இறைவழிபாட்டில் ஒருவகை இயற்கை வழிபாடு. அன்பின் அடிப்படையிலும், அச்சத்தின் அடிப்படையிலும் இந்த வழிபாடு ஏற்பட்டது. இயற்கை வழிபாட்டிலும் பலவகை உள்ளது. இதில் ஒரு பிரிவுதான் விலங்கு வழிபாடு. நடப்பவை, ஊர்பவை, பறப்பவை என்ற இனங்களில் சிலவற்றை மக்கள் தெய்வமாக கருதி வழிபடுகின்றனர். பசுவை கோமாதாவாக வழிபடுகின்றனர். கருடனை திருமாலின் வாகனமாக வழிபடுகின்றனர். பாம்பை தெய்வத்தின் அம்சமாக கருதி வழிபடுகின்றனர். இதில் உள்ள மற்றொரு சிறப்பு என்னவெனில் பசுவை மனிதன் அன்பால் வழிபட்டான். பாம்பை அச்சத்தால் வணங்கினான். பாம்பு மனிதனுக்கு அச்சத்தை ஏற்படுத்தினாலும் பாம்பை கொல்வது பாவம் என்ற கருத்து இன்றும் நிலவுகிறது. பாம்பு புற்றை அகற்றுவது
பாவம் என்று இன்றும் முன்னோர்கள் கூறி வருகின்றனர். பாம்புகளில் நல்லது என அழைக்கப்படும் நாகபாம்புதான் இன்று மக்களால் வழிபடப்படுகிறது. விலங்குகளில் நல்லது என அழைக்கப்படுவது நாகப்பாம்பு மட்டும்தான். உலகம் முழுவதும் நாக வழிபாடு பிரபலமாக உள்ளது. உலகத்தை கடலில் மூழ்காமல் தாங்கி பிடித்திருப்பது பாம்புதான் என ஆப்பிரிக்கா மக்கள் நம்புகின்றனர். எகிப்து, ரோம், பாபிலோனியா, கிரேக்கம் போன்ற நாடுகளில் நாகவழிபாடு சிறப்பாக நடந்து வருவதற்கான சான்றுகள் உள்ளது. ஆஸ்திரேலியாவிலும் நாகவழிபாடு உள்ளது. ஆப்பிரிக்காவில் உயிர் உள்ள மலைபாம்பை இன்றும் வணங்குகின்றனர். நாகர் வழிபாடு சைவம், வைணவம், சமணம், பவுத்தம் என்ற நான்கு சமயத்துக்கும் பொதுவானது. சிவபெருமான் நாகத்தை தனது கழுத்தணியாக கொண்டுள்ளார். திருமால் ஆதிசேடன் என்ற பாம்பை படுக்கையாக கொண்டுள்ளார். சமண, சமய தீர்த்தங்கர் பார்சுவநாதரின் திருஉருவம் படமெடுத்த பாம்பின் அடியில் காணப்படுகிறது. புத்தசமய துறவிகள் நாகத்துக்கு கோயில் அமைத்து வணங்கி வந்ததாக ஆதாரங்கள் கூறுகிறது. இலங்கையில் பாம்பின் மேல் அமர்ந்த நிலையில், புத்தர் பெருமான் திருஉருவ சிலையை காணலாம். இந்தியாவில் பழங்காலம் தொட்டே நாக வழிபாடு சிறப்புற்று விளங்குகிறது. இந்திய வரலாற்றில் நாக வழிபாடு பற்றி விரிவாக உள்ளது. கன்னியாகுமரி காஷ்மீர் வரை நாக வழிபாடு சிறப்பாக நடந்து வருகிறது.
கோயில்களிலும், அரசமரம் மற்றும் வேம்பு மரங்களின் அடியிலும், பாம்பு புற்றிலும், தோட்டங்களிலும் நாக வழிபாடு நடக்கிறது. வடநாட்டில் நாகத்தின் பெயரால் நாகபஞ்சமி என்ற விழாவை சிறப்பாக கொண்டாடுகின்றனர். இப்படி நாடு முழுவதும் நாக வழிபாடு நடை பெற்றாலும் இந்தியாவில் பாம்பையே மூலவராகக் கொண்ட ஒரே கோயில் நாகர்கோவில் நாகராஜா கோயில் தான். மற்ற கோயில்களில் நாகராஜா சிலைகளுக்கு முக்கியத்துவம் இல்லாமல் இருக்கும். நாக பிரதிஷ்டையும், சர்ப்பக்காவும் கேரளாவிற்கு உரிய சிறப்பம்சங்களாகும். ஒரு நூற்றாண்டுக்கு முன்னர் கேரளாவில் 15 ஆயிரம் சர்ப்பக்காவுகள் இருந்தன. இன்று மன்னார்சாலை, வெட்டுக்காடு, பாம்பன் மேக்கோடு ஆகியவை பிரசித்தி பெற்ற சர்ப்பக்காவுகளாகும். மன்னார்சாலையில் ஒரு பெண் தன் வாழ்நாள் முழுவதும் கன்னியாகவே இருந்து நாகபூஜை செய்யும் வழக்கம் தற்போதும் வழக்கத்தில் உள்ளது. தமிழ்நாட்டில் திருவேற்காட்டில் எழுந்தருளியுள்ள கருமாரியம்மன் கருநாகமாக தோன்றினார் என்று தலபுராண வரலாறு கூறுகிறது. இங்கு கருமாரியம்மன் ஐந்து தலை நாகத்தின் குடை நிழலில் அமர்ந்து காட்சி தருகிறார். திருச்செங்கோடு மலைச்சரிவில் 60 அடி நீளத்தில் பாம்பு புடைப்பு சிற்பமாக செதுக்கப்பட்டுள்ளது. இங்கு பக்தர்கள் பொங்கல் இட்டு வழிபாடு நடத்துகின்றனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒரு சமுதாயத்தினர் நாகத்தை குலதெய்வமாக கொண்டு ஒடுப்பறை என்ற இடத்தில் கோயில் கட்டி வழிபடுகின்றனர். இப்படி நாக வழிபாட்டுக்காக பல கோயில்கள் இருந்தாலும் நாகர்கோவில் நாகராஜா கோயில் சிறப்பு மிக்கதாக கருதப்படுகிறது. இந்த கோயிலின் பெயரை கொண்டுதான் மாவட்ட தலைநகரான நாகர்கோவில் விளங்குகிறது. மிக பழமையான இந்த கோயில் எப்போது யாரால் கட்டப்பட்டது என்பது பற்றி தகவல் இல்லை. எனினும் ஒரு பழமையான கதை இந்த கோயில் பற்றிய தோற்றம் பற்றி கூறப்படுகிறது. கோயில் இருக்கும் இடம் பண்டைய காலத்தில் புல்லும், புதரும் நிறைந்த இடமாக இருந்தது.
இங்கு இளம்பெண் ஒருவர் புல் அறுத்து கொண்டிருந்த போது அவரது அரிவாள் ஐந்து தலை நாகத்தின் தலையில் பட்டு ரத்தம் பெருக்கெடுத்து ஓடியது. இதை கண்டு அஞ்சிய பெண் கிராம வாசிகளை அழைத்து வந்தார். மக்கள் உடனே அங்கு கோயில் கட்டி வணங்கியதாகவும், பிற்காலத்தில் களக்காடு மன்னரின் தீராத தொழு நோய் இந்த கோயில் வழிபாட்டின் லம் குணம் அடைந்ததாகவும் ஸ்தல வரலாறு கூறுகிறது. இந்த கோயிலின் உள்ளே செல்லும் போது உள்வாசலின் இருபுறமும் அமைந்திருக்கும் ஐந்து தலை நாகத்தின் படம் எடுக்கும் வடிவிலான சிலை அனைவரையும் கவரும் வகையில் அமைந்துள்ளது. இவை தர்னேந்திரன் என்ற நாகராஜன் என்றும், பத்மாவதி என்ற நாகராணி எனவும் நம்பப்படுகிறது. இந்த கோயிலின் கருவறை இன்றும் ஓலை கூரையின் கீழ்தான் உள்ளது. இந்த கூரையில் ஒரு பாம்பு காவல் புரிவதாக நம்பப்படுகிறது. இந்த ஓலைக்கூரை மாற்றி கட்டும் போது ஒரு பாம்பு வருவது வழக்கமாக உள்ளது. மூலவர் அமர்ந்துள்ள இடம் எப்போதும் ஈரமாக இருக்கும். மூலவர் இங்கு தண்ணீரில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளார். அந்த தண்ணீர் ஊற்றில் இருந்து எடுக்கப்படும் மண்தான் இக்கோயிலின் முக்கிய பிரசாதமாக கொடுக்கப்படுகிறது. இது ஆறு மாதகாலம் கறுப்பாகவும், ஆறு மாதகாலம் வெள்ளையாகவும் காட்சி தருகிறது. இங்கிருந்து மண் எடுக்க எடுக்க குறையாமல் இருப்பது அதிசயமாகும். திருமணம் நடக்க வேண்டியும், குழந்தை பாக்கியம் கிடைக்க வேண்டியும் பெண்கள் இங்கு நாகருக்கு பால் அபிஷேகம் நடத்துகின்றனர். பால் பாயாச வழிபாடு இங்குள்ள முக்கிய வழிபாடு ஆகும். பால், உப்பு, நல்லமிளகு, மரப்பொம்மைகள் போன்றவற்றையும் பக்தர்கள் இங்கு காணிக்கையாக வழங்குகின்றனர். ஆவணி மாத ஞாயிற்றுக்கிழமைகளில் இங்கு பெண்கள் கூட்டம் அலை மோதும். ஆயிரக்கணக்கான பெண்கள் வரிசையாக நன்று நாகருக்கு பால் ஊற்றுவதை காணமுடியும். ஆண்டு தோறும் தை மாதம் பத்து நாட்கள் திருவிழா நடக்கிறது. எல்லா மாதமும் ஆயில்ய நாளில் விசேஷ பூஜைகள் நடக்கிறது. ஞாயிற்றுக்கிழமை நாகராஜனுக்கு பால் வார்ப்பது புனிதமாக கருதப்படுகிறது. திருக்கார்த்திகை அன்று சொக்கப்பனை விழாவும், கந்தசஷ்டி விழாவும் இங்கு நடக்கும் இதர முக்கிய விழாக்களாகும்.
No comments:
Post a Comment