அய்யனார் என்ற சொல்லானது அய்(ஐ) அன், ஆர் என்ற மூன்றால் ஆனதாகும். இதில் ஐ என்ற எழுத்து தலைவன் என்றும் அன் என்பது ஆன்பால் ஈரு ஆகும். ஆர் என்பது மரியாதைக்குரிய விருதியாகும். கிராமங்களில் ஊருக்கு வெளியே காடுகளிலும் கண்மாய் கரைகளை அடுத்தும் கோவில்கள் அமைத்து அய்யனார் கிராமத்தைக் காப்பவராகவும் விளைச்சலைப் பெருக்குபவராகவும் கால்நடைகளைக் காப்பாற்றுபவராகவும் திகழ்கின்றன.கிராமத் தேவதை வழிபாடு விரைந்து பயனளிக்கும் என்ற நம்பிக்கை கிராமத்து மக்களிடம் மிகுந்து காணப்படுவதால் கருப்பர், வீரபத்திரர், காளியம்மன், மாரியம்மன் முதலியவைகளைக் காவல் தெய்வமாய் கருதி உத்திராயண காலத்தில் சிவராத்ரி, பங்குனி உத்திரம் ஆகிய நாட்களில் பச்சை வாழை இலையைப் பரப்பி பொங்கல், பயறு வகைகள் வைத்துப் படைத்து தங்களுடைய வாழ்க்கையில் நிகழும் நிகழ்ச்சிகள் நன்கு நடைபெற வேண்டுமென்றும், தங்களுடைய கால்நடைச் செல்வங்களான மாடு, ஆடு, சேவல் முதலியவைகளை நோய்நொடி இல்லாமல் இருக்க வேண்டுஎமன்றும் தங்களுக்குச் சொந்தமாயுள்ள கால்நடைகளைத் தானமாய் நேர்த்திக்கடன் என்று ஒன்றைவிட்டுச் செல்கின்றனர். இவைகளை கோயில் நிர்வாகம் ஏற்றுக் கொள்கின்றது. வழிபடல் சிறப்புற்று விளங்குகின்றது.
பழங்காலம் முதற்கொண்டே அய்யனார் வழிபாடு தமிழகத்தில் இருந்து வந்ததற்கான ஆதாரங்கள் இலக்கியங்களில் இருக்கின்றன. சமணர்கள் கோயிலிலும் அய்யானர் தெய்வத்தைப் பரிவாரத் தெய்வமாய் வைத்து வழிபட்டு வந்திருக்கின்றார்கள்அவர்கள் இவரை பிரம்மயட்சணர் என்றும் அழைத்து வருகின்றார்கள். யானை வாகனம் அவருக்குரியது என்றும் கூறி வழிபட்டு வருகின்றார்கள். அய்யனார் வழிபாட்டில் கருப்பர் மிகவும் முக்கியமானவராகும். இவர் பக்தர்களான சாமியடிகள் மீது இறங்கி வந்து அருள் பாலிப்பார். கிராமத்து விதிகளில் சாமியடிகள் மூலம் வலம் வந்து அங்குள்ள பேய், பிசாசு, ஏவல், பில்லி, சூன்யம், காலரா, அம்மை, பிளாக் நோய்களைத் தரும் தீயசக்திகளை விரட்டி விடுகின்றார் என்று கருதுகிறார்கள். எனவே இவ்வழிபாட்டு நாட்களில் சாமியாட்டம் சிறப்பாய் நடத்தப்படுகின்றது.தமிழகத்தில் உள்ள அய்யனார் வழிபாட்டிற்கும், மலையாளத்தில் உள்ள அய்யப்பன் வழிபாட்டிற்கும் அநேக ஒற்றுமைகள் காணப்படுகின்றன. அய்யப்பன் கோயிலிலும் பதினெட்டு படிகளாகும். அழகர்மலை கோயிலிலும் பதினெட்டுப்படிகளாகும். தமிழகத்தில் அய்யானருக்கு பூரணை, புஷ்கால என்ற மனைவியர் உண்டு. கேரளாவில் ஆரியங்காவிலும் பூரணை புஷ்கலையுடன் ஐயப்பன் இருக்கிறார். தமிழகத்திலுள்ள சிறுதெய்வ வழிபாடு முழுவதும் அழகர்மலையிலுள்ள பதினெட்டாம்படி கருப்பர் வழிபாட்டிற்குக் கட்டுப்பட்டதேயாகும். அய்யனார் கோயில்களில் இருக்கும் தெய்வச்சிலைகள், எல்லாம் களிமண்ணால் செய்யப்பட்டு சூளையில் வைத்து சுட்டு செய்யப்பட்டவைகளாய் இருந்து வருகின்றன.
அய்யப்பன் என்ற சொல்லானது அருந்தமிழ் மொழிச் சொல்லாகும். அய் என்ற முதல் நிலையோடு அப்பன் என்ற இடை நிலையும் இணைந்து அய்யப்பன் என்றாயிற்று. அய்யனார் அய்யப்பன், அரிகரபுத்திரன், சாத்தன், சாஸ்தா போன்ற சொற்கள் எல்லாம் ஒருவரையே குறிக்கும் பல பெயர்களாகும். சாஸ்தா என்ற சொல்லானது பிராகிருத மொழிக்குரியதாகும். இதற்கு சாத்தன் குதிரை வாகனன் என்று பத்தாம் நூற்றாண்டில் தோன்றிய சொல் விளக்க அகராதி நூல்களான திவாகர நிகண்டு, பிங்கள நிகண்டு ஆகியவைகளில் பொருள் கூறப்பட்டுள்ளது.
அரனாகிய சிவபெருமானுக்கும், அரியாகிய மகாவிஷ்ணுவிற்கும் தோன்றிய அவதாரப் புருஷர் அய்யப்பனார் ஸ்வாமி ஆகும். அய்யப்பர் பரசுராமர் பூமி என்று கூறப்படும் கேரள மாநிலத்தில் பல அவதாரப் புருஷராய் விளங்குகின்றார். யோக நிலை அய்யப்பன், புலிவாகன அய்யப்பன், தவக்கோல அய்யப்பன், பூரணை புஷ்கலா தேவிகள் சமேதரராய் விளங்கும் அய்யப்பன் போன்ற அவதாரங்களில் இருந்து வருகின்றார்.
குளத்துப்புழையில் பாலகனாய் காட்சியளித்துக் கொண்டிருக்கிறார்.
பந்தளத்தில் பாலகனாய் நின்ற கோலத்துடன் காட்சியளித்துக் கொண்டிருக்கின்றார்.
எருமேலியில் மகிஷியை வதம் செய்யும் கோலத்தில் காட்சியளித்துக் வருகின்றார்.
ஆரியங்காவில் பூரணை தேவி, புஷ்கலை தேவி சமேதகராய் குடும்பக் கோலத்தில் காட்சியளித்துக் கொண்டிருக்கின்றார்.
சபரிமலையில் சூரியன் தனுர்ராசியில் இருந்து மகரராசிக்கு மாறும் மகர சங்கிரம வேளையில் நெய் அபிஷேகம் செய்து கொண்டு அருட்பாலிக்கும் சாஸ்தாவாய் காட்சியளித்துக் கொண்டிருக்கிறார்.
அச்சன்கோயிலில் பூர்ணா புஷ்கலா தேவிகளோடு தேரோட்டம் திருவிழா காணும் அருளாளராய் காட்சியளித்து வருகின்றார். இவரை பக்தர்கள் நாற்பத்தோறு தினங்கள் கருப்பு வஸ்திரம் அணிந்து கொண்டு இருமுடி கட்டி வந்து பதினெட்டுத் திருப்படிகள் வழியாக ஏறி வந்து விரதமாய் இருந்தே வழிபட்டு அருள் பெற்றுச் செல்கின்றனர்.
இங்கே கூறப்பட்டுள்ள அய்யனார் அய்யப்பன் இரு தெய்வங்களுடையத் திருப்பெயர்களைத் பொறுத்தமட்டில் இரண்டு சொற்களுமே ஒரே தெய்வத்திற்குரியதாகும். சொல் சேர்க்கையில் தான் வித்தியாசம் உள்ளதே தவிர சொற்கள் உணர்த்தும் பொருள் ஒன்றே தான். சோழ நாடு, பாண்டிய நாடுகளில் பூகோள நில அமைப்பு நீர்வளம்மிக்க நிலப்பரப்பாய், பசுமை வளம் மிக்க வனப்பரப்பாய் உள்ளது. இவர் இங்கு கிராமம்தோறும் கோயில் கொண்டுள்ளார். உள்ளூரிலேயே எல்லைப்புறங்களில் உள்ளார். இங்கு இருமுடி கட்டி எடுத்துச் செல்ல வேண்டிய அவசியம் இல்லை. அய்யப்பர் திருக்கோயில்கள் சேரநாட்டுப் பூகோள நில அமைப்பு மலைப்பகுதிகளாய் உள்ளது. அடர்ந்த காடுகள், அகலமான பாதையற்ற நடைபாதை, குன்றுகள் நிறைந்த மலைமீது உள்ளார். அங்கு போய் சேர அதிகத் தூரம் பயணம் செய்ய வேண்டிய அவசியம் <உண்டாகின்றது. இங்கு இருமுடி கட்டி எடுத்துச் செல்ல வேண்டிய அவசியம் <உள்ளது. இருவரும் வீராசனத்தில் யோகப்பட்டையுடன் அபய வரதத் திருக்கரங்களுடன் தலையில் மகுடத்துடன் அமர்ந்த கோலத்தில் உள்ளனர். இருவருடைய உருவ வடிவ அமைப்பும் எல்லாம் ஒன்று போலவே உள்ளது. இருவர் கோயில்களும் குறிப்பிட்ட சில காலம் நேரங்களில் மட்டுமே நடை திறந்து பூஜைகள் செய்து நடை சாத்தியும் வழிபாட்டு முறைகள் நடத்தப்பட்டும் வருகின்றன.
தெய்வம் உள்ளது. எங்கும் எல்லாமுமாய் உள்ளது. தெய்வங்களை வழிபடுதல், உணர்தல், பூஜித்தல் என்பது அவரவர் அனுபவமாகும். இவர்கள் இருவரும் ஒருவரே. வெவ்வேறானவர் அல்ல. இவ்விரண்டிலும் கருத்துப் பேதம் எதுவுமே இல்லை. ஆனால் இத்தெய்வங்களை வழிபடும் முறைகள் பற்றி ஆன்மிகர்கள் அவர் பெற்ற அனுபவத்திற்கேற்ப பல படிகளைச் சொல்லி இருக்கின்றார்கள். அந்தந்தச் சூழ்நிலைக்கேற்ப வடிவங்கள் அவதார உருவங்கள் உள்ளன. தமிழகத்து அய்யனார் வழிபாட்டு முறைகளும், சபரிமலை அய்யப்பன் வழிபாட்டு முறைகளும் ஒன்றுபோலவே விளங்குகின்றன. இரண்டும் அந்தந்தக் சூழ்நிலைக்கேற்ப வளர்ச்சி பெற்று இன்று புகழ் பெற்று விளங்குகின்றன.
Thanks for the valuable information
ReplyDelete