Wednesday, January 18, 2012

ஐயப்பனின் தரிசனம் கிடைக்க ...

சுவாமியே சரணம் ஐயப்பா!

கார்த்திகை மாதம் பிறந்து விட்டது. தை மாதம் வரை, எங்கும் ஐயப்ப சரணகோஷம் ஒலிக்கும். இவரது வரலாறை புதிதாக மலைக்குச் செல்லும் கன்னி சுவாமிகள் தெரிந்து செல்ல வேண்டுமல்லவா! தேவலோகத்தில் நாட்டியமாடும் ரம்பைக்கு, ஒரு மகள் இருந்தாள்; அவளது பெயர் மகிஷி. இவள் கடும் தவமிருந்து, இரண்டு ஆண்களுக்கு, அதுவும் சிவன் மற்றும் விஷ்ணுவுக்குப் பிறக்கும் மகனால் மட்டுமே அழிவு வர வேண்டுமென்ற வரம் பெற்றாள். ஆணுக்கும் ஆணுக்கும் குழந்தை பிறப்பது சாத்தியமல்ல... என்பதால், தன்னைக் கொல்ல யாருமில்லை என்று எண்ணிய மகிஷி, பல அட்டூழியங்களைச் செய்தாள்; தேவர்கள் அவஸ்தைப்பட்டனர். விஷ்ணுவிடம், இதுபற்றி முறையிட்டனர். அவர், மோகினி வடிவம் தாங்கி, சிவன் முன் வந்தார். சிவனின் ஒளிவெள்ளம் அந்தப் பெண் மீது பாய்ந்தது. அந்த ஒளிவெள்ளத்தில் தர்மசாஸ்தா அவதரித்தார். சாஸ்தாவுக்கு 14 வயது வரும் வரை, சிவலோகத்திலேயே வளர்த்தார் சிவபெருமான். சாஸ்தா, மகிஷியைக் கொன்று, அழுதை எனும் நதிக்கரையில் உடலை வீசினார். மகிழ்ந்த தேவர்கள், சாஸ்தாவுக்கு பொன்னம்பல மேடு எனும் இடத்தில், மலர்மாரி பொழிந்து, வாழ்த்தினர்.

இந்த நிகழ்ச்சியில் ரிஷி ஒருவர் பங்கேற்றார். அவர் சாஸ்தாவிடம், நீ எனக்கு மகனாகப் பிறக்க வேண்டும்... என வரம் கேட்டார். சாஸ்தாவும் அதை ஏற்று, கலியுகத்தில் அந்த ஆசை நிறைவேறும்! என்றார். கலியுகம் பிறந்ததும், அந்த ரிஷி, தஞ்சாவூரில் ஒரு பிராமணக் குடும்பத்தில் பிறந்தார். அவருக்கு விஜயன் என பெயர் சூட்டினர். முன்வினைப் பயனால், அவர் சாஸ்தாவின் பக்தராகத் திகழ்ந்தார். தனக்கு மகனாக சாஸ்தா பிறக்க வேண்டுமென பிரார்த்தித்தார். ஆனால், அப்பிறவியில் அந்த ஆசை நிறைவேறவில்லை. மறுபிறவியில் அவர் மலைநாட்டில், பந்தள மகாராஜாவாகப் பிறந்தார். இவரது ஆட்சிக்காலத்தில், உதயணன் என்பவன், கரிமலையில் தங்கி, மக்களின் பொருட்களைக் கொள்ளையடித்தான். அவனிடமிருந்து நாட்டைக் காக்க, சாஸ்தாவை மன்னர் வேண்டினார். பந்தளம் அரண்மனையில், ஜெயந்தன் என்ற பெயரில் பூசாரியாகப் பணிபுரிந்தார் சிவபெருமான். ராஜாவின் தங்கை மோகினியாக விஷ்ணு அவதரித்தார். ஒருமுறை மோகினியை உதயணன் கடத்தி விட்டான். அவளை மீட்க ஜெயந்தன் சென்றார்; அவரும் திரும்பவில்லை. தன் தங்கை இறந்திருப்பாள் எனக் கருதிய ராஜா, அவளுக்கு திவசம் செய்து விட்டார். ஆனால், ஜெயந்தன், மோகினியை மீட்டு வரும் வழியில், ஒரு துறவி அவர்களைச் சந்தித்தார்.

மோகினிக்கு ராஜா திவசம் செய்து விட்டதால், அவளை அரண்மனையில் சேர்க்க மாட்டார்கள். நீங்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டு காட்டிலேயே இருங்கள்... என்று சொல்லி விட்டார். அவர்களும் அவ்வாறே செய்தனர். அவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்தது. அப்போது, பந்தள ராஜா காட்டுக்கு வேட்டைக்காக வர இருப்பதை அறிந்த ஜெயந்தன், குழந்தையைக் காட்டில் வளர்ப்பது கஷ்டம் என்பதால், கழுத்தில் ஒரு மணியைக் கட்டி, ராஜா வரும் வழியில் போட்டு விடச் சொன்னார்; மோகினியும் அவ்வாறே செய்தாள். குழந்தை அங்குமிங்கும் புரளும் போது மணி ஒலித்தது. இதைக் கேட்ட ராஜா, குழந்தையைக் கண்டெடுத்தார். கழுத்தில் மணியுடன் பார்த்ததால், மணிகண்டன் என பெயரிட்டு, அரண்மனைக்கு எடுத்துச் சென்றார். குழந்தையில்லாத ராஜாவும், அவரது மனைவியும் மணிகண்டனை அன்புடன் வளர்த்தனர். இதன்பிறகு ராஜாவுக்கு ஒரு மகன் பிறந்தான். மணிகண்டன் இளமையில் பல சாகசங்கள் புரிந்து, புகழ்பெற்றதை விரும்பாத அமைச்சர் ஒருவர், அரசியின் மனதைக் கலைத்து, உங்கள் பிள்ளைக்கு முடிசூட மணிகண்டன் தடையாக இருப்பான். அவன் அழிய வேண்டுமானால், உங்களுக்கு வயிற்றுவலி வந்தது போல நடியுங்கள். புலிப்பால் கொண்டு வந்தால் தான் குணமாகும் என வைத்தியரைச் சொல்லச் சொல்லுங்கள்... என்றார். ராணியும் அவ்வாறே செய்தாள். மணிகண்டன் சற்றும் கலங்காமல் காட்டுக்குச் சென்றார். காட்டுவாசிகளான கடுத்தசுவாமி, கருப்பசுவாமி ஆகியோர் அவருடன் சென்றனர். இந்நேரத்தில் கொள்ளையன் உதயணன், தான் செய்த கொலைகளை காட்டில் வசித்த வாபர் என்பவர் செய்ததாகப் பழி போட்டான். ஆனால், இந்த விஜயத்தைப் பயன்படுத்தி உதயணனை ஐயப்பன் கொன்றார். வாபர் அவரது நண்பரானார். புலிப்பாலுடன் ஊர் திரும்பினார்.

ராணி கலக்கமடைந்து மன்னிப்பு கேட்டாள். பின்னர் ராஜாவிடம் சபரிமலையிலுள்ள தர்மசாஸ்தாவின் கோவிலை புதுப்பிக்க வேண்டினார் மணிகண்டன். அதற்கான ஏற்பாடுகளைச் செய்யச் சென்றவர்கள், வனவிலங்குகளிடமிருந்து தங்களைக் காத்துக் கொள்ள ஆயுதங்களுடனும், முகத்தில் வர்ணம் பூசிக்கொண்டும், கறுப்பு அல்லது நீல ஆடை அணிந்து கொண்டும் மலையேறினர். கோவிலுக்குள் ஆயுதங்களைக் கொண்டு செல்லக்கூடாது என்பதால், ஓரிடத்தில் குவித்து விட்டனர். அந்த இடம் சரங்குத்தி என்று பெயர் பெற்றது. கோவிலை நெருங்கும் நேரத்தில் பெரும் சூறாவளி ஏற்பட்டது. அப்போது மணிகண்டன் சாஸ்தாவின் சிலையில் ஐக்கியமாகி விட்டார். அவர் சன்னிதி முன் கடுத்தசுவாமியும், கருப்பசுவாமியும் காவல் நிற்க அனுமதியளித்தார். தன் முடிசூட்டுக்காக செய்யப்பட்ட நகைகளை பந்தளராஜா ஆண்டுதோறும் மகரசங்கராந்தி அன்று மலைக்கு கொண்டு வரும்படி அறிவித்தார். அவர் பந்தளத்தில் தங்கியிருந்த காலத்தில் குருகுலத்தில் பாடம் கற்றார். அப்போது குருவின் மகள் மணிகண்டனைக் காதலித்தாள். மணிகண்டன் அந்தக் காதலை ஏற்கவில்லை. தன்னைப் பார்க்க சபரிமலைக்கு எப்போது கன்னிசுவாமிகள் வரவில்லையோ அந்நாளில் அவளைத் திருமணம் செய்து கொள்வதாக வாக்களித்தார். ஆனால், அவளுக்கு தன் இருப்பிடத்தின் ஒரு பகுதியைக் கொடுத்து தங்கச் செய்தார். அவளை மாளிகைபுறத்தமன் என்றும், மஞ்சள்மாதா என்றும் அழைக்கின்றனர். மணிகண்டனை ஐயப்பன் என்றே பெரும்பாலானவர்கள் அழைக்கின்றனர். இதற்கு, தலைவன் உயர்ந்தவன் என்று பொருள். உயர்ந்த மலையிலுள்ள ஐயப்பனின் வரலாறைத் தெரிந்து கொண்டவர்கள், முறைப்படி விரதமிருந்து, கெட்ட பழக்கங்களையெல்லாம் நிரந்தரமாக கைவிட உறுதியெடுத்து, சபரிமலைக்குச் சென்று வாருங்கள்.

ஐயப்ப விரத முறை

கார்த்திகை முதல்நாள் நீராடி, பெற்றோரை வணங்க வேண்டும். குருசாமியின் கரத்தால் மாலை அணிய வேண்டும். குருசாமி மூலம் முடியாத பட்சத்தில் கோயிலுக்குச் சென்று அர்ச்சகரை குருவாக ஏற்று தட்சணை கொடுத்து சுவாமியே சரணம் ஐயப்பா! உன் தரிசனம் தடையின்றி கிடைக்க வேண்டும். இந்த விரதம் எவ்வித பிரச்னையுமின்றி முடிவதற்கு அருள்தருவாய், எனச் சொல்லி அணிந்து கொள்ள வேண்டும். அன்றுமுதல் தினமும் குளிர்ந்த நீரில் காலையும் மாலையும் நீராடி, 108 முறை ஐயப்ப சரணம் கூறி, ஐயப்பன் படத்துக்கு பூஜை செய்ய வேண்டும். இரவில் தூங்கும் போது மெத்தை, தலையணை பயன்படுத்தக்கூடாது. மெல்லிய விரிப்புகளைப் பயன்படுத்தலாம். பகலில் தூங்கக் கூடாது. பிரம்மச் சரியம் மேற்கொள்ள வேண்டும்.

அசைவ உணவு, போதைப் பொருட்கள் பழக்கம் இருந்தாலும், இனி என் வாழ்க்கையில் இதை இனி தொடவே மாட்டேன், என சங்கல்பம் (சத்தியம்) செய்ய வேண்டும். இதைச் செய்யாத பட்சத்தில் மாலையணிந்து சபரிமலை சென்றாலும், ஐயப்பன் இப்படிப்பட்டவர்களின் பிரார்த்தனையை ஏற்கவே மாட்டான். விரதகாலத்தில், பிறருடன் சண்டை சச்சரவு களிலும் ஈடுபடக்கூடாது. உரையாடும் போதும், முடிக்கும் போதும் சுவாமி சரணம் என்று கூற வேண்டும். இலையில் சாப்பிடுவதுடன், இயன்ற அளவு அன்னதானம் வழங்க வேண்டும். கன்னிசுவாமிகள் வீட்டில் கன்னி பூஜை நடத்தி, சக பக்தர்களையும், ஏழைகளையும் ஐயப்பனாகக் கருதி சித்ரான்னங்கள் (தயிர்சாதம், எலுமிச்சை சாதம், தேங்காய் சாதம், சாம்பார் சாதம், புளியோதரை போன்ற சிற்றுண்டிகள்) தானம் செய்ய வேண்டும். நெருங்கிய உறவினர் இறப்பு ஏற்பட்டால் மாலையைக் கழற்றிவிட வேண்டும். அதன்பின் விரதத்தை தொடரவோ, மலைக்குச் செல்லவோ கூடாது. பக்தர்கள் நடத்தும் ஐயப்பன் பூஜை, பஜனைகளில் கலந்து கொள்ள வேண்டும். மாலையணிந்தவர்கள் வீடு, திருமண வீடுகளில் மட்டும் உணவு அருந்தலாம். பூப்புனித நீராட்டு விழா வீட்டிற்கு செல்லக்கூடாது. மலைக்குச் செல்லும் நாட்கள் தவிர பிற நாட்களில் கடைகளில் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். தெருக்களில் விற்கும் பலகாரங்களையும் சாப்பிடக்கூடாது. சபரிமலைக்கு சென்று திரும்பிவிட்டாலும், மகர பூஜை (தை1) முடியும் வரை முந்தைய நாட்களைப் போலவே விரதம் இருக்க வேண்டும்.

மாலை அணியும் மந்திரம்

ஞானணித்ராம் சாஸ்த்ரு ணித்ராம் குருணித்ராம் நமாம் யஹம்
வனணித்ராம் சுக்த ணித்ராம் ருத்ர ணித்ராம் நமாம் யஹம்
சாந்தணித்ராம் சத்தியணித்ராம் வ்ருதுணித்ராம் நமாம் யஹம்
சபர்யாஸ்ரம சத்யேன ணித்ராம் பாது ஸதாபிமே
குருதக்ஷிணயா பூர்வம் தஸ்யா நுக்ரஹ காரிணே -
சரணாகத ணித்ராக்யம் த்வன் ணித்ராம் தாரயா

இருமுடியில் வைக்கும் பொருட்கள்

இருமுடியில் முன்முடி, பின்முடி என இரு பிரிவு உண்டு. முன்முடியில் பூஜை பொருட்களையும், பின்முடியில் பக்தருக்குரிய சமையல் மற்றும் பிற பொருட்கள் வைக்கப்பட வேண்டும். பூஜைக்கு மஞ்சள்பொடி சிறிதளவு, மஞ்சள், பன்னீர் (சிறிய பாட்டில்), தேன் (சிறிய பாட்டில்), சந்தன வில்லைகள் பத்து, குங்குமம் சிறிய பாக்கெட், விபூதி பாக்கெட், பத்தி, சாம்பிராணி, கற்பூரம், பேரீச்சை, உலர்ந்த திராட்சை (50 கிராம்), முந்திரி, (50 கிராம்), கல்கண்டு, அச்சுவெல்லம் (இரண்டு), அவல், அவல்பொரி, மிளகு, கல் உப்பு, எலுமிச்சம் பழம், வெற்றிலை பாக்கு, பாசிப்பருப்பு, சுக்கு, ஏலக்காய், காணிப்பொன் (குறைந்த விலையில் கிடைக்கும் தங்கத்தகடு), கருப்பு வளையல், திரிநூல், பெரிய தேங்காய் ஒன்று, சிறிய தேங்காய் மூன்று, பச்சரிசி அரை கிலோ, பசுநெய் -300 கிராம். இருமுடிகட்டும் போது, சுவாமியே சரணம் ஐயப்பா, பள்ளிக்கட்டு சபரிமலைக்கு, யாருடைய கட்டு, சாமியுடைய கட்டு, எப்போ பயணம், இப்போ பயணம், பகவானே- பகவதியே, பகவதியே- பகவானே, ஈஸ்வரனே- ஈஸ்வரியே, ஈஸ்வரியே-ஈஸ்வரனே, சுவாமியே.. ஐயப்பா என்ற சரண கோஷங்களை ஒருவர் சொல்ல மற்றவர்கள் பின்தொடர்ந்து சொல்ல வேண்டும். அனைவரும் கூற வேண்டும்.

ஐயப்பன் - பெயர்க்காரணம்?

ஐயப்பனின் வளர்ப்புத்தந்தை பந்தள மகாராஜா ராஜசேகரன் ஐயப்பனை பிரியும் காலம் வந்தது. மணிகண்டன் அவரிடம், நான் காட்டுக்குள் குடியிருக்க போகிறேன். என்னைக் காணவேண்டுமானால் நீங்கள் மலைகளைக் கடந்து வரவேண்டும். அது சாதாரண மலையல்ல. ஏற்ற இறக்கமும், கல்லும் முள்ளும் கொண்டதாக இருக்கும் என்றார். அப்படியானால் நான் உன்னை எப்படி காணவருவேன் என மகாராஜா கேட்டார். அதற்கு மணிகண்டன், நீங்கள் வரும்போது உங்களுக்கு ஒரு கருடன் வழிகாட்டுவான். அந்த வழிகாட்டுதலின்படி நீங்கள் எனது இடத்திற்கு வந்துவிடலாம் என அருள்பாலித்தார். ராஜாவும் சபரிமலைக்கு அடிக்கடி செல்வார். பல இடங்களில் ஏற முடியாமல் ஆங்காங்கே அமர்ந்துவிடுவார். ஐயோ! அப்பா! என அவர் அடிக்கடி சொல்வார். இந்த சொற்களே திரிந்து ஐயப்பன் என ஆகிவிட்டதாக கர்ணபரம்பரைக் கதையுண்டு. நிஜத்தில் ஐயன் என்ற சொல்லே இப்படி மாறியிருக்கிறது. ஐயன் என்றால் தலைவன். அதனால் தான் பெரியவர்களை ஐயா என மரியாதையுடன் அழைக்கிறோம். ஐயனுடன் அப்பனையும் சேர்க்கும் போது, அந்த ஐயனே நமது தந்தை என்றாகிறது. இப்போதும் ஐயப்பனுக்கு பந்தளம் அரண்மனையிலிருந்து நகைகளை எடுத்துச் செல்லும்போது, நகைப்பெட்டிகளுக்கு பாதுகாப்பாக ஒரு கருடன் வருவது விசேஷ அம்சமாகும்.

420 பவுன் தங்க அங்கி ஐயப்பனுக்கு மன்னர் சித்திரைத் திருநாள் மகாராஜாவால், ஒரு தங்க அங்கி காணிக்கையாக வழங்கப்பட்டது. இது 420 பவுன் (3.36 கிலோ) எடை கொண்டது. மண்டல பூஜையன்று இது சபரிமலை ஐயப்பனுக்கு அணிவிக்கப்படுகிறது. இந்த அங்கி கேரளாவிலுள்ள ஆரன்முளா பார்த்தசாரதி கோயிலில் இருந்து மேளதாளங்கள் முழங்க மண்டலபூஜைக்கு சிலநாட்கள் முன்னதாக சபரிமலைக்குச் புறப்படுகிறது. கோழஞ்சேரி, பத்தனம்திட்டா வந்து மலையோலப்பட்டி தேவி கோயிலில் இரவு தங்குகிறது. மறுநாள் ரானி, வடசேரிக்கரை, நிலக்கல் வழியாகப் பம்பை வருகிறது. இங்கிருந்து பெட்டியில் வைக்கப்பட்ட அந்த அங்கி தலைச்சுமடாக சன்னிதானம் கொண்டு செல்லப்படுகிறது.

வெள்ளம்குடி பூஜை

கேரள மாநிலத்தில் சபரிமலை செல்லும் கன்னி சுவாமிகளுக்கான பூஜையை வெள்ளம் குடி, அல்லது படுக்கை என்பர். வீட்டின் கிழக்குப் பாகத்தில், வெள்ளைத்துணியால் பந்தல் அமைத்து அலங்கரிப்பர். பந்தலின் கீழே மேஜையிட்டு, கணபதி, மாளிகைப்புறத்தம்மன், மலை நடைபகவதி, கருப்பசுவாமி, கடுத்தசுவாமி, வாவர்சுவாமி ஆகியோரை சந்தனம் அல்லது மஞ்சள் உருண்டை பிடித்து வைத்து, அவற்றில் அந்தந்த தெய்வங்களை ஆவாஹனம் (எழுந்தருளச்செய்தல்) செய்வர். ஐயப்பன் படம் அல்லது சிறிய விக்ரகத்தை நடுவில் வைப்பர். அவர் முன்பு நெல் பரப்பி, அதன் மேல் ஒரு வாளை வைப்பர். மேடை முன்பு ஆழி (அக்னிகுண்டம்) ஏற்றுவர். மேடை முன்பு குத்துவிளக்கு ஏற்றி, அவல், பொரி, பழம் படைப்பர். தீபாராதனை நடந்த பின் ஐயப்பன்மார்கள், அக்னிகுண்டத்தை வலம் வந்து சுவாமியே சரணம் ஐயப்பா! என்று சரண கோஷம் எழுப்புவார்கள். சில பக்தர்கள் அருள் மிகுதியால் ஆழியிலுள்ள நெருப்பைக் கையால் வாரி எறிவார்கள். நாதஸ்வரம், செண்டை வாத்தியங்களோடு பக்திப் பரவசத்தில் திளைப்பார்கள்.

அவன் பார்த்துக் கொள்வாள்!

* கடவுளைத் தேடுபவன் அவரை அடைகிறான். செல்வத்தையும், செல்வாக்கையும் தேடுபவன். அவற்றை அடைகிறான். நீ எதைத் தேடுகிறாயோ அதையே அடைவாய்.
* ஒருவனது அகங்காரம் அவனது உடல் இருக்கும் வரை அவனை விட்டு முற்றிலும் நீங்குவதில்லை. அதன் அடையாளம் சிறிதளவேனும் எப்போழுதும் தங்கியிருக்கும்.
* ஒளியை உணர்பவன் இருளையும் உணர்கிறான். பாவத்தைப் பற்றித் தெரிந்தவனுக்குப் புண்ணியமும் தெரியும். குணத்தைப் பற்றி அறிந்தவன் குற்றத்தைப் பற்றியும் அறிந்திருப்பான்.
* நம்பிக்கை கொள். கடவுளை நம்பி இரு. பின்னர் நீயாக எதையுமே செய்ய வேண்டியிருக்காது. அன்னை காளி உன் பொருட்டுத் தானே அனைத்தையும் செய்வாள்.
* இறைவனை வெளியே தேடுதல் அறியாமை. தமக்குள்ளேயே இறைவன் இருப்பதை உணர்வதே அறிவு.
* கடவுள் கற்பக மரத்தைப் போன்றவர். நீ அவரிடம் வேண்டுவது உனக்குக் கிடைக்கும் ஒவ்வொரு வரும்தான் வேண்டுவதைப் பெறலாம்.
* பாம்பின் பற்களில் விஷமிருந்தாலும் பாம்புக்கு அதனால் சிறிதும் தீங்கில்லை. அது இறப்பதுமில்லை. ஆனால், பாம்பு எதையாவது தீண்டினால் தீண்டப்பட்டதற்கு அந்த விஷம் தீங்கு செய்கிறது. எனவே, கெட்டவர்களுடன் சேராதே.
* அனைத்து உயிர்களிடமும் சமமாய்க் காட்டப்படும் அன்பு, தயை எனப்படும். இறைவன் எங்கும் நிறைந்துள்ளான் என்ற ஞானத்திலிருந்தே இந்தத் தயை உண்டாகிறது.
* மனிதன் ஒரு தலையணை உறைக்கு ஒப்பிடலாம். கருப்பு, சிவப்பு, பச்சை முதலிய பல நிறம் கொண்டவைகளாக இருக்கலாம். அவை எல்லாவற்றுக்குள்ளும் இருப்பதும் ஒரே பஞ்சு தான். அதுபோல், மனிதருள் சிலர் அழகாகவும், நல்லவர்களாகவும், கெட்டவர்களாகவும் இருக்கின்றனர். ஆனால், இவர்கள் அனைவருக்குள்ளும் இறைவன் மட்டுமே உறைகிறான்.
* ஒருவன் சாப்பிட்ட உணவை அவன் விடும் ஏப்பத்தின் மூலம் தெரிந்து கொள்ள முடியும். அதுபோல், ஒரு ஞானியை நீ அணுகினால் அவர் உடனே கடவுளைப் பற்றிய விஷயங்களைப் பேச ஆரம்பித்து விடுவார். ஆனால், உலகப்பற்றுள்ளவனோ, உலக விவகாரங்களைப் பற்றியே பேசுவான்.
* செம்பொன்னிற்கும், பித்தளைக்குமுள்ள வேறுபாடு உரைகல்லில் உரைப்பதால் தெரியவரும். அதுபோல நல்லவரையும், அல்லாதவரையும் அவரவர்களுடைய பக்தியினால் அறிய முடியும்.
* ஒருவனுக்கு உண்மைப் பக்தி தோன்றி, அவன் சாதனைகள் செய்யவிரும்பினால் பகவான் நிச்சயமாக அவனுக்குத் தகுந்த குரு ஒருவனை ஏற்படுத்துவார். அதைப்பற்றிய கவலையே வேண்டியதில்லை.
*விவேகமும் வைராக்கியமும் இல்லாமல், வேதநூல்களைக் கற்பதால் எந்தப்பயனுமில்லை.
* உலக ஆசைகளின் நடுவில் இருந்து கொண்டே சாதனைகள் செய்து மனத்தை அடக்கி ஆள்பவனே உண்மை வீரன்.
* மனிதனுடைய மனம் தராசுக்கோல் போன்றது. இந்த மனத்தராசின் இருதட்டுகளில் இரண்டு வித எடைகள் உள்ளன. உலகத்தின் மீதும், பட்டம், பெருமை இவற்றின் மீதும் உள்ள பற்று ஒன்று. மற்றொன்று அறிவு, பற்றின்மை, கடவுளிடம் அன்பு முதலியவை.
* வெட்கம், வெறுப்பு, அச்சம் இவை மூன்றும் நம்மிடம் உள்ள வரையில் நமக்கு ஈசுவர தரிசனம் கிடைக்காது.
* கடவுளை அடைவதற்குப் பாதைகள் பல உள்ளன. ஒவ்வொரு தரிசனமும் ஒரு மார்க்கமே ஆகும்.


ஜோதி வடிவில் ஐயப்பன்

இறைவனுக்கென்று உருவவழிபாடு வந்தது பிற்காலத்தில் தான் இருக்க முடியும். ஏனெனில், மனிதன் தோன்றிய காலத்தில் உலோகங்கள் இருந்திருக்க வாய்ப்பில்லை. கற்களில் துவங்கிய சிற்பக்கலை படிப்படியாக வளர்ந்து, பிற்காலத்தில் ஐம்பொன் வரை சென்றது.எனவே மனிதன் துவக்க காலத்தில் ஒளியையே தெய்வமாக வழிபட்டுள்ளான். சூரிய வழிபாடு முதலில் தோன்றியது. நம்மை மீறிய ஒரு சக்தி இருக்கிறது என மனிதன் பகுத்தறிந்த போது ஜோதி வடிவாக அவன் இறைவனைக் கண்டான். அதனால் தான் வள்ளலார் இறைவனை அருட்பெருஞ்ஜோதி என அழைத்தார். இறைவன் திருவண்ணாமலையில் ஜோதியாய் காட்சி அளிக்கிறார். கார்த்திகை அன்று ஏற்றப்படும் தீபம் ஆண்டு முழுவதும் எரிவது அதனால் தான். இதேபோல் தான் ஐயப்பசுவாமியும் ஜோதிவடிவாக, காந்தமலையிலுள்ள பொன்னம்பலமேட்டில் மகரசங்கராந்தியன்று ஜோதி வடிவாய் காட்சி அளிக்கிறார்.

ஐயப்ப சுவாமி மெனு

சபரிமலையில் ஐயப்ப சுவாமிக்கு அதிகாலை பூஜையில் அஷ்டாபிஷேகம் நடத்தப்படும். அதாவது, விபூதி, பால், தேன், பஞ்சாமிர்தம், இளநீர், சந்தனம், பன்னீர், தூயநீர் போன்ற எட்டு பொருட்களால் அபிஷேகம் செய்யப்படும். திருமதுரம் (பழம் மற்றும் தேன், சர்க்கரை சேர்த்த கலவை) நைவேத்யம் செய்யப்படும். பின்னர் நெய்யபிஷேகம் நடக்கும். மதிய பூஜைக்கு இடித்துப் பிழிந்தெடுத்த தேங்காய்ப்பாலுடன் கதலிப்பழம், சர்க்கரை, சம்பா பச்சரிசி, சுக்கு, நெய் போன்றவை சேர்த்து, ஐயப்பனுக்கு பாயாசம் தயாரிக்கப்படுகிறது. இதை மகா நைவேத்யம் என்பர். நண்பகலுக்கு முன் 15 தீபாராதனைகள் நடக்கும். தீபாராதனையின் போது பச்சரிசி சாதம், இரவு பூஜைக்கு அப்பம், பானகம், பச்சரிசி சாதம் ஆகியவை நைவேத்யமாக படைக்கப்படுகிறது.

இறை வணக்கம்

கற்பூர ஜோதி பிரியனே சரணம் ஐயப்பா!
காந்தமலை ஜோதியே சரணம் ஐயப்பா!
தேவர்கள் பூஜிதனே சரணம் ஐயப்பா!
சர்வரோக நிவாரணனே
சரணம் ஐயப்பா!

பொருள்: கற்பூர ஆழி தீபத்தை விரும்பி ஏற்கும் ஐயப்ப சுவாமியை சரணடைகிறேன். காந்தமலையில் ஜோதியாகக் காட்சி தரும் மணிகண்டனின் பாதங்களைப் பணிகிறேன். தேவர்கள் பூஜித்த கண்கண்ட தெய்வத்தை சரணாகதி அடைகிறேன். அனைத்து நோய்களையும் தீர்த்து நல்வாழ்வு தரும் ஐயப்ப சுவாமியின் திருவடிகளைக் கெட்டியாகப் பிடித்துக் கொள்கிறேன்.

காலை நேர ஸ்லோகம்

இதம் ஆஜ்யம், கமமண்டல
கால மகரகால பரஹமசியவ்ர
தேன ஹரிஹர புத்ர தர்ம
சாஸ்த்ர பிமஷதர்த்தம் பூரயாகி

பொருள்: ஐயப்ப சுவாமியே! மாலை அணிந்து சபரிமலைக்கு செல்லும்
சுவாமிமார்களான நாங்கள் அறிந்தும் அறியாமலும்
ஏதாவது தவறு செய்திருந்தால், அதை மன்னித்து,
பதினெட்டுப் படிகளையும் ஏறச்செய்து, நல்ல தரிசனத்தை அளிக்க வேண்டும்.

அறுபடை வீடு கொண்ட ஐயப்பன்

முருகப்பெருமானுக்கு அறுபடை வீடுகள் உள்ளது போல் ஐயப்பசுவாமிக்கும் அறுபடை வீடுகள் உண்டு. அவை சபரிமலை, அச்சன்கோவில், ஆரியங்காவு, குளத்துப்புழா, எருமேலி, பந்தளம்.

கோயில் பிரசாதங்கள்

சபரிமலை கோயிலில் அரவணை மற்றும் அப்பம் பிரசாதமாக வழங்கப்படுகின்றன. இவை அரிசி, நெய், சர்க்கரை போன்ற பொருட்களால் உருவாக்கப்படுகின்றன. சபரிமலையில் இந்தப் பிரசாதத்தை செய்வதற்கான அரிசி செட்டிக்குளங்கரை தேவி கோயிலில் இருந்து பெறப்படுகிறது. திருவாங்கூர் தேவஸ்வம் போர்டின் கீழ் உள்ள கோயில்களில் இக்கோயில் இரண்டாவது மிகப்பெரிய கோயிலாகும். மாவேலிக்கரா என்ற இடத்தில் இந்தக் கோயில் உள்ளது.

ஹரிவராசனம்

இரவில் கோயிலின் நடை சாத்தப்படுவதற்கு முன்பு பாடப்படுவது ஹரிவராசனம். இறைவன் உறங்கச் செல்வதற்கு முன் இசைக்கப்படும் தாலாட்டுப் பாடலாக ஸ்ரீனிவாச ஐயர் அவர்கள், கோயிலில், சுவாமி ஐயப்பனின் சன்னதியில் நின்று கொண்டு, அத்தாழ பூஜைக்குப் பிறகு, இந்தப் பாடலை பாடி வந்தார். சுவாமி விமொசானனந்தா அவர்களின் முயற்சியால், கோயிலின் தந்திரி மற்றும் மேல்சாந்தி அவர்கள், இப்பாடலை ஒரு தாலாட்டுப்பாடலாக ஏற்றுக்கொண்டனர். இந்தப் பாடல் 352 எழுத்துக்கள், 108 சொற்கள் மற்றும் 32 வரிகள் கொண்டதாகும். அநேக புகழ் பெற்ற பாடகர்களால் பாடப்பெற்ற இந்தப் பாடலின் பதிப்புகள் பல இருந்தாலும் கோயில் நடையில் கே.ஜே.யேசுதாஸ் பாடிய பாடலே ஒலிபரப்பப்படுகின்றது.

நெய்யபிஷேகம்

சபரி மலையில் மேற்கொள்ளப்பட்டு வரும் முதன்மை சடங்கானது, பக்தர்கள் அவர்களுடைய தலையில் சுமந்து வரும் பள்ளிக்கட்டு அல்லது இருமுடியில் புனிதமான நெய்யைக் கொண்டு சுவாமி ஐயப்பனின் மூல விக்ரகத்தின்மீது புரியப்படும் அபிஷேகமே ஆகும். ஜீவாத்மா மற்றும் பரமாத்மாவின் புனித சேர்க்கையைக் குறிக்கும் தத்துவமாக இது கருதப்படுகிறது. முதல் முறையாக பயணம் மேற்கொள்ளும் பக்தன்மார்கள் (கன்னி ஐயன்மார்கள்) குங்குமப்பூ நிறம் கொண்ட இருமுடியை சுமந்துவர வேண்டும்; இதர புனிதப்பயணம் மேற்கொள்வோர் கருப்பு அல்லது நீல வண்ணத்திலான இருமுடிகளை பயன்படுத்துவார்கள்.

அஹம் பிரம்மாஸ்மி மற்றும் தத்வமசி

இந்தக் கோயிலுக்கு புனிதப்பயணம் புரிந்து வரும் பக்தர்களுக்குக் கிடைக்கும் இணையற்ற அறிவு, அகம் பிரம்மாஸ்மி, தத் த்வம் அஸி எனும் தத்துவம். அதாவது, "நான் கடவுள், நீயும் அதுவே, "நீ எதை நாடி வந்தாயோ அது உன்னுள்ளேயே இருக்கிறது என்பதற்கான ஞானமே. இதனால்தான் புனிதப்பயணம் மேற்கொள்ளும் ஒவ்வொருவரும் ஒருவரை ஒருவர் சுவாமி என்று பக்தியுடன் அழைக்கிறார்கள்.

மாலை கழற்றும் போது சொல்லும் மந்திரம்

அபூர்வ மசால ரோஹி
திவ்ய தரிசன காரிணே
சாஸ்த்ரு முத்ராத் மகாதேவ
தேஹிமே விரத விமோசனம்.

No comments:

Post a Comment