Tuesday, January 17, 2012

குங்குமம்... மங்கல மங்கையர் குங்குமம்...

சிவபெருமான், தனது மூன்றாவது விழியை பெண்ணான பார்வதியிடமிருந்தே பெற்றார் என்று புராணங்கள் கூறுகின்றன. இந்த மூன்றாவது கண் இருந்த இடம் ஆக்ஞை சக்கர மையம் என்றும், உணர்வு மையம் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த ஆற்றல் பெற்ற மூன்றாவது விழி, சிவபெருமானின் ஆற்றலை மேலும் அதிகரித்தது. தன்னுடைய ஆக்ஞை ஆற்றல் முழுவதுமாக சிவபெருமானிடம் கொடுத்துவிட்டார். அன்பினாலே உண்டாகும் இன்ப நிலைக்குள் தன்னை ஆட்படுத்திக்கொண்டாள். என்னே, உயர்ந்தவன் பார்வதிதேவி ! சிவபெருமான், தன்னிடம் சரணாகதி அடைந்த பார்வதிதேவியின் மூன்றாவது விழிச் சக்கரத்தைத் தூண்டிவிட வேண்டும் என்ற எண்ணத்தில் நெற்றியில் திலகமிட்டார். அந்தத் தூண்டுதலால், பார்வதிதேவி மாறாத உறுதியான பெண்மைத்தன்மை குறையாத ஆன்மிகப்பாதையை அடைய வழி செய்தார். சிவபெருமானுடன் ஆழ்ந்த தொடர்புடன் அவரைப் பின்பற்றி மிகவும் அதிக சக்தி வாய்ந்தவளாக பார்வதிதேவி திகழ்ந்தாள். பெண்ணின் மூன்றாம் ஆக்ஞை சக்கரம் ஆற்றல் பெற்றுவிட்டால் அவள் சரணாகதி அடையமாட்டாள் என்பதை உணர்ந்தே சிவபெருமான் இதைச் செய்தார் என்று புராணங்கள் கூறுகின்றன.

பெண் துணிச்சலுடன் தனித்து நிற்பது, சாதாரணமாகக் காணப்படும் நிகழ்வு இல்லை. பெண்ணுக்குப் பற்றிக்கொள்ள இன்னொரு கை வேண்டும் ; சாய்ந்துகொள்ள இன்னொரு தோள் வேண்டும்; யாராவது அவளை வழிநடத்திச் செல்ல வேண்டும். இதில் பெண் மகிழ்ச்சி அடைகிறாள். பெண்ணின் நெற்றியில் இடப்படும் வட்டத் திலகமானது, அதை அவள் நெற்றியில் இட்ட கணவரிடம் மாறாத, உறுதியான தொடர்பு கொண்டுள்ளதைத் தெளிவுபடுத்துகிறது. கணவனின் ஆழ்ந்த தொடர்புடன் வட்டத் திலகத்தை அவள் சரியான இடத்தில் அணிந்துகொண்டால், அவள் அவனைப் பின்பற்றி நடப்பாள். அவள் பெண்மையும் பாதிக்காது. அவளின் ஆக்ஞை மையம் தூண்டப்பெறும். அவள், கணவனுக்கு எதிராகச் செல்லமாட்டாள். அதேசமயம் அவள் மற்றவரைவிட அதிக சக்தி வாய்ந்தவளாகத் திகழ்வாள் ! தன் நெற்றியில் வட்டக் குங்குமம் இட்ட கணவனிடம் மட்டுமே மனோவசியம் செய்யப்பட்டவர்போல் பந்தப்பட்டு விடுகிறாள். அவளது மூன்றாம் விழிச் சக்கரம், வசியம் செய்த தன் கணவன் கிசுகிசுத்தாலும் தன் உணர்வு பெறுகிறாள். மற்றவரின் உரத்த குரல்கூட அவள் காதில் விழாது. அவள் தன் கணவனைச் சரணடைகிறாள். அவளது பெண்மை இயல்புக்கு எந்தக் குறையும் நேராது.

திலகம் என்பது, மிகுந்த ஆழமான கருத்து கொண்டது. சரியான இடத்தில் சரியான பொருள் கொண்டு சரியானவர் வைக்கவேண்டும். குங்குமம் அல்லாத வேறு பொருட்களுக்கு எந்தவித நன்மதிப்பும் அறிவியல் ஆதாரமும் இல்லை. அவை வெறும் அழகுக்கும் கவர்ச்சிக்கும் மட்டுமே வைப்பதாகும். திலகம் என்பது, மிகுந்த ஆழமான, அறிவியல் பூர்வமான பூரண பாதுகாப்பைக் கொடுக்கக்கூடியது. பெண்கள், இந்தத் திலகம் எனும் பொட்டை முதல்முதலின் தன் தாயின் வழியாகவும், இரண்டாம் நிலையில் கணவனால் மட்டுமே இட அனுமதிக்கப்பட வேண்டும். வேறு யாரும் தன் நெற்றியில் இட அனுமதிக்கக் கூடாது. இன்று பெண்கள் போலிச் சாமியார்களிடமும், கபடநாடக வேடதாரிகளிடமும் தன்னை அறியாமலேயே இந்தப் பொட்டு இடும் நிலையில் மயக்கப்படுகின்றனர். இதில் பெண்கள் மிக மிக விழிப்பு உணர்வோடு இருக்க வேண்டும். அம்பாள் கோயில்களில் கொடுக்கப்படும் குங்குமம் - பெண்ணின் மூன்றாம் விழிச் சக்கரத்தை நினைவுபடுத்துவதுடன் தன் கணவனை மட்டுமே பின்பற்றி நடக்க வேண்டியதன் அவசியத்தையும் அறிவுறுத்துகிறது. அம்பாளான பார்வதிதேவி, கற்பகாம்பாள், மூகாம்பிகை, சாரதாம்பாளுக்கு குங்குமத்தாலேயே ஆராதனை செய்யப்படுகின்ற உண்மையையும் நாம் உணர வேண்டும். நெற்றித் திலகம் என்பது தனக்குள் பிரத்தியேகமான அறிவியல் ஆழத்துடன் மறைந்திருக்கும் உண்மை என்பதை பெண்கள் உணர வேண்டும். அதற்கு உரிய மரியாதையைக் கொடுத்து மாசில்லா மகத்துவத்தைப் பெற்று நீடூழி வாழ வேண்டும்.

No comments:

Post a Comment