்திகை சோமவாரத்தன்று தோன்றிய சிவபெருமான் அருள்பாலித்தார். பாண்டியனுக்கு ராஜதானியாய் விளங்கிய மணவூர் என்ற நகரில் வசித்த தனஞ்ஜெயன் என்ற வணிகர், வியாபாரத்தை முடித்து விட்டு கடம்ப மரங்கள் நிறைந்த வனம் ஒன்றிற்கு வந்தார். இருளாகி விட்டதால் காட்டிலேயே தங்கினார். அவர் அமர்ந்த இடத்தின் அருகே ஒரு சிவலிங்கம் இருந்தது. சிவனை வணங்கி விட்டு சற்று தள்ளி அமர்ந்து கொண்டார். சிறிது நேரத்தில், வானிலிருந்து தேவர்கள் பலர் வந்தனர். அவர்கள் லிங்கத்திற்கு பூஜை செய்து வழிபட்டனர். மறுநாள் தான் கண்ட காட்சியை மன்னனிடம் சென்று கூறினார். மன்னனும் தான் கண்ட கனவுக்கு ஏற்ப, சிவலிங்கம் கடம்பவனத்தில் இருப்பதை அறிந்து அந்த இடத்தில் ஒரு கோயில் எழுப்பி லிங்கத்தை பிரதிஷ்டை செய்
தான். கோயிலைச் சுற்றி அழகிய வீதிகளும் அமைக்கப்பட்டன. அப்போது, சிவபெருமான் தனது ஜடாமுடியில் இருந்த சந்திரக்கலையில் இருந்த மதுரமான அமிர்தத்தை, கங்கா ஜலத்துடன் கலந்து அந்த நகரின் மீது தெளித்தார். மதுரமான அமுதம் சிந்தியதால் அவ்வூருக்கு மதுரை என பெயர் சூட்டப்பட்டது.
No comments:
Post a Comment