Thursday, January 19, 2012

மதுரையில் சுழலும் லிங்கம்!

இறைவன் இல்லாத இடம் ஏதுமில்லை. நம் கண்களுக்கு புலப்படாத அணுவிலும் அணுவாக உள்ள மிகச்சிறிய பொருளிலும் கூட அவர் வியாபித்திருக்கிறார். ஒருசமயம் அவ்வைப்பிராட்டி, சிவபெருமானைத் தரிசிக்க கைலாயம் சென்றார். நீண்டதூரம் நடந்து வந்ததால், களைப்பில் ஓரிடத்தில் அமர்ந்தார். அப்போது சிவன் இருந்த திசையை நோக்கி காலை நீட்டினார். இதைக்கண்ட பார்வதிக்கு கோபம் வந்துவிட்டது. அவ்வையிடம் வந்த பார்வதி, அவ்வையே! உலகாளும் என் தலைவனாகிய சிவபெருமான், அமர்ந்திருக்கும் இடத்தை பார்த்து, காலை நீட்டி உட்கார்ந்திருக்கிறீர்களே! இது அவரை அவமரியாதை செய்வது போலல்லவா உள்ளது. எனவே, காலை வேறு பக்கமாக நீட்டிக்கொண்டு அமருங்கள் என்றாள். இதைக்கேட்ட அவ்வை சிரித்தார்.

அம்பிகையிடம், தாயே! என்ன சொல்கிறீர்கள்? சிவன் இல்லாத இடம் பார்த்து காலை நீட்டுவதா? அப்படியொரு இடம் இருப்பதாக எனக்குத் தெரியவில்லையே! அப்படியே இருந்தாலும் அந்த திசையை நீங்களே சொல்லுங்கள்! அத்திசை நோக்கி என் காலை நீட்டிக்கொள்கிறேன், என்றார். அப்போதுதான் சிவபெருமான் இல்லாத இடமென்று ஏதுமில்லை. அவர் எங்கும் நீக்கமற நிறைந்திருக்கிறார் என்ற உண்மை அம்பிகைக்கு விளங்கியது. இவ்வாறு இறைவன் எங்கும் இருப்பதை உணர்த்தும் விதமான சிவலிங்க ஓவியம், மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் வரையப்பட்டுள்ளது. மீனாட்சி அம்மன் சன்னதியிலிருந்து, சுந்தரேஸ்வரர் சன்னதிக்குச் செல்லும் சிவன் சன்னதி இரண்டாம் பிரகாரத்தில் (முக்குறுணி விநாயகர் சன்னதி அருகில்) மேற்கூரையில் இந்த ஓவியம் வரையப்பட்டுள்ளது. பேரொளியுடன் கூடிய ஒரு வட்டத்தின் மத்தியில், சிவலிங்கம் இருக்கும்படியாக இந்த ஓவியம் வரைப்பட்டுள்ளது. லிங்கத்தின் உச்சியில் தாமரை மலர் உள்ளது.

இந்த லிங்கத்தை எந்த திசையில் நின்று பார்த்தாலும், சிவலிங்கத்தின் ஆவுடை(பீடம்) நம்மை நோக்கியிருப்பது போல தோன்றும் என்பது தான் இதன் ஸ்பெஷாலிட்டி. கிழக்கு நோக்கி நீங்கள் நின்றால் உங்கள் பக்கம் ஆவுடை திரும்பி விடும், மேற்கே சென்றால் அங்கு வந்து விடும். குறுக்காக நின்று பார்த்தால் அந்தப் பக்கமாக வந்துவிடும். இப்படி ஒரு அதிசய ஓவியம் இது. சிவன் எங்குமிருக்கிறார் என்பதை இந்த ஓவியம் சுட்டிக்காட்டுகிறது. இந்த சிவலிங்க ஓவியத்துக்கு, மானசீகமாக அபிஷேகம் செய்வதாக கற்பனை செய்தபடியே வழிபட்டால், அபிஷேக நீர் நம் மீது விழுவது போலவே இந்த அமைப்பு உள்ளது. சுற்றிச்சுற்றி எந்த திசையிலிருந்து பார்த்தாலும், நம்மை நோக்கி சுழன்றபடி காட்சியளிப்பதால் இதற்கு, சுழலும் லிங்கம் என்று பெயர் வைத்துள்ளனர். புராதனமான வரலாறுகள், சிவபெருமான் திருவிளையாடல் நிகழ்த்திய லீலைகள், காண்போர் வியக்கும் நுணுக்கமான கட்டடக்கலை, அற்புதமான சிற்பங்கள் என கணக்கிலடங்காத சிறப்புக்களுடன், அன்னை மீனாட்சியும், தந்தை சொக்கநாதரும் ஆட்சி செய்யும் புண்ணியத்தலமான மதுரை மீனாட்சியம்மன் கோயிலுக்கு இந்த ஓவியம் மேலும் சிறப்பு சேர்க்கிறது.

2 comments:

  1. You can see the same concept picture on the roof at koottai easwaran temple- Erode also. It is colled “suzalum Aakaasa lingam”.

    ReplyDelete
  2. இது மாதிரி ஒரு சிவலிங்கம் பேரூர் அருள்மிகு பட்டீஷ்வரர் ஆலயத்திலும் உள்ளது

    ReplyDelete