எத்தனை வகைப்பூக்கள் இருந்தாலும், துளசி செடி இல்லாவிட்டால் அது நந்தவனம் ஆகாது.
* துளசி மட்டுமிருந்தால் கூட அது சிறந்த நந்தவனமாகிவிடும்.
* துளசி படர்ந்த இடம் பிருந்தாவனமாகும். துளசியின் இன்னொரு பெயர் பிருந்தை.
* துளசி மாலை அணிந்தோ, துளசி மாலையை கையில் பிடித்தோ பூஜிப்பவர்களுக்கு, 1000 அஸ்வமேத யாகம் செய்த பலன் கிடைக்கும்.
* மரண காலத்தில் துளசி தீர்த்தம் அருந்துபவர்களை பெருமாள் தன்னுடன் சேர்த்து கொள்கிறார்.
* பவுர்ணமி, அமாவாசை, சஷ்டி, தீட்டு காலங்கள், துவாதசி, மாதப்பிறப்பு, உச்சி வேளை, இரவு வேளை, எண்ணை தேய்த்து கொண்டு துளசி பறிக்க கூடாது.
* அதிகாலைப்பொழுதும், சனிக்கிழமைகளிலும் விரல் நகம் படாமல் விஷ்ணு பெயரை உச்சரித்து கொண்டு துளசி பறிக்க வேண்டும்.
* துளசி பறித்த 3 நாள் வரை உபயோகப்படுத்தலாம்.
* விரதநாள், மூதாதையரின் திதி நாள், தெய்வ பிரதிஷ்டை நாள், இறைவனை வணங்கும் வேளை, தானம் செய்யும் போது ஆகிய இடங்களில் துளசி பயன்படுத்துவதால் அந்த செயல் பரிபூரண பலன் கொடுக்கும்.
துளசியின் வேறு பெயர்கள்
துளசியின் மந்திரப்பெயர்கள் பிருந்தா, பிருந்தாவனி,விஸ்வபாவனி, புஷ்பசாரை, நந்தினி, கிருஷ்ணஜீவனி, பிருந்தாவனி, விஸ்வபூஜிதா.
துளசியின் நதி ரூபப்பெயர் கண்டகி.
துளசியின் தாவரப்பெயர் சேக்ரட் பேசில் பிளான்ட்.
துளசியின் கணவன் பெயர் சங்க சூடன்.
சங்காபிஷேகத்தில் துளசி
சங்கு, துளசி, சாளக்கிராமம் (புண்ணிய நதிகளில் கிடைக்கும் கல் வடிவ சிலை) மூன்றையும் ஒன்றாக பூஜிப்பவர்களுக்கு மஹாஞானியாகும் பாக்கியமும், முக்காலமும் உணரும் சக்தியும் கிடைக்கும் என்பது ஐதீகம். சங்கில் தீர்த்தம் நிரப்பி துளசி மேல் வைத்து சங்காபிஷேகம் செய்வது மிகவும் சிறந்தது. சிவபெருமானுக்கு பிடித்த அபிஷேகங்களில் உயர்ந்தது சங்காபிஷேகம்.
துளசியின் கதை
கிருஷ்ணாவதாரத்தில் மகாவிஷ்ணுவின் அம்சமாக சுதர்மரும், லட்சுமியின் அம்சமாக ராதையும் அவதாரம் செய்கிறார்கள். இவர்களிருவரும் கிருஷ்ணனை அதிகம் நேசிக்கிறார்கள். ஒரு முறை ராதை சுதர்மர் மீது கோபம் கொண்டு சாபமிடுகிறார். இதனால் சுதாமர் சங்கசூடன் என்ற வேறொரு பிறப்பு எடுக்க வேண்டியதாயிற்று. அதேபோல் ராதையும் மாதவி என பிறப்பெடுக்கிறாள். மாதவியின் மகள் தான் துளசி. சங்கசூடனும், துளசியும் திருமணம் செய்து கொள்கிறார்கள். பின் கிருஷ்ணரால் துளசியின் ஆயுள் காலமும், சிவனால் சங்கசூடனின் ஆயுளும் முடிவடைந்தது. இதனால் சங்கசூடன் விஷ்ணுவுடனும், துளசி மகாலட்சுமியுடனும் மீண்டும் கலந்து விட்டார்கள். இதனாலேயே துளசியும் சங்கும் இருக்குமிடத்தில் பெருமாளும், லட்சுமியும் வாசம் செய்வதாக கூறப்படுகிறது.
உண்மையான பக்தி
கிருஷ்ண பகவான் பாமா, ருக்மணி இருவர் மீதும் சமமாக அன்பு வைத்திருந்தார். இதில் ருக்மணி கிருஷ்ணன் மீது அளவில்லாத அன்பும், ஆழமான பக்தியும் கொண்டிருந்தாள். அத்துடன் கிருஷ்ணனை தன் மனதில் வைத்து எப்போதும் பூஜித்து வந்தாள். ஆனால் பாமாவோ, விஷ்ணு தன்னை மார்பில் சுமந்திருப்பதாலும், கண்ணனுக்கு தேரோட்டியாக இருந்ததாலும், தனது திருமணத்தின் போது ஏராளமான செல்வம் கொண்டு வந்தாலும் நாரதரின் உதவியோடு கண்ணனை தனக்கே உரிமையாக்கிகொள்ள நினைத்தாள். இதற்காக கண்ணனை, துலாபார தராசு தட்டின் ஒரு புறமும், மற்றொரு தட்டில் தனது செல்வம் முழுவதையும் வைத்தாள். ஆனால் தராசு சமமாகவில்லை. அப்போது அங்கு வந்த ருக்மணி, கண்ணனுக்காக கொடுக்க தன்னிடம் ஒன்றுமில்லையே என வருந்தி, கண்ணனுக்கு பிடித்த துளசி இலை ஒன்றை தராசு தட்டில் வைத்த போது தராசு சமமாகியது. கண்ணன் புன்முறுவலுடன், நான் இப்போது யாருக்கு சொந்தமானவன் என்பது உங்களுக்கே புரிந்திருக்கும். நான், எனது என்ற அகந்தையை ஒழித்து, உண்மையான பக்தியுடன் என்னை சரணடைபவருக்கே நான் சொந்தம், என்றார். தனது அகந்தை நீங்கிய நிலையில் கண்ணனின் பாதத்தில் விழுந்து மன்னிப்பு கேட்ட பாமா, அந்த துளசி இலையை தன் தலையில் சூடிக்கொண்டாள்.
No comments:
Post a Comment