Wednesday, January 18, 2012

பெருமாள் வழிபட்ட சிவாலயங்கள்

பல்வேறு புராண சம்பவங்கள் ஹரியும், சிவனும் ஒன்றே என்று நமக்கு உணர்த்துகின்றன. திருமாலின் இருதய மத்தியில் என்றும் நீங்காமல் சிவன் இருக்கிறார் என்று தைத்திரிய ஆரண்யம் என்ற நூல் கூறுகிறது. சிவபெருமான் கைலாயத்தில் எப்போதும் ராமநாமாவை சொல்லிக் கொண்டே இருக்கிறார் என்று விஷ்ணு சகஸ்ரநாமம் கூறுகிறது. திருமால் பத்து அவதாரங்கள் எடுத்தார். இந்த பத்து அவதாரங்களில் பெருமாள் சிவபிரானை பூஜித்ததற்கு பல சான்றுகள் உள்ளன. அவற்றின் தொகுப்பே இது.

01. மச்சாவதாரம்

சோமுகாசுரன் வேதங்களை திருடிச்சென்று, கடலுக்கடியில் ஒளிந்துகொண்டபோது, திருமால் பெரிய சுறா மீனாக உருவம் தாங்கி, கடலுக்கடியில் சென்று, அவனை சம்ஹாரம் செய்து, வேதங்களை மீட்டு பிரம்மனிடம் தந்தார். பிறகு மீன் உருவத்துடன் கடலுக்கடியில் சென்று மகிழ்ச்சியில் கடலை கலக்கி விளையாடினார். இந்த செயலால் உலகம் துன்பமடைந்தது. அப்போது சிவபெருமான் பெரிய கொக்கு வடிவமெடுத்து திருமாலுக்கு தன் தவறை உணர்த்தினார். திருமால் மத்ஸ்ய (மீன்) உருவத்துடன் பல காலம் சிவபூஜை செய்ததாக வரலாறு கூறுகிறது. காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் கோயிலின் முன் உள்ள 16 கால் மண்டபத்தில் உள்ள தூணில் பெரிய கொக்கு வடிவில் சிவபெருமானும், அவருடைய அலகில் சிக்கிக்கொண்டு மீன் உருவத்தில் வழிபடும் பெருமாளையும் காண்கிறோம். திருமால் மீனாக அவதாரம் எடுத்து சிவனை வழிபட்டதால் இக்கோயில் இறைவன் மச்சேஸ்வரர் எனப்படுகிறார். கும்பகோணம் அருகிலுள்ள தேவராயன்பேட்டை என்ற ஸ்தலம் முன்னாளில் சேலூர் (சேல் - மீன்) என்று அழைக்கப்பட்டது. அங்குள்ள சிவபெருமானையும் மீன் வடிவ திருமால் வணங்கியதால், இறைவன் மச்சேஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார்.

02. கூர்மாவதாரம்

திருப்பாற்கடலை தேவர்களும், அசுரர் களும் கடைந்தபோது, மத்தாக இருந்த மந்திரமலை கடலுக்கடியில் மூழ்காமல் இருக்க ஆமை (கூர்மம்) அவதாரம் எடுத்து தன் முதுகில் தாங்கினார் திருமால். ஆமை வடிவம் கொண்ட பெருமாள், மலையை தாங்கும் வல்லமையை தர சிவபெருமானை வேண்டினார். இதற்காக, காஞ்சிபுரத்திலுள்ள திருக்கச்சூர் சிவன் கோயிலில் ஆமைமடு என்ற தீர்த்தம் உண்டாக்கி பூஜித்ததாக தல வரலாறு கூறுகிறது. இங்குள்ள விநாயகர் சன்னதி விதானத்தில் திருமால் ஆமை வடிவில் சிவபூஜை செய்வது சிற்பமாக வடிக்கப்பட்டுள்ளது. முருங்கை மரத்தின்கீழ் ஜோதி வடிவாக விளங்கும் சிவலிங்கத்தை பெருமாள் ஆமை வடிவத்தில் வழிபட்டதால் இந்த சிவபெருமானுக்கு கச்சபேஸ்வரர் (கச்சபம் - ஆமை) என்ற பெயர் ஏற்பட்டது.

03.வராக அவதாரம்

இரண்யாட்சன் என்ற அசுரன் பாதாள லோகத்தில் இருந்தபடி தேவர்களைத் துன்புறுத்த பெருமாள் வராக அவதாரமெடுத்து பூமியை தோண்டி அங்கு சென்று அவனை அழித்தார். கோபம் நீங்காத அவரை சிவபெருமான் சாந்தப்படுத்தினார். சிவ தரிசனத்தால் சினம் தணிந்த பெருமாளுக்கு சிவபெருமான் அருள் புரிந்த தலமே திருப்பன்றிக்கோடு (வராகம் - பன்றி) ஆகும். இது கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ளது.

04.நரசிம்மஅவதாரம்

தன் பக்தனான பிரகலாதனை இரண்யனிடமிருந்து காப்பாற்ற நரசிம்ம அவதாரம் எடுத்து பெருமாள் வெளிப்பட்டார். இரண்யனைக் கொன்றார். அவரது உக்கிரத்தைத் தணிக்க, அதனினும் மேற்பட்ட உக்கிரத்துடன் சிவபெருமான் சரபேஸ்வரராக வடிவெடுத்தார். காஞ்சிபுரத்தில் தாமல் என்ற பகுதியில், நரசிம்மர் வழிபட்ட நரசிம்மேஸ்வர சிவாலயம் உள்ளது. புதுச்சேரி அருகிலுள்ள வில்லியனூர் தலத்தில் நரசிம்மர் வழிபட்ட காமீஸ்வரர் என பெயர் கொண்ட சிவபெருமானை தரிசிக்கலாம்.

05.வாமன அவதாரம்

மலை நாட்டை ஆண்ட மகாபலியின் ஆணவத்தை அடக்க அவனை குள்ள அந்தணன் (வாமனன்) வடிவெடுத்து திருமால் முக்தி கொடுத்தார். அவனை காலால் அழுத்தி பாதாள லோகம் அனுப்பிய பாவம் தீர பெருமாள் வழிபட்ட சிவத்தலம் கடலூர் அருகிலுள்ள திருமாணிக்குழியாகும்.

06.பரசுராம அவதாரம்

ஜமதக்னி என்ற முனிவரின் மகனாய் பிறந்து, தந்தை சொல் மிக்க மந்திரமில்லை என்ற தத்துவத்தை உணர்த்த, தன் தாயின் தலையையே கொய்து, அவளுக்கு மீண்டும் உயிர் வரம் கேட்ட அவதாரம் பரசுராம அவதாரம். இந்த அவதாரத்தில் மன்னர்களின் செருக்கையும் அடக்கினார் திருமால். திருமால் பரசுராமராய் பூஜித்த சிவத்தலங்கள் பெரம்பலூர் மாவட்டம் அரியலூர் அருகிலுள்ள பழுவூர் மற்றும் மயிலாடுதுறை அருகே உள்ள திருநின்றியூர் ஆகும்.

07.ராமாவதாரம்

ஒருவனுக்கு ஒருத்தி என்ற தத்துவத்தை உணர்த்தவும், பெற்றவர் சொல் கேட்டு நடக்கவும், அநியாயத்தை எப்பாடுபட்டேனும் வேரறுக்கவும், சிவ பக்தனாயினும் காமத்திற்கு அடிமைப்பட்ட அரக்கனை அழிக்கவும் திருமால் எடுத்த அவதாரம் ராமாவதாரம். ராம நாமத்தை சிவனே உச்சரிக்கிறார் என்பதும் வரலாறு. அவரே அனுமானாக உருவெடுத்து, ராவணனை அழிக்க திருமாலுக்கு உதவினார் என்பதும் செவிவழிச் செய்தி. திருமால், ராமாவதார காலத்தில் சிவனுக்காக சேதுக்கரையில் ஒரு தலமே உருவாக காரணமாக இருந்தார். சிவலிங்கம் சமைத்து பூஜித்தார். அதுவே ராமேஸ்வரம் ராமநாதர் கோயிலாகும். தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசத்திலுள்ள சிவனை ராமர் வழிபட்டதாக கூறப்படுவதால் அவர் ராமலிங்கேஸ்வரர் எனப்படுகிறார்.

08. பலராம அவதாரம்

திருமால் கிருஷ்ணாவதாரம் எடுக்கும் முன்பு, அவரது சயனமான ஆதிசேஷன் பலராமனாக உருவெடுத்ததாகவும், திருமால் அதனைக் கவுரவிக்க தன் அண்ணனாக உருவெடுக்கச் செய்தார் என்பதும் பலராம அவதாரத்தின் வரலாறு. காஞ்சிபுரத்தில் பலராமர் வழிபட்ட சிவன் கோயில் பலபத்ர ராமேஸ்வரம் என பெயர் கொண்டதாகும். திருமறைக்காடு எனப்படும் வேதாரண்யம் (நாகப்பட்டினம் மாவட்டம்) அருகிலுள்ள கோடியக்கரை குழகர்கோயில் பலராமர் வழிபட்ட தலமாகும்.

09.கிருஷ்ண அவதாரம்

கண்ணன் தனது சிவயோக மகிமையால் சிவபெருமானாகவே இருந்து, குரு÷க்ஷத்ர யுத்தத்திற்கு காரண பூதராய் அழித்தல் தொழிலை செய்ததாக பாகவதம் கூறுகிறது. மேலும் கண்ணன் தன் வினைகள் தீர, திருவீழிமலை (திருவாரூர் மாவட்டம்) மற்றும் திருவிடை மருதூர் (தஞ்சாவூர் மாவட்டம்) சிவபெருமானை பூஜித்த தலங்களாக கூறப்படுகிறது.

No comments:

Post a Comment