Wednesday, January 18, 2012

தீபாவளியை கொண்டாடுவது எப்படி?

இறைவன் எங்கும் எதிலும் இருப்பவன் என்ற தத்துவத்தை முதலில் உணர்ந்தவர்கள், ஞானிகளோ.. பெரும் முனிவர்களோ அல்ல.. பகவான் மேல் எளிமையான பக்தி கொண்டிருந்த கோபிகைகளும், கோபாலர்களும் தான். எனவே தான் ஒவ்வொரு கோபிகைக்கும் ஒவ்வொரு கண்ணன் தெரிந்தான். பார்க்கும் பொருள் எல்லாவற்றிலும் இருப்பவன் அவனே என்ற தத்துவம். காணாமல் போன கோபாலர்களுக்காக அவர்கள் வடிவில் ஒவ்வொரு வீட்டிற்கும் கிருஷ்ணனே சென்றான். இது, எல்லாம் அவன் வடிவமே என்ற அரும் பொருள். இந்த இரண்டும் அவர்களுக்கு அல்லவா கிடைத்தது. அதனால்தான் சுகபிரம்ம ரிஷி, பாகவதத்தில் வரும் கோபிகைகளின் கீதத்தினை மிகமிக உயர்ந்தது என்கிறார். அதை பரீட்ஷத் மகாராஜாவுக்கு உபதேசமும் செய்தார். மகரிஷிகளும், மகான்களும் போற்றியதும்; மகத்தான பலனைத் தரக்கூடியதுமான அந்த கோபிகா கீதம், எளிய தமிழ் விளக்கத்துடன் தரப்பட்டுள்ளது. கங்காதீரத்தில் சுகபிரம்ம ரிஷி உபதேசித்த இந்த கோபிகா கீதத்தை, தீபாவளிமுதல் படிக்கத் தொடங்கினால், கிருஷ்ண பகவான் அனைத்து மங்களங்களையும் அள்ளித் தருவார் என்பது உறுதி !

கோபிகா கீதம் (பூர்வ ஸ்லோகம்)

1. தன் மனஸ்காஸ்ததாலாபாஸ் தத்விசேஷ்டாஸ் ததாமிகா
தத்குணானேவ காயந்த்யோ நாத்மா காராணிஸ் ஸ்மரு:

பொருள்: கோபிகைகள் ஸ்ரீ கிருஷ்ணனிடத்தில் செலுத்திய மனமுடையவர்களாய், ஸ்ரீகிருஷ்ணனைப்பற்றியே பேசிக்கொண்டிருப்பவர்களாகவும், கிருஷ்ணன் தங்களுடனிருப்பது போலவே பாவனையாக நடிக்கின்றவர்களாகவும், அவருடைய மேலான தகுதியை தாங்களும் அடைந்துவிட்டவர்கள் போலும் கருதி, அவருடைய குணங்களையே பாடிக்கொண்டு தங்களது சரீரங்களையும் வீடுகளையுமேகூட மறந்து விட்டனர். (கோபியர்கள் தம்மை மறந்தனர். தம் நாமம் மறந்தனர். வீட்டை மறந்தனர். கண்ணனாகவே மாறினர்)

2. புன: புலினமாகத்ய காளிந்த்யா: கிருஷ்ணபாவனா
ஸமவேதா ஜகு: கிருஷ்ணம் ததா கமன காங்க்ஷிதா

பொருள்: மறுபடியும் யமுனையாற்றின் மணற்குன்றுக்கு வந்து மறைந்துபோன ஸ்ரீ கிருஷ்ணனின் வரவில் ஆசை கொண்டவர்களாய், கிருஷ்ணனை தியானம் செய்கின்றவர்களாய் கோபியர்கள் அனைவரும் ஒன்றுகூடி ஒரு மனதாய் கிருஷ்ணனை கானம் செய்ய ஆரம்பித்தனர்.

ஸ்ரீகோபிகா கீதம் (ஸ்ரீபாகவதம் 10வது ஸ்காந்தத்தில் கூறப்படுவது)

3. ஜயதிதே அதிகம் கிருஷ்ண ஜன்மனாவ்ரஜ:
ஸ்ரயத இந்திரா கிருஷ்ண ஸஸ்வதத்ர ஹி
தயித த்ருஸ்யதாம் கிருஷ்ண திக்ஷீதாவகா
த்வயித்ருதாஸவ: கிருஷ்ணத்வாம விசின்வதே

பொருள்: ஓ கிருஷ்ணா! தாங்கள் இங்கு பிறந்ததால் ஸ்ரீ மகாலட்சுமி எங்களுடைய இந்த இடைச்சேரியில் நித்யவாசம் செய்கிறாள். இந்த கோகுலம் வைகுண்டத்தைவிட அதிகமாக ஜொலிக்கிறது. உம்மிடம் உயிரை வைத்து நானா திசைகளிலும் தேடிக் கொண்டிருக்கும் எங்களைப் பார்க்க வேண்டும்.

4. சரதுதாஸயே கிருஷ்ண ஸாதுஜாதஸத்
ஸரஸிஜோதா க்ருஷ்ண ஸ்ரீமுஷா த்ருஸா:
ஸுரதநாத தே கிருஷ்ண அஸுல்க தாஸிகா
வரத நிக்நதோ க்ருஷ்ண கே ஹகிம்வத:

பொருள்: சம்போக பதியான ஸ்ரீகிருஷ்ணா, சரத்காலத்து ஓடையில் தாமரைப் பூக்கள் அழகாக மலர்ந்துள்ளன. அந்த மலரின் நடுவிலுள்ள ஸ்ரீயை (லட்சுமியை) திருட்டுத்தனமாக நோக்குகிறாய். அதே கண்களினால் சம்பளமில்லாத வேலைக்காரிகளான எங்களைக் கொல்வதானது வதமல்லவா கிருஷ்ணா? (சுல்கம்-சம்பளம், அசுல்கம்-சம்பளமில்லாத)

5. விஷஜலாப்யயாத் கிருஷ்ணவ்யாள ராக்ஷஸாத
வர்ஷமாருதாத் க்ருஷ்ண வைத்யு தானலாத்
வ்ருஷமயாத் மஜாத் க்ருஷ்ண விஸ்வதோ பயாத்
ருஷப தே லயம் க்ருஷ்ண ரக்ஷிதா முஹு

பொருள்: சிரேஷ்டரான ஹே கிருஷ்ணா! காளிங்கன் என்ற கொடுமையான விஷப் பாம்பினால் மரணமடையாமல் எங்களைக் காத்தாய். மழை, காற்று, இடி ஆகியவற்றிலிருந்தும் காப்பாற்றினாய். அகாசுரன், அரிஷ்டாசுரன், மயன், வ்யோமாசுரன் ஆகியோரிடத்திலிருந்தும், எல்லாவிதமான பயத்திலிருந்தும் எங்களை அடிக்கடி காப்பாற்றிய நீ எங்களைக் கைவிட்டு விடாதே என்று பிரார்த்திக்கிறோம்.

6. நகலு கோபிகா க்ருஷ்ண நந்தனோ பவான்
அகில தேஹினாம் க்ருஷ்ண அந்தராத்மத்ருக்
விகள ஸார்த்திதோ க்ருஷ்ண விஸ்வகுப்தயே
ஸக உதேயிவான் க்ருஷ்ண ஸாத்வதாம் குலே

பொருள்: ஹே கிருஷ்ணா! நீர் இடைச்சாதியான யசோதையின் பிள்ளை அல்ல! (தேவரஹஸ்யம் சாதாரண பக்தைகளின் பரப்ரம்ம மனதுக்குத் தோன்றியிருக்கிறது.) எல்லா ஜீவன்களுக்கும் உள்ளிருக்கும் அந்தர்யாமி நீங்கள். பிரும்மாவினால் பிரார்த்திக்கப்பட்டு உலகைக் காத்து ரட்சிப்பதற்காக யதுகுலத்தில் வந்த ஏ தோழனே ! நீர் அவதரித்ததே எங்களுக்காகத்தான்.

7. விரசிதாபயம் க்ருஷ்ண வ்ருஷ்ணிதுர்ய தே
சரணமீயுஷாம் க்ருஷ்ண ஸம்ஸ்ருதேர் பயாத்
கரஸரோருஹம் க்ருஷ்ண காந்த காமதம்
ஸிரஸி தேஹி ந க்ருஷ்ண ஸ்ரீகரக்ரஹம்

பொருள்: ஹே கிருஷ்ணா, ஹே காந்தா! உமது கரங்கள் சாதாரணமானவையல்ல. உம்முடைய பாதத்தில் சம்சார பயத்தால் சரணமடைந்துவிட்டவர்களுக்கு அபயமளிப்பவை அவை. அவர்கள் கோரியதை வரமாக அளிப்பவையும் அவையே. ஸ்ரீமகாலட்சுமியின் கரங்களைப் பிடிப்பவையான அந்தத் தாமரை போன்ற கையை என்னுடைய சிரசில் வைக்க வேண்டும்.

8. வ்ரஜ ஜனார்திஹன் க்ருஷ்ண வீரயோஷிதாம்
நிஜஜனஸ்மய க்ருஷ்ண த்வம் ஸநஸ்மித
பஜஸகேபவத் க்ருஷ்ண கிங்கரி: ஸ்மநோ
ஜலருஹானனம் க்ருஷ்ண சாரு தர்சய

பொருள்: கோகுலவாசிகளின் அனைத்து மனக்கவலைகளையும் போக்கும் வீரனும் நீயே, தோழனும் நீயே! சொந்த ஜனங்களுக்குள் எவருக்கேனும் தங்களைப் பற்றி கொஞ்சம் கர்வம் தோன்றினால்கூட, உன் புன்முறுவலைக் கண்டால் அந்த கர்வம் அழிந்துவிடும். உமது வேலைக்காரிகளான எங்களிடம் நீ வரவேண்டும். பத்மம் போன்ற அழகிய முகத்தை பெண்களான எங்களுக்கே முதலில் காண்பிக்க வேண்டும். கிருஷ்ணரைத்தவிர மற்றவர்கள் யாவரும் பெண்களே என்பது கோபியர் எண்ணம். ஸ்ரீ கிருஷ்ணனே புருசோஷத்தமன்.

9. ப்ரணததேஹினாம் க்ருஷ்ண பாபகர்சனம்
த்ருணசாரனுகம் க்ருஷ்ண ஸ்ரீநிகேதனம்
பணிபணார்பிதம் க்ருஷ்ண தேபதாம்புஜம்
க்ருணுகுசேஷு ந: க்ருஷ்ண க்ருந்திஹ்ருச்சயம்

பொருள்: உன்னுடைய பாதங்கள் சாதாரணமானவையா என்ன? அதைப் பிடித்து நமஸ்காரம் செய்பவர் எந்த குலத்தவாரக இருந்தாலும் சரி, அவனை மன்னித்து ஏற்றுக் கொள்வாய். அது பசுக்களுடன் துணைபோகும் மகாலட்சுமியின் இருப்பிடம். காளீயனின் சிரசின் மேல் நின்றவை உங்கள் பாதங்கள் எங்கள் மனத்தை ஆக்ரமித்துக் கொள்ள வேண்டும்.

10. மதுரயா கிரா க்ருஷ்ண வல்குவாக்யயா
புதமனோக்ஞ்யா க்ருஷ்ண புஷ்கரேக்ஷண
விதிகரீரிமா: க்ருஷ்ண வீரமுஹ்யதீ :
அதரசீதுனா க்ருஷ்ண ப்யாயஸ்வந:

பொருள்: செந்தாமரைக்கண்ணா! ஹே வீரா! உம்முடைய இனிமையான வார்த்தைகள், அமுத மொழிகளினால் வித்வான்களே தங்கள் மனத்தை இழந்து உம்பால் ஈர்க்கப்படுகின்றனர். அதேபோல் உமது வார்த்தைகளினால் வேலைக்காரிகளான நாங்களும் தன் வயமிழந்து தவிக்கின்றோம். எங்களையும் திருப்தி செய்வீர்களா?

11. தவகதாம்ருதம் க்ருஷ்ண தப்தஜீவனம்
கவிபிரீடிதம் கிருஷ்ண கல்மஷாபஹம்
ஸ்ரவண மங்களம் கிருஷ்ண ஸ்ரீமதாததம்
புவிக்ருணந்தி தே க்ருஷ்ண பூரிதா ஜனா:

பொருள்: ஹே கிருஷ்ணா, உம்முடைய பிரிவால் நாங்கள் இறந்ருப்போம். ஆனால் மகான்கள் உன் கதாம்ருதத்தைக் கூறி எங்களைப் பிழைக்க வைத்துவிட்டார்கள். தாபத்ரயம் அடைந்தவர்களை உயிர்ப்பிப்பதும்; வியாசர், சுகர் போன்றவர்களால் கொண்டாடப்பட்டதும், ஆசையால் ஏற்படக்கூடிய அல்லல்களைப் போக்கடிக்கக்கூடியதும், கேட்பதாலேயே <உடனே மங்களத்தை அளிக்கக்கூடியதும், அஷ்ட ஐஸ்வர்யங்களையும் கொடுக்கக்கூடியதுமான உமது கதையாகிய அமிர்தத்தை எவர் சொல்கிறார்களோ அல்லது கேட்கிறார்களோ அவர்கள் பலப்பல பிறவிகளில் வெகுவாக தானங்கள் செய்திருக்க வேண்டும்.

12. ப்ரஹஸிதம் ப்ரிய க்ருஷ்ண ப்ரேம வீக்ஷணம்
விஹரணம் சதே க்ருஷ்ண த்யான மங்களம்
ரஹஸிஸம் விதோ க்ருஷ்ணயா ஹ்ருத்ஸ்ப்ருஙஹா
குஹக கோமள க்ருஷ்ண ÷க்ஷஸயந்திஹா

பொருள்: ஹே கிருஷ்ணா! உம்முடைய புன்முறுவலையும் அன்பும் கருணையும் நிரம்பிய பார்வையையும் சிந்தித்தால் அது மங்களத்தைத் தரும். அந்த விளையாட்டையும், ரஹஸ்ய சமிக்ஞை நிறைந்த பார்வையையும் நினைப்பதாலேயே எங்கள் உள்ளத்தையெல்லாம் வற்றச் செய்து விடுகிறாயே!

13. சலஸியத் வ்ரஜாத் க்ருஷ்ண சாரயன் பசூன்
நளின சுந்தரம் க்ருஷ்ண நாத தே பதம்
சிலத்ருணாங்குரை: க்ருஷ்ண ஸுதத்திந:
கலிலதாம் மன: க்ருஷ்ண காந்த கச்ச தீ

பொருள்: ஹே நாதா! எப்பொழுது கோகுலத்திலிருந்து பசுக்களை ஓட்டிக் கொண்டு நீங்கள் புறப்படுகிறீர்களோ, அப்போதே தாமரை போன்ற தங்களது அழகிய பாதம் சிறுகற்களாலும் புற்களின் சிறுநுனிகளாலும் குத்தப்படுமேயென்று எங்கள் மனம் கலங்கத் தொடங்கிவிடுகிறது.

14. தினபரிக்ஷயே க்ருஷ்ண நீலகுந்தலை:
வனருஹானனம் க்ருஷ்ண பிப்ரதாவ்ருதம்
கனரஜஸ்வலம் க்ருஷ்ண தர்சயன்முஹீ
மனஸிந: ஸ்மரம் க்ருஷ்ண வீர யச்சஸி

பொருள்: மாலை வேலைகளில் கருத்த கேசத்தின் முன் நெற்றிக்குழல்கள் சூழ நீவிர் வரும்போது, உமது முகத்தில் பாலாடைக் கட்டிகளின் தூள்கள் மறைந்து மறைந்து காணப்படுகின்றன. (ஏற்கெனவே பால் போன்ற முகத்தில் பாலாடைக்கட்டிகளின் துகள்கள் ஒட்டிக் கொண்டிருப்பதால் முகம் மேலும் பிரகாசமடைகிறது. அதன் பின்னணியில் முன்நெற்றிக் கருங்குழல்கள் மேலும் ஒளியை உமிழ்கின்றன.) அந்த மிருதுவான தாமரை முகத்தை எங்களுக்கு அடிக்கடி காட்டுவதன் மூலம் எங்கள் உள்ளத்தில் கிளர்ச்சியைத் தூண்டுகிறீர்கள்.

15. ப்ரணத காமதம் க்ருஷ்ண பத்மஜார்ச்சிதம்
தரணி மண்டனம் க்ருஷ்ண த்யேயமாபத்
சரண பங்கஜம் கிருஷ்ண சந்த
ரமண ந: ஸ்தனேஷு க்ருஷ்ண அர்ப்பயாதீஹன்

பொருள்: மனோவியாதியைப் போக்கும் ரமணா! பிரம்மனால் பூஜிக்கப்பட்டதும், ஆபத்துக்காலத்தில் அவசியம் தியானம் செய்ய வேண்டியதும், நினைத்த மாத்திரத்திலேயே ஆபத்தைப் போக்கக்கூடியதும், கேட்டவுடன் கிடைக்க அருள்பாலிப்பதுமான உமது பாத சரணங்களை எங்கள் மார்பில் (நெஞ்சில்) வைக்க வேண்டும்.

16. ஸுரத வர்த்தனம் க்ருஷ்ண ஸோக நாசனம்
ஸ்வரித வேணுனா க்ருஷ்ண ஸுஷ்ட்டு சும்பிதம்
இதாராகவி க்ருஷ்ண ஸ்மரணம் ந்ருணாம்
விதாவீரந: க்ருஷ்ண தே அதராம்ருதம்

பொருள்: ஹே வீரா! காமத்தை விருத்தி செய்வதும், சோகத்தை அழிப்பதும், இசைக்கும் குழலால் நன்கு முத்தமிடப்படுவதும், மனிதர்களின் பிற ஆசைகளை அறவே செய்வதுமான உமது இதழ்ச் சுவையை அளித்திட வேண்டும்.

17. அடதி யத் பவான் க்ருஷ்ண அன்ஹி கானனம்
த்ருடிர்யுகாயதே க்ருஷ்ண த்வாம பஸ்யதாம்
குடிலகுந்தலம் க்ருஷ்ண ஸ்ரீமுகம் ச தே
ஜட உதீக்ஷதாம் க்ருஷ்ண பக்ஷ்மக்ருத் த்ருஸாம்

பொருள்: எப்பொழுது நீர் பிருந்தாவனம் குறித்துக் கிளம்புகிறீர்களோ, அப்பொழுதே உம்மைப் பார்க்காத பிராணிகளுக்கு அரை விநாடி கூட ஒரு யுகமாக நகர்கிறது. பிறகு மாலைவேளைகளில் கண்டபடி கலைக்கப்பட்ட நெற்றி மயிர்களுடன் கூடியிருக்கும் உமது திருமுகத்தைப் பார்க்கும்போது அதைப் பார்த்துக் கொண்டேயிருக்க வேண்டுமென்று தோன்றுகிறது. அப்போது உம்மைப் பார்க்கத் தடையாக இருக்கும் இமைகளைப் படைத்த பிரும்மனே ஒரு ஜடமாக உணர்ச்சியற்ற மரமாகத் தென்படுகிறார். (கண்ணைக் காக்கும் இமை கூட அநாவசியமாகிவிடுகிறது).

18. பதிஸுதான்வய க்ருஷ்ண ப்ராத்ரு பாந்தவான்
அதிவிலங்க்ய தே க்ருஷ்ண அந்த்யச்யுதா கதா
கதிவிதஸ்தவோத் க்ருஷ்ணகீத மோஹிதா:
கிதவ யோக்ஷித: க்ருஷ்ண கஸ்த்ய ஜேந்நிஸி

பொருள்: ஹே அச்சுதா! கணவன், குழந்தை, வம்சம், உடன்பிறப்புகள், உறவினர்கள் என்று அனைவரையும் மீறி, நற்கதி உன்னிடம்தான் கிடைக்குமென்று ஓடி வந்துவிட்டோம். உமது வேணுகானத்தால் வசீகரிக்கப்பட்டு மோகத்தால் வாடும் பெண்களை இரவில் எவன் கைவிடுவான்.

19. ரஹஸி ஸம்விதம் க்ருஷ்ண ஹ்ருச்சயோதயம்
ப்ரஹஸிதானனம் க்ருஷ்ண ப்ரேம வீக்ஷணம்
ப்ருஹது: ஸ்ரியோ க்ருஷ்ண வீக்ஷ்யதாம தே
முஹுரதிஸ்ப்ருஹா க்ருஷ்ண முஹ்யதே மன:

பொருள்: ஏகாந்தத்தில் உமது சங்கேத வார்த்தைகள் காமத்தைக் கிளரும். உமது முறுவல் பூத்த முகம், பிரியமான பார்வை, மகாலட்சுமிக்கு இருப்பிடமான உமது பரந்த மார்பு-இதையெல்லாம் நினைத்து நினைத்து எங்கள் மனமானது அதிக ஆசை கொண்டு அடிக்கடி மோகமடைகிறது.

20. வ்ரஜவநௌகஸாம் க்ருஷ்ண வ்யங்தி ரங்கதே
வ்ருஜினஹந்த்ரயவம் க்ருஷ்ண விஸ்வமங்களம்
த்யஜ மனாக்ச ந: கிருஷ்ண த்வத் ஸ்ப்ருஹாத்மனாம்
ஸ்வஜனஹ்ருத்ருஜாம் க்ருஷ்ண யந்நிஷீதனம்

பொருள்: ஹே அங்கா, உன் உருவத்தைப் பார்த்த உடனேயே கோகுலத்தில் உள்ள பிராணிகளின் அனைத்து பாவங்களும் நசித்துப் போகின்றன. உலகுக்கே மங்களம் பெருக்கெடுக்கின்றன. எங்களுடைய ஹ்ருதய ரோகங்களுக்கு நிவிருத்தியைத் தருகின்றது எதுவோ, அதைக் கொஞ்சம் தருவீராக. (அதிக பிரேமையினால் அழுதுகொண்டே சொல்கின்றனர்)

21. யத்தே ஸுஜாத சரணாம்புருஹம் ஸ்தனேஷு
பீதா சனை: ப்ரிய ததீமஹி கர்கசேஷு
தேனாடவீமடஸி தத்வ்யத்ததே ந கிம்ஸ்வித்
கூர்பாதிபிர் ப்ரமதி தீர்பவதாயுஷாம்

பொருள்: எங்கள் நெஞ்சில் உன்பாதம் பட்டால் நோகுமென்று நாங்கள் பயப்படுகிறோம். அத்தகைய கால்கள் காட்டில் சுற்றினால் சின்ன கற்களினால் அந்தச் சரணம் நோகாதோ என்று எங்கள் புத்தியே பேதலிக்கிறது.

உத்தர ஸ்லோகம்

22. இதிகோப்ய: ப்ரகாயந்த்ய ப்ரலபந்த்யஸ்ச சித்ரதா
ருருது ஸுஸ்வரம் ராஜன் க்ருஷ்ண தர்ஸன லாலஸா

பொருள்: ஓ ராஜன் என்று பரீட்சித்து மகாராஜனை அழைத்த சுக பிரும்மரிஷி மேலும் சொன்னார். இம்மாதிரி கோபாலனைக் காணவேண்டுமென்ற ஆவலுடன் உரத்த குரலில் விசித்திரமாக புலம்பி அழுதனர்.

23. தாஸாமவிர்பூச்சௌரி ஸ்மயமான முகாம்புஜ:
பீதாம்பரதா ச்ரக்வி ஸாக்ஷõன் மன்மத மன்மத:

பொருள்: மன்மதனே ஆசைப்படும் மாறனான கோபாலன் பீதாம்பரம் தரித்து, புஷ்ப மாலைகள் மார்பில் தவழ, அந்த கோபிகைகளின் முன் ஆவிர்பவித்தார்.

24. தம்விலோக்யாகதம் பிரேஷ்டம் ப்ரீத்யுத்புல்ல த்ரு ஸோ அபலா
உத்தஸ்த்துர்யுகபத் ஸர்வாஸ்தன்வ: ப்ராணமிவாகத்

பொருள்: அமர்ந்துகொண்டே கானம் செய்த கோபிகைளை ஆவிர்பவித்த அந்த கோபாலனைக் கண்டவுடன் மீள உயிர்பெற்றவர்கள் போல துள்ளி எழுந்தார்கள் கோபியர். அவர்களுக்கு யாதொரு பிணியும் வராது என்றும் சகல செல்வமும் சேரும் என்றும் ஆசியளித்தார் ஆனந்த கிருஷ்ணன்.

கங்கா ஸ்நான தத்துவம்

தீபாவளியன்று புத்தாடை, பட்டாசு, பலகாரங்கள் எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம் கங்கா ஸ்நானம். எண்ணெய் தேய்த்து குளிப்பதற்கு கங்கா ஸ்நானம் என்ற பெயர் எப்படி வந்தது தெரியுமா? அதிகாலையில் எழுந்து எண்ணெய் தேய்த்து தலைமுழுகினால் நம் பாவம் எல்லாம் போய்விடும் என்பது நம்பிக்கை. கிருஷ்ணன் நரகாசுரனை அழித்த நாளே தீப ஒளி திருநாளாம் தீபாவளி திருநாள் என்று பெயர் பெற்றது. அன்று சிவபெருமான் உலகிலுள்ள நீர்நிலை அனைத்திற்குமே கங்கையின் புனிதத்தை வழங்குகிறார் என்பது ஐதீகம். இந்த ஐதீகத்தின்படி அன்று நம் வீட்டில் உள்ள கிணறு, குழாய் ஆகியவற்றில் வரும் தண்ணீர் அனைத்தும் கங்கை நீராகவே பாவிக்கப்படும். இதனால்தான் தீபாவளி அன்று காலையில் நீராடுவதை கங்காஸ்நானம் ஆச்சா என்று சொல்கிறார்கள்.

தீபாவளி குளியலில் கங்கையின் புண்ணியம்

தீபாவளி தினத்தில் வெந்நீரில் எண்ணெய் தேய்த்துக் குளித்தால் பீடைகள் விலகி, புண்ணியம் உண்டாகும். அன்றைய தினத்தில் எண்ணெயில் திருமகளும், வெந்நீரில் கங்கையும் ஒன்று சேர்வதால், எண்ணெய்க் குளியல் செய்பவர்க்கு கங்கையில் மூழ்கிக் குளித்த புனிதப்பயன் கிட்டும்! தீபாவளியன்று அதிகாலையில் எழுந்து எண்ணெய் தேய்த்து ஆல், அரசு, அத்தி, மாவிலங்கை ஆகிய மரங்களின் பட்டைகள் போட்டுக் காய்ச்சிய நீரில் கங்கா ஸ்நானம் செய்த பின் புத்தாடை உடுத்தி, பல வகையான பலகாரங்கள் செய்து விஷ்ணுவுக்கும், மகாலட்சுமிக்கும் படைத்து பூஜிக்க வேண்டும்.

குபேரா கொஞ்சம் கண் திறப்பா?

செல்வத்தின் அதிபதியாகிய திருமகளின் அருள்தரும் குபேர பூஜையினை தீபாவளி நாளிலோ, அதற்கு மறுநாளோ செய்வதால் வீட்டில் செல்வம் பெருகும். லட்சுமி கடாட்சத்தை அருளும் குபேரனுக்கு ராஜாதிராஜன் என்ற பெயரும் உண்டு. யட்சர்களின் தலைவனான குபேரன் மிகவும் சாந்த குணம் கொண்டவர். இவர் எப்போதும் பஞ்சதசீ என்னும் மந்திரத்தை ஜபித்தவாறு இருப்பார். மகாலட்சுமியின் அஷ்டநிதிகளில் சங்கநிதி, பதுமநிதி இருவரும் இவருடைய இருபக்கங்களில் வீற்றிருப்பார்கள். சிவபெருமானை பூஜித்ததன் பயனாக வடதிசையின் அதிபதியாகும் பாக்கியத்தை அடைந்தவர் இவர். ராஜயோகத்தை அருளும் குபேரனைப் பூஜிப்பவர்கள் தனலட்சுமி மற்றும் தைரியலட்சுமியின் அருளைப் பெறுவர். ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை குபேரனை வழிபாடு செய்ய ஏற்ற நாளாகும். குபேரனைப் பூஜிக்கும் போது நம் வீட்டுக்கு மட்டுமல்ல! நாட்டின் மீது பார்வைபட்டு தேசத்தின் கடனெல்லாம் தீர்ந்து, மாபெரும் செல்வபூமியாக, பழைய பாரதமாக வேண்டுவோம்.

காவல் தெய்வம் மகாலட்சுமி

தீபாவளிக்கு மகாலட்சுமி வழிபாடு முக்கியமானது. இது தொன்றுதொட்டு நடந்து வந்துள்ளதை, தமிழ் இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன. மகாலட்சுமியின் திருவுருவம் ஒவ்வொரு வீட்டின் வாசலிலும் பொறிக்கப்பட்டிருந்ததாக நெடுநல்வாடையும், வீட்டு மதில் சுவரில் பொறிக்கப்பட்டிருந்ததாக மதுரைக்காஞ்சியும் கூறுகிறது. நம்மூர் கிராமங்களில் பெண் காவல் தெய்வமாக காளி, துர்க்கை, மாரியம்மன், பேச்சியம்மன், இசக்கியம்மன் என்றே வணங்குவது வழக்கம். ஆனால், பட்டினப்பாலை என்னும் இலக்கிய நூலில் மகாலட்சுமி ஊரின் காவல் தெய்வமாக வழிபடப்பட்டாள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

நம்ம வீட்டுக்குள்ளும் கங்கை வரும்

தீபாவளி நன்னாளில் எண்ணெய் தேய்த்து நீராடல் என்பது மிகவும் புனிதமானதாகும். இந்
நீராடல் இல்லறத்தார் மட்டுமல்ல துறவிகளுக்கும் உரியது. பொதுவாக எண்ணெயை அபசகுனமாக கருதுவார்கள். ஆனால், தீபாவளியன்று தைலமாகிய நல்லெண்ணெயில் ஸ்ரீதேவியாகிய திருமகளே வாசம் செய்கிறாள் என்பது ஐதீகம். அதேபோல், அன்று எந்த நீரில் குளித்தாலும் அது புனிதநதி கங்கையில் நீராடியதற்குச் சமமாகும். அதனால் தான் தீபாவளியன்று கங்கா ஸ்நானம் ஆச்சா? என்று கேட்கும் பழக்கம் உருவானது. நம் ஒவ்வொரு வீட்டிலும் தீபாவளிநாளில் கங்காநதியே வாசம் செய்கிறாள். தைலத்தில் விளங்கும் லட்சுமிதேவிக்கும், நீரில் வாசம் செய்யும் கங்காதேவிக்கும் மானசீகமாக நன்றிதெரிவித்து தீபாவளிநாளில் எண்ணெய் தேய்த்து நீராடினால் நம் பாவங்கள் அகன்றுவிடும்.

செல்வ வளத்துக்கான யாகம் செய்ய வேண்டுமா?

பக்தர்களுக்கு அருள் செய்ய மகாவிஷ்ணு, மகாலட்சுமியை பூலோகத்தில் பிறக்கும்படி செய்வார். ஒருமுறை பூமிக்கு வந்த மகாலட்சுமி, மன நிம்மதி வேண்டி சிவபூஜை செய்தாள். சிவன் அவளுக்கு காட்சி தந்தார். மேலும், அவளது பெயரிலேயே மகாலட்சுமீஸ்வரர் என்ற பெயரும் பெற்றார். திருவாகிய மகாலட்சுமி பூஜித்ததால் இத்தலத்திற்கு திருநின்றியூர் என்ற பெயர் ஏற்பட்டது. செல்வ வளம் வேண்டி மகாலட்சுமிக்காக இங்கு ஹோமம் நடத்தப்படுகிறது. மயிலாடுதுறையில் இருந்து சீர்காழி செல்லும் வழியில் 7 கி.மீ., தூரத்தில் உள்ளது.

மகாலட்சுமியிடம் கற்க வேண்டியது என்ன?

நம்மை யாராவது சிறிதாக சீண்டினால்கூட, உடன் கோபித்து விடுவோம். ஆனால், மகாலட்சுமி அப்படிப் பட்டவள் அல்ல. தாங்கவே முடியாத துன்பங்களைத் தந்த போதிலும், பொறுமையின் சிகரமாக இருந்தவள் அவள். சீதையாகப் பிறந்தபோது
ராவணன் அவளை இலங்கைக்குக் கடத்தியபோதும், சிறை வைக்கப்பட்டு அசோக வனத்தில் அசுரகுலப்பெண்கள் துன்புறுத்தியபோதும் அவள் கோபப்படவில்லை. அவளைதுன்புறுத்திய அசுரப்பெண்களை தண்டிக்க ஆஞ்சநேயர் விரும்பியபோதும், அவர்களை மன்னித்துவிடும்படி சொல்லிவிட்டாள். இவ்வாறு மகாலட்சுமி, எல்லையில்லாத பொறுமையின் சின்னமாக திகழ்கிறாள். அவரவர் வீடுகளுக்கு அவரவர் முன்வினைப் பயனுக்கேற்பவே அவள் வருவாள். அதிலும் கூட பொறுமை தான் காட்டுவாள். தீபாவளி திருநாளில் மகாலட்சுமியிடம் பொறுமையுடன் இருக்க வேண்டுவோம்.

தீபாவளி செலவை சமாளிக்க வழி இருக்கு தெரியுமா?

பண்டிகைகளிலேயே தீபாவளி தான் மிகச்செலவுடைய திருநாள். புத்தாடை, நகைகள், பட்டாசு, பண்டங்கள் என விழா களைகட்டும். அதனால் தான் குபேரபூஜையை இந்நாளில் நடத்துகிறார்கள். லட்சுமி கடாட்சம் இருந்தால் தீபாவளி செலவு பற்றி கவலையே இல்லை. எனவே, மகாலட்சுமியை தினமும் வழிபட வேண்டும். மகாலட்சுமிக்கு, மலர் மகள் என்று சிறப்புப் பெயர் உண்டு. பாலைக் கடைந்தால் மிருதுவான தன்மையுடைய வெண்ணெய் கிடைக்கும். அதேபோல, பாற்கடலைக் கடைந்தபோது, மென்மையானவளான மகாலட்சுமி தோன்றினாள். இவள் மலரைவிட மென்மையான தன்மை கொண்டதால், மலர் மகள் எனப் பெயர் பெற்றாள். தாமரையாள், பத்மவாசினி, நாண்மலராள், பூபுத்திரி (பூமியின் மகள்), மாமகள், மாதுளங்கி, பதுமை, அக்னி கர்ப்பை, ரத்தினாவதி, ஜானகி என்பன மகாலட்சுமியின் வேறு சில பெயர்கள் ஆகும்.

அசாமில் பிறந்த அசுரன்

விழா நாட்களில் தீபமேற்றி வழிபாடு செய்வது நம் மரபு. தமிழகத்தில், தீபத்திற்குரிய விழாவாக தமிழகத்தில் திருக்கார்த்திகை அமைந்துள்ளது. வடமாநிலங்களில் தீபாவளி திருநாளை தீபத்திருவிழாவாகக் கொண்டாடுகிறார்கள். நரகாசுரன் என்ற அசுரன் பிராக்ஜோதிஷ்புரம் என்னும் நகரத்தை ஆண்டுவந்தான். இதற்கு இருள் சூழ்ந்த நகரம் என்று பொருள். இவ்வூர் இன்றைய அசாம் மாநிலத்தில் இருந்தது. விஷ்ணு வராக அவதாரம் தாங்கி, பூமியை மீட்டபோது பூமாதேவிக்கும், விஷ்ணுவுக்கும் பிறந்த புத்திரன் இவன். கோபம், காமம் முதலிய குரூர எண்ணங்களுடன் பிறந்திருந்த நரகாசுரன், தேவர்களைத் துன்புறுத்தி வந்தான். தன்னைப் பெற்றவளைத் தவிர யாராலும் கொல்லப்படக்கூடாது என்ற வரத்தையும் பெற்றிருந்தான். எனவே பூமாதேவியை சத்தியபாமாவாக அவதரிக்கச் செய்த விஷ்ணு, கிருஷ்ணவதார காலத்தில் அவளை மணந்து கொண்டார். சத்தியபாமாவைத் தன் தேரோட்டியாக்கிக் கொண்டு நரகாசுரனை அழிக்க கிளம்பினார். பூமிதேவியான சத்தியபாமா எதிரே நிற்பது மகனென அறியாமல், ஐப்பசி மாதம் கிருஷ்ணபட்ச சதுர்த்தசி நாளில் நரகாசுரனைக் கொன்று அருள்செய்தாள். பின்னர் நடந்ததை அறிந்து, தன் மகன் இறந்தநாளை, தீபத்திருநாளாகக் கொண்டாட வரம் பெற்றாள்.

விஷ்ணுவுக்கும், கங்கைக்கும் என்ன சம்பந்தம்?

தீபாவளி கதாநாயகனான நரகாசுரன் சத்யபாமாவின் உதவியுடன் கிருஷ்ணரால் கொல்லப்பட்டான். ஆனால், கங்கையோ சிவனின் தலையில் இருந்து வந்த நதி. எனவே தீபாவளியன்று அநியாயத்தை அழித்த கிருஷ்ணனையும், பாமாவையும் வழிபடுவது சரி. ஆனால், சிவனுடன் சம்பந்தப்படுத்தி, கங்கையில் ஸ்நானம் செய்ய வேண்டியது ஏன் என்ற கேள்வி எழுகிறது.பகவான் விஷ்ணு வாமன அவதாரம் எடுத்து மகாபலியை ஆட்கொள்வதற்காக உலகளந்தார். அவர் தன் பாதத்தை மேல் லோகத்துக்கு தூக்கியவுடன், பிரம்மா அந்த பாதங்களுக்கு தன் கமண்டல நீரால் அபிஷேகம் செய்தார். அது ஆகாயகங்கையாகக் கொட்டியது. அது அப்படியே பூமியில் விழுந்தால் உலகம் தாங்காது என்பதால், சிவன் அதைத் தன் தலையில் தாங்கினார். பின்னர், பகீரதனின் கோரிக்கைக்கு இணங்க பூமி தாங்கும் வேகத்தில் இங்கு அனுப்பி வைத்தார். புனிதநீர் எதுவாயினும் அது கங்கையே ஆகும். நம் வீட்டுக்குடத்தில் புனிதநீரிட்டு நூல் சுற்றி
மந்திரங்களை ஓதும்போது கங்கை அதற்குள் ஆவாஹனம் ஆகிவிடுகிறது. எனவே, விஷ்ணுவுக்கும், சிவனுக்கும் கங்கை தீர்த்தம் சம்பந்தப்படுகிறது. ஆக, பிரம்மா, சிவன், விஷ்ணு என்ற முப்பெரும் தெய்வங்களுக்கும் சம்பந்தப்பட்ட கங்கை நதியை நம் வீட்டு தண்ணீரில் ஆவாஹனம் செய்து தீபாவளியன்று நாம் கங்கா ஸ்நானம் செய்கிறோம்.

நரகாசுரனிடம் இருந்து கைப்பற்றிய பொருட்கள்

நரகாசுரனை சம்ஹாரம் செய்தவுடன்,அவனது தாயான பூமாதேவி கிருஷ்ணனிடம் வந்து பிரார்த்தித்தாக ஒரு தகவல் பாகவதம் என்னும் நூலில் இருக்கிறது. இந்திரனின் குடை, இந்திரனின் தாயான அதிதியின் குண்டலங்கள் ஆகியவற்றை நரகாசுரன் பறித்து வைத்திருந்தான். அவன் இறந்ததும் அவற்றைக் கைப்பற்றிய பூமாதேவி, அந்தப் பொருட்களை பகவானிடம் ஒப்படைத்தாள். பின்னர், பகவானே! நரகாசுரனின் மகன் பகதத்தனை நீங்கள் தான் காப்பாற்ற வேண்டும், என்று பிரார்த்தித்தாள். எதிரியின் பிள்ளைகளையும் காப்பாற்ற வேண்டும் என்பதற்கு இது உதாரணம்.

குளிக்கும் நேரம்

தீபாவளியன்று சூரியன் உதயமாவதற்கு ஒரு முகூர்த்தம், அதாவது ஒன்றரை மணி நேரம் முன்னதாக நீராட வேண்டும் என்பது விதி. இந்த ஆண்டில் காலை 4.30க்கு நீராடுவது உத்தமம். இதில் இருந்து 5.30 மணிக்குள் வீட்டிலுள்ள எல்லாரும் குளித்து விட வேண்டும். சூரிய உதயத்துக்கு முன்னதாக எண்ணெய்க்குளியல் செய்யக்கூடாது என்பது பொதுவிதி. ஆனால், தீபாவளியன்று மட்டும் வித்தியாசமாக இப்படி செய்தால் தான், நரகாசுரனைப் பற்றி மக்கள் நினைப்பார்கள். அவனைப் போல நம் பிள்ளைகளை அதிக செல்லம் கொடுத்து கெடுத்துவிடக்கூடாது என்பதிலும் கவனமாக இருப்பார்கள் என பூமாதேவி நினைத்தாள். அதற்கென்றே இப்படி ஒரு விதிவிலக்கான வரத்தைப் பெற்றாள். எனவே, எக்காரணம் காலை 2மணி, 3மணி என்றெல்லாம் யாரும் எண்ணெய் தேய்த்து குளிக்கக்கூடாது. சூரிய <உதயத்துக்குப் பிறகும் குளிப்பது தவறு. இவ்வாறு குளித்துவிட்டு, மீண்டும் காலை 7 மணிக்கு மேல் வழக்கமான பச்சைத்தண்ணீர் குளியலையும் செய்ய வேண்டும் என்கிறது சாஸ்திரம்.

தீபாவளியன்று முன்னோர்கள் வழிபாடு

தீபாவளியன்று எண்ணெய் தேய்த்துக் குளித்ததும், புதிய ஆடைகளையும், புதிய பலகாரங்களையும் வைத்து வணங்குவது வழக்கம். இது முன்னோர்களுக்கு (பிதுர்களுக்கு) படைக்கும் படையல் ஆகும். அன்று பிதுர்கள் வருவதாக ஐதீகம்.

தீபாவளி ரகசியம்

இரண்டு பேருக்கு இடையில் மத்தியஸ்தம் செய்பவர் (பிரச்னைக்கு தீர்வு சொல்பவர்) என்பவர் தராசு போல நடுநிலையாளராக இருக்க வேண்டும் என்று சொல்வதுண்டு. தராசுக்கு துலாக்கோல் என்று ஒரு பெயர் உண்டு. தீபாவளி கொண்டாடப்படும் ஐப்பசிக்கு
துலாமாதம் என்று பெயர். தராசு எப்படி நடுநிலையாக தன் முள்ளைக் காட்டி நிற்குமோ, அதுபோல தனக்கு வேண்டியவர் வேண்டாதவர் என்ற பேதம் இல்லாமல் எவன் இருக்கிறானோ அவனே நீதிமான். அதனாலேயே நீதிக்கு அடையாளமாக தராசினை வைத்திருக்கிறார்கள். தீபாவளி நன்னாள் நீதியை எடுத்துச் சொல்கிறது. தாங்கள் பெற்ற மகன் என்றும் பாராமல், அநியாயம் செய்த நரகாசுரனை திருமாலும், சத்தியபாமாவும் இணைந்து அழித்தனர். இந்த நீதியும், மனஉறுதியும் அனைவரிடமும் ஏற்பட வேண்டும் என்பதே தீபாவளித் திருநாள் நமக்கு உணர்த்தும் பெரும் ரகசியமாகும்.

கணவனை காத்த மனைவி

கிருஷ்ணர் தான் நரகாசுரனைக் கொன்றார் என்று சொல்கிறோம். ஆனால், உண்மையில் கிருஷ்ணரின் மனைவி சத்ய பாமாவே நரகாசுரனைக் கொன்றாள். பெற்ற தாயின் கையால் மட்டுமே சாவேன் என்பது நரகாசுரன் பெற்ற வரம். நரகாசுரன் கிருஷ்ணருடன் போரிட்டபோது, தேருக்கு சாரதியாக அவரது மனைவி சத்தியபாமா சென்றாள். அவள் பூமாதேவியின் அம்சம் ஆவாள். நரகாசுரன் பூமா தேவியின் மைந்தன். போரின் போது, கிருஷ்ணர் மயங்கி விழுந்ததைப் போல நடித்தார். இதனை கண்டு பதறிய சத்தியபாமா நரகாசுரனால் கிருஷ்ணருக்கு ஆபத்து ஏற்படுமோ என அஞ்சி அவன் மீது அம்பினைத் தொடுத்தாள். பெற்ற வரத்தின் படி அவன் உயிர் துறந்தான். தீபாவளியன்று பாமா ருக்மணி சமேத கிருஷ்ணரை வழிபாடு செய்ய வேண்டும்.

தியாகத்திருநாள்

தீபாவளித் திருநாள் தியாகத்திருநாள் என்றால் மிகையாகாது. நரகாசுரனை அவளது தாயால் தான் அழிக்க முடியும் என்ற நிலை இருந்தது. பூமாதேவியே அவனது தாய். அவள் திருமாலின் அவதாரங்களில் ஒன்றான கிருஷ்ணரின் மனைவியாக சத்யபாமா என்ற பெயரில் பூலோகத்தில் வாழ்ந்தாள். நரகாசுரன் தான் தன் பிள்ளை என்ற விஷயம் அவளுக்குத் தெரியாது. தெரியாமலேயே கிருஷ்ணனின் லீலையால் அவனைக் கொன்று விட்டாள். பின்னர், உண்மையறிந்து கிருஷ்ணனிடம், தன் மகனின் இறப்பை உலகமே கோலாகலமாகக் கொண்டாடுவதால், அந்நாளில் அதிகாலை வேளையில் எண்ணெய் தேய்த்து, வெந்நீரில் குளிக்க வரம் பெற்றாள். பிள்ளையை பறிகொடுத்த வேளையிலும், மக்கள் நலம் பேணிய தியாகவதி அவள். தன் பிள்ளையைப் போல், இன்னொரு பிள்ளை யாருக்கும் பிறக்கக் கூடாது என்றும் அவள் இறைவனிடம் பிரார்த்தித்தாள். மேலும்,
வடமாநிலங்களில் தீபாவளியை லட்சுமி பூஜையாகக் கொண்டாடுகின்றனர். தனக்கு சம்பந்தப்பட்ட இந்த விழாவை தன் சக்களத்தியான ஸ்ரீதேவிக்கும் (லட்சுமி), பரம
சிவனின் மனைவியான கங்காதேவிக்கும் விட்டுக் கொடுத்தாள். உலக நன்மைக்காக மகனையும் பறிகொடுத்தாள். இந்தக் காரணங்களால் பொறுமையின் திலகமானாள் பூமாதேவி. எனவே, தீபாவளி தியாகத்திருநாள் ஆகிறது.

பாவம் தொலைக்கும் நீராடல்

தீபாவளி நன்னாளில் எண்ணெய் தேய்த்துக் கொள்வதும், நல்ல நீரில் குளிப்பதும் அவசியம். குளிக்கும் நீர் சுத்தமாக இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் நீரை கொதிக்க வைத்து விடுகிறோம். தீபாவளியன்று எண்ணெய் தேய்த்துக் குளிப்பதில் தனிச்சிறப்பு இருக்கிறது. அன்றைய தினத்தில் நம் வீட்டில் இருக்கும் எண்ணெயில் திருமகளாகிய மகாலட்சுமி வாசம் செய்கிறாள். சாதாரணமாக எண்ணெய் தலையைக் கண்டால் அபசகுனம் என்பதை நாம் சொல்வோம். ஆனால், தீபாவளி நாளில் எண்ணெயில் லட்சுமி இருப்பதால் செல்வச்செழிப்பு ஏற்படும். அதுபோல நம் வீட்டிலிருக்கும் சுத்தமான நீரில் கங்கை தன்னை ஐக்கியப்படுத்திக் கொள்கிறாள். அதனால் கங்கையில் குளித்த புண்ணியம் நமக்கு கிடைக்கும். இதனால்தான் தீபாவளி குளியலை கங்கா ஸ்நானம் என்றே சொல்கிறார்கள். முற்றும் துறந்த துறவிகளுக்கும் கூட அன்று எண்ணெய் குளியல் உண்டு. கங்கா ஸ்நானத்தால் நம் பாவங்கள் நீங்குகின்றன.

ஞான தீபம் ஏற்றும் தீபாவளி

காசி என்ற சொல்லுக்கு பிரகாசம் என்று பொருள். ஆத்ம பிரகாசத்தின் புறத்தோற்றமாகவே காசி ÷க்ஷத்திரத்தை மகான்கள் கருதுகின்றனர். தீபாவளி சமயத்தில் மூன்று நாட்களுக்கு காசி ÷க்ஷத்திரத்தில் தங்கி, அன்னபூரணியாக தரிசனம் அளிக்கிறாள் அம்பிகை. கிருஷ்ண பகவான் நரகாசுரனை அழித்த தினமே தீபாவளி என்று, புராண வரலாறும் ஒரு நுட்பமான கருத்தைக் கூறுகிறது. நர-மனிதன், க-கீழான நிலை. மனிதனின் கீழ்த்தரமான தாழ்ந்த நிலையை பரமாத்மா அழிக்கிறார். மனிதனிடமுள்ள கீழ்த்தரமான மனநிலையை, அசுர குணங்களை பரமாத்மா அறவே அழித்து, அங்கு ஞான தீபம் ஏற்றுகிறார் என்பதே நரகாசுரன் வதம் என்பதின் தத்துவமாகும்.

தீபாவளி சிறப்பு

* தீபாவளி தினத்தன்றுதான் விஷ்ணு, லட்சுமியைத் திருமணம் செய்து கொண்ட நாள்.
* சாவித்திரி, யமனோடு வாதம் செய்து சத்தியவானின் உயிரை மீட்ட நாள்.
* ஆதிசங்கரர், ஞான பீடம் நிறுவிய தினம்.
* நசிகேதஸ், யம லோகம் சென்று வரம்பெற்று திரும்பிய தினம்.
* கோவர்த்தன பூஜை செய்யும் நாள்.
* மகாபலி சக்ரவர்த்தி முடிசூடிய நாள்.
* புத்தர் நிர்வாண தீட்சை பெற்ற தினம்.
* தீபாவளி தினத்தை அரசு விடுமுறையாக அறிவித்து, பட்டாசு வெடித்துக் கொண்டாட வகை செய்தது மொகலாயச் சக்கரவர்த்தி அக்பர்.

பல்வேறு பெயர்களில் தீபாவளி

தீபாவளியை காம சூத்திரத்தில் கூராத்திரி என்றும், பாகவத புராணமான பவிஷ்யோத்ர புராணத்தில் தீபாவளிகா எனவும், கால விவேகம், ராஜமார்த்தாண்டம் நூல்களில் சுக்ராத்திரி என்றும் அழைத்ததாகத் தெரிகிறது. வடமொழி நூல்களில் வாசக்திரிய கவுமுதி, த்ருத்யத்வம் என்றும், நாகநந்தம் எனும் நூலில் தீப ப்ரதிபனுஸ்தவம் எனவும், நீலமேக புராணம் என்ற நூலில் தீபோத்ஸவம் என்றும் தீபாவளிக்குப் பல்வேறு பெயர்கள் உள்ளன. கௌடில்யரின் அர்த்தசாஸ்திரம் கி.மு.4-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது. இதில் தீபாவளித்திருநாள் பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன.ஐப்பசி மாத அமாவாசையன்று, கோயில்கள் மற்றும் நதிக்கரைகளில் வரிசையாக விளக்குகள் ஏற்றி வைக்கப்பட்ட தகவலையும் இந்த நூல் விவரிக்கிறது. வாத்ஸ்யாயனர் எழுதிய காமசூத்திரம் நூலில் தீபாவளி தினத்தை, யட்சகர்களின் இரவு என்று குறிப்பிடுகிறார். மேலும் இந்த நூல், கி.மு. 527-ல், பாட்னாவின் பாவாபுரி என்ற இடத்தில் மகா நிர்வாணம் அடைந்த 72-வயது மகாவீரரின் முக்தியின் நினைவாக ஜைனர்கள் தீப உற்சவம் கொண்டாடுகின்றனர் என்றும் குறிப்பிடுகிறது. அந்த உற்சவ தினம் ஐப்பசி மாத அமாவாசையன்றுதான் கொண்டாடப்படுகிறது.

தீப ஒளி திருநாள்

ராவணசம்ஹாரம் முடிந்து சீதாதேவியுடன் ஜயராமனாக அயோத்தி திரும்பினார் ஸ்ரீராமன். அப்போது அதிகாலை மூன்று மணி. பதினான்கு ஆண்டுகளாக ஸ்ரீராமரை தரிசிக்காத அயோத்தி மக்கள், அந்த இரவில் ஏராளமான விளக்குகளை வரிசையாக ஏற்றி வைத்து, ராமரைத் தரிசித்து வரவேற்று மகிழ்ந்தனர். ஸ்ரீராமபிரான், சீதாப்பிராட்டியுடன் அரண்மனைக்குள் நுழைந்தார். அப்போது கௌசல்யாதேவி விளக்கேற்ற வந்த திருமகளே.. சீதா ! நீ இல்லாததால் இந்த அரண்மனையே இருள் சூழ்ந்துவிட்டது. நீ தீபஒளி ஏற்று. அந்தகாரம் விலகி அருள் பரவட்டும் என்றாள். உடனே, தீபங்களை ஏற்றிவைத்து வழிபாடு செய்தாள் சீதை. இந்த நன்னாளே தீபாவளித் திருநாள் !

அதிர்ஷ்டத்தை அள்ளித் தரும் உப்பு

தீபாவளியன்று பயன்படுத்தும் ஒவ்வொரு பொருட்களிலும் ஒவ்வொரு தெய்வத்தின் கடாட்சம் இருப்பதாக சாஸ்திரம் கூறுகிறது. எண்ணெய்-லட்சுமி; சிகைக்காய் - சரஸ்வதி; சந்தனம் - பூமாதேவி; குங்குமம் - கௌரி; தண்ணீர் - கங்கை; இனிப்புப் பலகாரம் - அமிர்தம்; நெருப்புப் பொறி - ஜீவாத்மா; புத்தாடை - மகாவிஷ்ணு; லேகியம் - தன்வந்தரி. தீபாவளியன்று உப்பு வாங்குவது அதிர்ஷ்டமாகக் கருதப்படுகிறது. உப்பில் மகாலட்சுமி வாசம் செய்கிறாள் என்பது ஐதிகம்.

வட மாநிலங்களில் தீபாவளி

வட மாநிலங்களில், முதல் நாள் லட்சுமி பூஜை, இரண்டாம் நாள் நரகசதுர்த்தி, மூன்றாம் நாள் முழுக்கு, ஐந்தாம் நாள் எமதர்ம வழிபாடு என தீபாவளியை 5 நாட்கள் கொண்டாடுகின்றனர். எமனுக்கு யமுனை என்ற தங்கை இருந்தாள். அவளுக்கு எமன் தீபாவளி அன்று பரிசுகளை வழங்கி மகிழ்வான். அன்று தங்கை அண்ணனுக்கு விருந்து கொடுப்பாள். இதைக் கொண்டாடும் வகையில் வட மாநிலங்களில் தங்கைகளுக்கு அண்ணன்மார் பரிசு வழங்கும் நாளாக தீபாவளி விளங்குகிறது. மூன்றாம் நாள் திருவிழாவில் இளம்பெண்கள் தீபங்களை ஆற்றில் மிதக்க விடுவார்கள். அந்த தீபங்கள் அமிழ்ந்து விடாமலும், அணைந்து விடாமலும் பார்த்துக் கொள்வார்கள். அப்போதுதான் இந்தாண்டு சுபிட்சமாக இருக்கும் என்பது நம்பிக்கை.

விதவிதமான தீபாவளி வழிபாடு

ராஜபுத்திரர்கள் தீபாவளியன்று ராமரை வழிபடுவார்கள். அன்றைய தினம் ராஜஸ்தான் பெண்கள் உடல் முழுவதும் எனாமல் நகைகளை அணிந்து கொண்டு வண்ண ஆடைகள் அணிந்து நடனம் ஆடி மகிழ்வர். மத்தியபிரதேசத்தில் குபேர பூஜை நடைபெறும். குபேரனை வழிபட்டால், பணத்தட்டுப்பாடு வராது என்பது அந்த மாநில மக்களின் நம்பிக்கை. வங்காளத்தில் காளிபூஜை நடைபெறும். தீபாவளியை இந்த மாநிலத்தில் மகா நிசா என்ற பெயரில் கொண்டாடுகின்றனர். காளியின் உக்கிரத்தை சங்கரன் தணித்த நாளாக தீபாவளியை கொண்டாடுகின்றனர். இமாச்சலபிரதேசத்தில் பசுக்களை அலங்கரித்து வழிபடுவர். ஜைனர்கள் தீபாவளி நன்னாளை மகாவீரர் வீடு பேறு அடைந்த நாளாகத் கொண்டாடுகின்றனர். சீக்கியர்கள் சீக்கிய மதகுரு, குருநானக் பூத உடல் நீத்து புகழுடம்பு எய்திய நாளாக கொண்டாடுகின்றனர். சீனாவில் ஹீம்-ஹூபா மியான்மரில் தாங்கிஜீ, தாய்லாந்தில் லாய்கிரதோஸ் ஸ்வீடனில் லூசியா ஆகிய விழாக்கள் நமது நாட்டு தீபாவளியை போலவே விளக்குகளை வரிசையாக வைத்துக் கொண்டாடுகின்றனர்.

ஆசியாவின் மிகப்பெரும் பண்டிகை

ஆசியாவிலேயே தீபாவளிதான் அதிகமான மக்கள் கொண்டாடும் பண்டிகையாக திகழ்கிறது. தீபாவளியை இந்து மதத்தினர் மட்டுமின்றி, பவுத்த, ஜைன மதத்தினரும் கொண்டாடுகின்றனர். ஐப்பசி மாதத்தில் வரும் அமாவாசை, திரயோதசி, சதுர்த்தசி, பிரதமை ஆகிய நான்கு நாட்களும் தீபாவளியோடு தொடர்பு கொண்டவையாகும். வடமாநிலங்களில் அமாவாசை, பிரதமையிலும் தென் மாநிலங்களில் திரயோதசி, சதுர்த்தசியிலும் தீபாவளி கொண்டாடுகின்றனர்.

No comments:

Post a Comment