சித்திரை (ஏப்ரல்/ மே)
வருடப்பிறப்பு : சூரியன் மீண்டும் ஒருமுறை பன்னிரு ராசிகளிலும் சுற்றத் துவங்கும் நாள். (சந்திரனின் சுற்றை அடிப்படையாகக் கொள்பவர்க்கு - தெலுங்கர்க்கு - புதுவருடம் பங்குனி மாதம் அமாவாசையன்று துவங்கும் - யுகாதி என்பர்) ஆசையின்றி சாதனை இல்லை. சாதனைக்காக திட்டங்களைத் தீட்டச் செய்யும் நன்னாளே வருடப்பிறப்பு. எச்செயலின் இனிய நிறைவேற்றலுக்கும் உகந்த காலமறிந்து செயல்படுதல் அவசியம் என்பதற்காக, வருடப்பிறப்பன்றே அவ்வருஷத்தின் 365 நாட்களுக்கும் செயல்திட்டம் வரைந்திட முயல வேண்டும் என்பதற்காக, அன்று பஞ்சாங்கம் படித்தல் ஒரு முக்கியமான பணியாகக் கூறப்படுகிறது.
சித்ரா பௌர்ணமி : உலகோரின் செயல்களைப் பதிவு செய்யும் தர்மதேவனின் (எமனின்) கணக்குப்பிள்ளையான சித்ரகுப்தனின் பிறந்த நாள். அவரை நினைப்பதன் மூலம், நாமே, நம் கடந்த வருட செயல்களின் நன்மை தீமைகளை எடைபோட வேண்டும் என்பது கருத்து. பட்ஜெட் தயாரிப்பு எதிர்கால வரவு -செலவுத் திட்டமென்றால் சித்ரா பௌர்ணமி விரதம் கடந்த வருட செயல்களின் ஆடிட் ஆகும். அன்று உணவில் உப்பு, பசும்பால், தயிர் விலக்கிடவும்.
அக்ஷய திருதியை : (வளர்பிறை திருதியை) முதல் யுகமான கிருதயுகத்தில் பிரமன் உலகைப் படைத்த நாள். விஷ்ணு பரசுராமராக அவதரித்த தினம். தானங்கள் செய்யச் சிறந்த நாள். அக்ஷயமான (அழிவில்லாத) பயனை அடைவோம்.
சங்கர ஜயந்தி : (வளர்பிறை பஞ்சமி) பரம்பொருள் தத்துவத்தின் உண்மையை மறந்ததால், காலப்போக்கில் பல பிரிவாகிவிட்ட சனாதன தர்மம் என்ற இந்து மதத்தை, மீண்டும் நிலைப்பிக்க, சிவபெருமான் ஆதிசங்கரராக அவதரித்த நாள். முக்கிய வைணவ ஆச்சாரியரான ஸ்ரீ ராமானுஜர் அவதரித்ததும் அன்றே.
வைகாசி (மே/ஜுன்)
நரசிம்ம ஜயந்தி :( வளர்பிறை சதுர்தசி) தானே தெய்வம் என்று கூறியதோடு, உண்மைப் பரம்பொருளை வழிபட்டவர்களை துன்புறுத்தியும் வந்த ஹிரண்யனை திருத்தும் பொருட்டு விஷ்ணு நரசிம்மனாக அவதரித்த தினம். அகந்தை அறுக்கும் நாள்.
விசாகம் : நல்லோரை, நலிந்தோரைத் துன்புறுத்திய சூரபத்மாசுரனை அடக்குவதற்காக சிவசக்தி ஜோதியிலிருந்து முருகப்பெருமான் தோன்றிய நாள்.
ஆனி (ஜுன்/ஜுலை)
சாவித்திரி விரதம் : (பௌர்ணமி) கற்பினாலும் விடாமுயற்சியாலும் எமனையும் வெல்லலாம் என நிரூபித்த சாவித்திரி பிறந்த தினம்.
ஆடி (ஜுலை/ஆகஸ்ட்)
ஆடிப்பூரம் : பராசக்தி இமயமலையரசனின் மகளாக, பார்வதியாக பிறந்தநாள். பின்னொருகால், அவளே மலையத்துவஜ பாண்டியனுக்கு மீனாட்சியாக தோன்றியதும் அன்றே. இறைஞ்சினால் இறைச்சக்தியே நமக்குக் குழந்தையாக பிறப்பதைக் குறிக்கும் நாள்.
நாக பஞ்சமி: (வளர்பிறை பஞ்சமி) செல்வத்துள் சிறந்த குழந்தைச் செல்வத்தைப் பெறுவதில் தடைகளை நீக்கியருளும் விரதம். நாக தோஷம் நீங்கிட ப்ரதிஷ்டை செய்யும் நன்னாள்.
வரலெட்சுமி விரதம் : மகாலெக்ஷ்மி பாற்கடலில் உதித்த தினம். சுமங்கலிகள் மட்டும் அனுஷ்டிப்பது. (சில சமயம் அவணியிலும் வரும்)
ஆவணி (ஆகஸ்ட்/ செப்)
ஆவணி அவிட்டம்: ஆண்களுக்கு மட்டுமான விரதம். அந்தணர் மட்டுமின்றி முப்புரி அணிந்த அனைவரும் மேற்கொள்ளும் விரதம். விபரம் தெரிந்ததிலிருந்தே (5 வயதில் இருந்தே) மும்மலத்தையும் தவிர்ப்பதற்காக, முக்தி வழியைப் பின்பற்ற வேண்டும் என்பதை நமக்கு அன்றாடமும், நினைவுபடுத்திக் கொண்டே இருப்பதற்காக அணியப்படுவதே முப்புரியாலான பூணூல். தெய்வத்தை இனங்காட்ட உதவும் முப்புரியை ஒரு இனத்தவருக்கு மட்டுமென்று கருதுதலோ, தூற்றுதலோ ஆகாது.
காயத்ரி ஜபம் : (மறுநாள்) காயத்ரி என்றால் கூறுபவர்களைக் காக்கும் வாக்கு என்று பொருள். எக்குறையையும் நீக்கி நன்மை யாவும் அளிக்கும். காயத்ரிக்கு ஈடான மந்திரமே இல்லை. நல்லனவாயினும் கூட மறப்பது மனித இயற்கை. எனவே தினமும் காயத்திரியை ஜபிக்க மறந்ததற்கு ஈடாக இந்நாளில் அதிகமாக ஜபிக்க வேண்டும்.
கோகுலாக்ஷ்டமி : (தேய்பிறை அஷ்டமி) மக்களைக் கொடுமைப்படுத்தி வந்த கம்சனை அழித்து, தர்மத்தை நிலைநாட்டுவதற்காக விஷ்ணு கண்ணனாக அவதரித்த நாள். அன்று பாகவதத்தில் கிருஷ்ணாவதாரப் பகுதியையும் பாரதத்தில் கீதையையும் படித்தலும், கேட்டலும் நன்று.
விநாயக சதுர்த்தி : (வளர்பிறை சதுர்த்தி) யானைமுக அசுரனை அழித்து, அனைவரின் துன்பத்தையும் போக்குவதற்காக, பரம்பொருள் விநாயகனாக அவதரித்த நாள். பிடித்தால் பிள்ளையார் என்பது வழக்கு. அதாவது அன்புக்குள் அகப்பட்டவன், ஒவ்வொருவர்க்கும் கைப்பிடி தூரத்திலேயே இருக்கிறான் என்றும் பொருள். எக்காரியம் துவங்கும் முன்பும் பசுமஞ்சளில் எழுந்தருளச் செய்யப்படும் விநாயகனை, அவன் அவதார நாளில் மட்டும் பசுமண்ணில் வடிவம் செய்து வணங்குவது மரபு. மண் உரு சிதையு முன்பு ஓரிரு நாட்களுக்குள் நீரில் கரைத்திடல் வேண்டும்.
புரட்டாசி (செப் / அக்)
மகாளயம் : (பௌர்ணமி முதல் அமாவாசை முடிய தேய்பிறை நாட்கள்) மகாளயம் என்றால் பெரிய இருப்பிடம். மகிழ்வான காலம் என்றும் பொருள். இந்நாட்களில் இறந்தோரும் நம்மோடு நுண் வடிவில் இருப்பர். தம்மோடு உறையும் மூதாதையரைக் கருதி அவரவர் மக்கள் 15 நாட்கள் தானமும் தர்ப்பணமும் செய்தல் வேண்டும். மகவு இன்றி மறைந்தார்க்கும் பங்காளிகள் படையல் செய்திட உகந்த சமயம்.
நவராத்திரி : மகாளய அமாவாசைக்கு அடுத்த 9 நாட்கள். இது சாரதா நவராத்திரி எனப்படும். பிற மூன்று நவராத்ரிகள் அதிகமாக வழக்கிலில்லை. முச்சக்தியுமான (இச்சா,க்ரியா, ஞான) இறைவியை லக்ஷ்மி, சரஸ்வதி, துர்க்கை வடிவில் பூஜிக்கிறோம். அன்றாடம் வணங்கப்பெறாத திருஉருவ பொம்மைகளையும் சுத்திகரித்து, சீராக அடுக்கி, அழகுபட அலங்கரித்து வழிபடும் நாட்கள். சிலர் படிகள் கட்டி, கடவுளை கொலுவிருக்கச் செய்வர். படிகளுக்குள் படைப்பே அடக்கம் என்பதால் எல்லா பொம்மைகளையும் வைக்கலாம்.
சரஸ்வதி பூஜை : (நவமி) நவராத்திரி காலத்தில் மூல நக்ஷத்திரத்தில் கலைகளுக்கு அதிபதியான சரஸ்வதியை புத்தகங்களில் எழுந்தருளச் செய்து நவமி யன்று பூஜிக்க வேண்டும். பல்தொழில்களிலும் ஈடுபட்டு இருப்போரும் அன்று தத்தம் தொழிற்கருவிகளை வழிபடுவதால் இந்த நாள் ஆயுதபூஜை என்றும் வழங்கப்பெறுகிறது.
விஜயதசமி : பரம்பொருள் சக்தி, தேவிவடிவில், தீய சக்திகளை அடக்கி வென்றதைக் கொண்டாடும் நாள்.
ஐப்பசி (அக் / நவம்பர்)
தீபாவளி : (நரக சதுர்தசி) (தேய்பிறை சதுர்தசி) உலகோரை துன்பத்திற்குள்ளாக்கிய நரகாசுரனை கண்ணன் அடக்கிய நாள். இறக்குமுன் அவன் வேண்டியதற்கு ஏற்ப, அனைவரும் அதிகாலை எண்ணை நீராடி, புத்தாடை அணிந்து, இனிப்பு உண்டு, பட்டாசு வெடிப்பர். தீங்கு செய்து நரகம் நாடேல் என்பதை நினைவிருக்கும் நாள்.
கந்த சஷ்டி : (வளர்பிறை பிரதமை முதல் சஷ்டி முடிய 6 நாட்கள்) தேவர் துயர் நீக்கப் பிறந்த ஆறுமுகன் சூரசம்ஹாரத்தை முடித்ததை நினைவுகூறிடும் காலம். பால தேவராய சுவாமிகள் தினம் ஒன்றாக 6 நாட்களில் கந்தன் மீது அருளிய 6 கவசங்களையும் தினமும் 6-6 முறை படித்தல் அளப்பரிய அருள் கூட்டும்.
அன்னாபிஷேகம் : (பௌர்ணமி) இறைவனுக்கு தினமும் அன்னத்தை நிவேதனம் மட்டுமே செய்கிறோம். இத்திருநாளில் சிவலிங்க வடிவம் முழுவதும் மறையுமளவிற்கு அன்னத்தை அபிஷேகித்து ஒரு வருட காலத்துக்கு பசிப்பிணி தீரும் பயனை அடைகிறோம்.
கார்த்திகை (நவ/டிசம்பர்)
காளாஷ்டமி : (தேய்பிறை அஷ்டமி) சிவனாரின் முடியைக் காணாவிட்டாலும் கண்டேன் எனப் பொய் கூறிய பிரம்மாவின் 5 முகங்களில் ஒன்றைக் கிள்ளிய காலபைரவர் தோன்றிய நாள். அவரே காசிக்கு வருவோரின் பாவத்தைக் கண்டிக்கும் பொறுப்பை உடையவர். அவர் கொடுக்கும் தண்டனையின் அடையாளமே நாம் கட்டிக் கொள்ளும் காசிக் கயிறு.
பரணி தீபம் : பரணி நக்ஷத்திரத்தின் தலைவன் எமன் எனப்படும் தர்மராஜர் ஆவார். தினந்தோறும் அவரை (தர்மத்தை) நினைக்காததற்காக ஏற்றப்படுவதே பரணி தீபம். 365 இழைகளைச் சேர்த்துத் திரியாக்கி விளக்கேற்ற வேண்டும்.
கார்த்திகை தீபம் : (பௌர்ணமி) விளக்கேற்ற விளங்கும் கார்த்திகை மாதம் முழுவதும் காலையும். மாலையும் அதிக விளக்குகள் ஏற்ற வேண்டும். இயலாதோர் 3 நாட்களாவது அதிகமான விளக்கேற்றவும் தீப தானம் செய்வது நல்லது.
அண்ணாமலை தீபம் : பிரம்மனும் விஷ்ணுவும் தாமே பெரியவர் என்று வாதிடுகையில், பெரிய ஜோதியாத் தோன்றிய சிவபெருமான் கலியுகத்தில் மலையாக அண்ணாமலையாக உள்ளார். அவர் திரிபுர அசுரர்களை வென்று முக்கோட்டையைத் தகர்த்ததும் அன்றே. வேதத்தை மீட்பதற்காக திருமால் மச்ச அவதாரம் எடுத்ததும் அன்றே.
விஷ்ணு கார்த்திகை : மகாபலியின் கர்வத்தை அடக்குவதற்காக திருமால் வாமனனாக (குள்ளனாக) அவதரித்த நாள்.
மார்கழி ( டிச / ஜனவரி)
மாதங்களில் மார்கழியாவேன் என கண்ணன் கூறுமளவுக்கு தெய்வீக சக்தி நிறைந்த மாதம். நமக்கு ஒரு வருடம் தேவர்க்கு ஒரு நாள். தேவரின் நாளில் மார்கழி அதிகாலை நேரமாகும். அக்காலத்தை இறைவழிபாட்டிலேயே முழுவதும் கழிக்க வேண்டும் என்பதற்காகத்தான் இகவாழ்வுச் சடங்குகள் எதையும் (திருமணம், புது வீடு புகல்) செய்வதில்லை. சைவ, வைணவ பேதமின்றி அனைவரும் அதிகாலையில் நன்னீராடி விரதமிருந்து திருப்பாவை, திருவெம்பாவை பாடுவர்.
அனுமன் ஜயந்தி : (அமாவாசை ) சிவ பக்தனும், ராம தாசனும், சிரஞ்சீவியும் ஞானியும், தீரனும், பல்துறையிலும் வல்லவனும் ஆன அனுமன் பிறந்த நாள்.
வைகுண்ட ஏகாதசி : (வளர்பிறை ஏகாதசி) ஏகாதசியின் சிறப்பைக் கூறாத புராணமே இல்லை. நம்மை திருமாலிடம் சேர்ப்பிக்கும் நாள். வைகுண்ட ஏகாதசி முக்கோடி ஏகாதசி விரதத்துக்கு சமம்.
ஆருத்ரா தரிசனம் : (திருவாதிரை) கர்மாவே பெரிது. கடவுள் இல்லை என்று கூறிய முனிவர்களின் அறியாமையை நீக்கிட வந்த ஈசன், தனக்கு எதிராக ஏவப்பட்ட யானையைத் தன் ஆடையாக்கி, உடுக்கு, தீ, பாம்பு முதலியவற்றை ஆபரணமாக்கிக் கொண்டு நடராஜனாக காட்சி தந்த நாள். வசதியில்லாத, சேந்தனார் என்ற பக்தர் அளித்த களியை சிவனார் ஆவலோடு ஏற்றத்திலிருந்து திருவாதிரையன்று (களி) கூழ் முக்கிய நிவேதனமாகிவிட்டது.
போகிப்பண்டிகை : மார்கழி கடைசி நாள். மறு நாள் பிறக்க இருக்கும் தை மாதத்தை முன்னிட்டு பழையனவற்றை அப்புறப்படுத்தி வீடுகளைப் புதுப்பொழிவு பெறச் செய்யும் நாள்.
தை (ஜனவரி/ பிப்ரவரி)
பொங்கல் : சூரியன் வடபால் நகரத் துவங்கும் நாள். மகர சங்கராந்தி உத்தராயண புண்ய காலம் எனப்படும். தானியங்கள் அறுவடையாகி எங்கும் மகிழ்ச்சி பொங்குவதால் பொங்கல் ஆயிற்று. சந்திரனின் சுற்றில் தேய்பிறையை விட வளர்பிறை சிறப்பென்பது போல சூரியனின் வடபால் நகர்வு சிறப்பு. அன்று சக்திக்கு எல்லாம் ஆதாரமான சூரியன் சிறப்பாக வழிபடப்படுகிறார்.
மாட்டுப்பொங்கல் : (பொங்கலுக்கு மறுநாள்) எளிதில் ஜீரணமாகும் பால், பயிருக்கு உரமாகும் சாணி, கொடிய கேன்ஸர் போன்ற நோய்களையும் தீர்க்கவல்ல கோநீர் என்று அனைத்து வகையிலும் நன்மை சேர்க்கும் பசு இனத்தை பூஜிக்கும் நாள்.
தைப்பூசம் : கோளங்களின் வரலாற்றில் உயிர்களின் படைப்பு துவங்கிய நாள், பல்லூர்களிலும் கோயில்களில் திருவிழா நடைபெறும்.
மகா சிவராத்திரி : சக்தியை நாம் வணங்கும் காலம் நவராத்ரி. சக்தி சிவனை வணங்கிய நாள் சிவராத்ரி. பகலில் மட்டுமின்றி இரவு முழுவதும் விழித்திருந்து சிவ அபிஷேக ஆராதனை தியானத்தில் ஈடுபட வேண்டும்.
மாசிமகம் :(பௌர்ணமி) சிருஷ்டி துவங்கிய நாள். பன்னிரண்டு வருடத்துக்கு ஒரு முறை இம்மகம் மகாமகம் எனப்படும். தென்பாரதத்தில் கும்பகோணத்தில் மாமாங்கம் என்றும், வடக்கே அலகாபாத்தில் கும்பமேளா என்றும் வெகு சிறப்பாகக் கொண்டாடப்படும். கோடிக்கணக்கானோர் புனித நீராடும் நன்னாள்.
பங்குனி ( மார்ச் / ஏப்ரல்)
காரடை நோன்பு: பராசக்தி சிவனைக் குறித்து காஞ்சியில் வணங்கிய நாள். கற்பரசி சாவித்திரி காலனிடமிருந்து கணவனை மீட்ட நாள். மாசி முடிந்து பங்குனி மாதம் பிறக்கும் நேரத்தில் சுமங்கலிகள் புது மஞ்சள் சரடு கட்டிக் கொள்வார்கள்.
ஸ்ரீ ராமநவமி : நாம் வாழவேண்டிய முறையை தானே வாழ்ந்து காட்டிட்ட இராமன் அவதரித்த நாள்.
பங்குனி உத்திரம் : (பௌர்ணமி) உமை பரமசிவனை மணந்த நாள். அன்று பல ஊர்களிலும், திருமணம் நடக்க வேண்டியோர்க்கு, நாள், நக்ஷத்திரம் போன்ற பொருத்தங்களைத் பார்க்காமல் மணம் செய்விப்பது மரபு. பல சிவாலங்களில் திருக்கல்யாண உற்சவம் நடைபெறும்.
பிற விரதங்கள்
1. சதுர்த்தி விரதம் : விக்னம் குலைக்கும் விநாயகனைப் பணிய, அவன் நாம் விரும்பியதை வழங்கிடுவான்.
2. சஷ்டி விரதம் : உலகோரை வருத்திய சூரன் அழிந்த நாளில் சுப்ரமணியனை வணங்கிட நம் கஷ்டங்கள் யாவும் தீரும்.
3. ஏகாதசி விரதம் : ஒருமுறை, திருமால் தீய சக்திகளை அழித்து உயிர்களைக் காத்திட்ட நாள். விஷ்ணு வழிபாட்டுக்கு மிகவும் உகந்தது.
4. பிரதோஷ விரதம் : துவாதசி முடிந்து திரயோதசியில் மாலை வேளையில் சிவபெருமான் நம்மைப் பீடிக்கக்கூடிய அல்லல்களிலிருந்து காக்கும் நேரம். ஆலகால விஷத்தை உண்டு உயிர்களை எல்லாம் காப்பாற்றியதற்காக சிவபெருமானை தேவரனைவரும் வணங்கிய நேரம்.
ஏகாதசி அன்று அனைத்து தேவரும் விஷ்ணுவின் சமீபமிருப்பதால் பிற தேவாலயங்களில் சிறப்பு வழிபாடு இருப்பதில்லை. பிரதோஷத்தில் சிவ சமீபமே தேவர் இருப்பதால் அன்று சிவாலயங்களில் மட்டுமே சிறப்பு வழிபாடு.
5.கிருத்திகை விரதம் : கந்தனைக் குறித்து, கிருத்திகை நக்ஷத்ரம் தோறும் நோன்பிருத்தல் (கார்த்திகை மாதத்திலிருந்து).
6. வைரவ விரதம் : தை மாத முதல் செவ்வாய் முதல் எல்லா செவ்வாய் கிழமைகளிலும் பயநாசகரான பைரவரை வழிபடுதல்.
7. யமத்வித்யை விரதம் : கார்த்திகை வளர்பிறை துவிதியையில் தர்மராஜனைக் குறித்து, மரணபயம் நீங்கிட வழிபடுதல்.
8. சங்கடஹர சதுர்த்தி விரதம் : ஆவணி தேய்பிறை சதுர்த்தி தொடங்கி பிரதி மாதம் தேய்பிறை சதுர்த்தியில் விநாயகனை வழிபடுதல்.
9. ரிஷிபஞ்சமி விரதம் : புரட்டாசி வளர்பிறை பஞ்சமியில் அனைத்து ரிஷிகளையும், அருந்ததி போன்ற கற்பரசிகளையும் ருது சம்பந்தமான குறைகளைப் போக்குவதற்காக வணங்குவது.
10. ஜேஷ்டா விரதம் : இல்லாமை நீங்கிட புரட்டாசி வளர்பிறை அஷ்டமியில் மூத்தவளை (ஜேஷ்டா தேவியை வழிபடுவது)
11. திக்தேவதா விரதம் : ஆடி மாதம் வளர்பிறை தசமியில் திசை நாயகர்களை வழிபடுவது.
12. அசுவத்த பிரதக்ஷிண விரதம் : திங்கள் கிழமை வரும் அமாவாசை, ஞாயிறு வரும் சப்தமி, புதன் வரும் அஷ்டமி ஆகிய தினங்களில் மும்மூர்த்தி வடிவான அரசமரத்தை வழிபடுதல்.
13. மங்கள கிரக விரதம் : அங்காரனை வேண்டி, செவ்வாய் தோறும் குறிப்பாக செம்மலர்களால் வழிபட கடன் தொல்லை (பணக்கடன், பாசக்கடன்) நீங்கும்.
14. குருவார விரதம் : கல்வி அறிவு வேண்டி வியாழக்கிழமை தோறும் குரு பகவானை வழிபடுதல்.
15. துளசி பிரதக்ஷிண விரதம் : துளசியை பிரதி தினம் காலை, மாலை வழிபட்டு வர சகல சித்தி, குறிப்பாக மங்களகரமான மண வாழ்வு அமையும்.
No comments:
Post a Comment