Wednesday, December 21, 2011

Narad Leela

நைமிசாரண்ய நீதிக் கதை
சாந்திப்பிரியா
ஒரு காலத்தில் நைமிசாரண்யத்தில் சௌனர் முதலிய மகா முனிவர்கள் கூடி மோட்ஷம் அடைய சரியான வழி எது என்பதைப் பற்றிய விவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கு அமர்ந்து இருந்த சூதக முனிவரை நோக்கி அவர்கள் கேட்டார்கள் ' ஹே பவித்ரமான முனிவரே, புராணங்களிலும், இதிகாசங்களிலும், தர்ம சாஸ்திரத்திலும் பல விதமான நெறி முறைகள் கூறப்பட்டு உள்ளன. மனிதர்களும், ரிஷி முனிவர்களும், ஏன் சன்யாசிகளும் கூட சாஸ்திர சம்பிரதாயங்களிலும், கடவுள் பக்தியிலும் ஈடுபட்டுக் கொண்டு இருந்தாலும், அவர்கள் அனைவருக்குமே இறுதியில் மோட்ஷம் கிடைப்பது இல்லை. சிலருக்கு மட்டுமே அது கிடைக்கின்றது. இந்த கலி காலத்தில் கடவுள் மீது மிக மிக அதிக பக்தி வைத்துக் கொண்டும், ஆலய வழிபாட்டை பிரதானமாகக் கொண்டும் இருக்கின்றார்கள். ஊருக்கு ஊர் ஆஸ்ரமங்களும், தெய்வப் பிறவிகளும், மகான்களும் பெருகிக் கொண்டே இருக்கின்றார்கள். ஆலயங்கள் போதாது என்று அங்கெல்லாம் மக்கள் சென்று இறை வழிபாட்டை கடை பிடிக்கிறார்கள். ஆனாலும் கலி காலத்தில் வாழும் மக்கள் அற்பாயுசு உள்ளவர்களாகவும், மந்த புத்தி படைத்தவர்களாகவும், வியாதிகளினால் பீடிக்கப்பட்டும் மன அமைதி இன்றியுமே இருக்கிறார்கள். இவற்றைப் பார்க்கும்போது பகவான் கண்களை மூடிக் கொண்டு இருக்கின்றாரா என மக்கள் நினைக்க மாட்டார்களா? இதற்கான காரணங்கள் என்னவாக இருக்கும் என்பதை நீங்கள் எங்களுக்கு விளக்குவீர்களா?'' என பௌயமாகக் கேட்டார்கள்.
அவர்கள் அனைவரும் கூறியதைக் கேட்ட சூதக முனிவர் கூறினார் ' ரிஷி, முனிவர்களே, நீங்கள் கூறிய அனைத்துமே உண்மைதான். ஆனால் அவற்றுக்கு மூல காரணம், நம் மனதில் இருந்து நாம் எதை விலக்கி வைத்து இருக்க வேண்டுமோ அதை விலக்கி வைக்காமல் எத்தனைதான் கடவுள் மீது பக்தி செலுத்தி வந்தாலும், பக்தி என்பது வேறு, ஆஸாபாசங்கள், இச்சைகள் வேறு என நாம் நம்மக்குள் நாமே ஒரு எல்லையை வகுத்துக் கொண்டு விட்டதினால்தான் நமக்கு நாம் செலுத்தும் பக்தி முழுமையான பக்தியாக அமைந்து இருப்பதில்லை. முக்கியமாக பலவிதமான விரும்பத்தகாத உணர்ச்சிகளே மனிதர்களின் மனதில் அலை பாய்ந்து கொண்டும் அவர்களை ஆக்ரமித்திக் கொண்டும் இருப்பதினால் அவர்கள் எத்தனை விதமான இறை பக்தியை மேற்கொண்டாலும், அவர்கள் பக்தி முழுமையாக இருப்பது இல்லை. இறை பக்தி செலுத்தும்போது எதை அடக்காவிடிலும் பொருளாசையும், காமத்தையும் அல்லவா அடக்கிக் கொள்ள வேண்டும். ஆஸாபாசங்கள், இச்சைகள் என நம் மனதை களங்கப்படுத்திக் கொண்டே இருந்து கொண்டு சற்று நேரம் பக்தி செலுத்தி விட்டு நமக்கு முக்தி வேண்டும், ஆண்டவனின் அருள் வேண்டும் என எதிர்பார்ப்பது நியாயமில்லையே. ''
அதைக் கேட்டு ''சூதக முனிவரே, நீங்கள் கூறுவது அனைத்தும் சரி. ஒப்புக் கொள்கிறோம். ஆனால் ஆடி-ஓடி ஒய்ந்து விட்டவர்கள் , தினமும் ஆலயங்களுக்கு சென்று வணங்கித் துதித்தபடி, ஆலயங்களில் முழு நேர சேவைகளை செய்தபடி, ஆஸ்ரமங்களில் தன் சேவைகளை தொடர்ந்தபடி புனிதமான அந்த இடங்களில் தம் வாழ்கையை ஓட்டிக் கொண்டு இருப்பவர்களுக்கு குடும்பத்தின் மீதான ஆசைகள் வேண்டுமானால் இருக்கலாம், காமங்கள் போன்ற இச்சைகள் எப்படி இருக்க முடியும் ? அது எப்படி அவர்களுக்குப் பொருந்தும் ? அவர்களுக்கும் ஏன் முக்தி கிடைப்பது ?'' என சிலர் கேட்டபோது, இதை விளக்க நாரத முனிவர் நடத்திய நாடகத்தைக் கூறுகிறேன் கேளுங்கள் என்று கூறி விட்டு நாரத முனிவர் நடத்திய லீலையைக் கூறினார்.
நாரத முனிவர் அஸ்த்தைய தேவனுக்கு
விளக்குகிறார்
ஒரு முறை அஸ்த்தைய தேவன் என்ற மன்னன் நாரத முனிவரை சந்தித்தான். அவன் திருமாலின் பெரும் பக்தன். திருமாலை வேண்டி பல வரங்களை பெற்றவன். நாரதரை சந்தித்தவருக்கு மேற் கூறிய விஷயம் பற்றிய சந்தேகம் எழுந்ததினால் அதற்கு அவரிடம் விளக்கம் கேட்டார் '' நாரத முனிவரே, எனக்கு ஒரு சந்தேகம். என் நாட்டில் அனைவரும் கடவுள் பக்தி கொண்டு ஆலய வழிபாடுகளை செய்த வண்ணம், சச்சரவின்றி வாழ்ந்து கொண்டு இருக்கின்றார்கள். நாட்டில் கொள்ளை இல்லை, கொலை இல்லை, பெண்கள் பாதுகாப்பாக இருக்கின்றார்கள், நீதியும் நேர்மையும் தலை தூக்கி நிற்கின்றன. ஆலயங்களிலும், ஆஸ்ரமங்களிலும் மக்கள் வெள்ளம் அலை மோதியபடி உள்ளது. மகான்கள் அங்காங்கே பிரவசனம் செய்து மக்களை ஆன்மீகத்தின்பால் ஈர்த்துக் கொண்டு வருகிறார்கள். நான் மேலும் மேலும் ஆலயங்களைக் கட்டுவதில் மன நிம்மதி பெறுகிறேன். ஆனாலும் ஒரு சின்ன சந்தேகம் மனதில் அவ்வப்போது எழுகின்றது. இத்தனை நல்ல நிகழ்வுகள் நடந்து கொண்டே இருந்தாலும், என் நாட்டில் கடவுள் மீது மிக மிக அதிக பக்தி வைத்து இருக்கும் மனிதர்கள், ஆலயங்களுக்கு தவறாமல் சென்று வழிபாட்டு பக்திபூர்வமாக உள்ளவர்கள் என அனைவருமே அற்பாயுசு உள்ளவர்களாகவும், மந்த புத்தி படைத்தவர்களாகவும், வியாதிகளினால் பீடிக்கப்பட்டும், மன அமைதியை இழந்துமே காணப்படுகிறார்கள். வீடுகளிலும், நாட்டிலும் சுபீட்ஷம் இல்லை, இவற்றை எல்லாம் பார்க்கும்போது நாம் பக்தி எனும் பெயரில் செல்வத்தை விரயம் செய்து, பொன்னான வாழ்கையையும் வீணாக்கிக் கொள்கிறோமோ என அவ்வப்போது வெறுப்பு ஏற்படுகின்றது. அதன் காரணம் என்ன என எனக்கு விளக்க வேண்டும்.
நாரதர் சிரித்தார்,'' மன்னா நீ கூறுவது சரிதான். நாம் கேட்பதற்கும், பார்ப்பதற்கும், நடைபெறும் நிகழ்ச்சிகளுக்கும் வித்தியாசம் மிக அதிகம். நாம் வெளிப்படையாக தெரிவதை மட்டுமே நம்புகிறோம். எதையும் ஆராய்ந்து பார்ப்பது இல்லை. பக்தி என்பது புனிதமானது. அதை மக்கள் கொச்சைப்படுத்துகிறார்கள். அதனால்தான் பக்தி பெருகுவது போல வெளித் தோற்றம் தந்தாலும், பெருகுவது பக்தி அல்ல, ஆசாபாசங்களும், காமங்களுமே. அது வெளியில் தெரிவது இல்லை. அதனால்தான் எத்தனை ஆலயங்கள் தோன்றினாலும் , கடவுளுக்கு பூஜைகளும், ஹோமங்களும் செய்யப்பட்டாலும், அதில் கலந்து கொள்பவர்கள் அனைவருமே நன்மை பெறுவார்கள் என்பது கிடையாது. கலிகாலத்தில் ஆலயங்களுக்கும், ஆஸ்ரமங்களுக்கும் செல்வது ஒரு கௌரவமாக கருதப்படுகிறது. அங்கு செல்வதும் அனைவருமே பக்தி பூர்வமாக வணங்குபவர்கள் அல்ல. பலருக்கு அந்த இடம் ஒரு பொருட்காட்சி சாலையைப் போல அல்லவா உள்ளது. தாம் என்ன செய்கிறோம் என்பதை உணர்ந்து கொள்ளாமல் புனிதமான ஆலயங்களில் சென்று இன்னும் பாவங்களை பெருக்கிக் கொள்கிறார்கள். அதனால்தான் எத்தனை ஆலயம் தோன்றினாலும் , பூஜைகளும் செய்தாலும், பக்தி மார்க்கம் பெருகினாலும், உண்மையான பக்தி இல்லாதவரை நல்லவை நடைபெறுவதே இல்லை. உன் நாட்டில் உள்ளவர்கள் காட்டும் இறை பக்தி எத்தகையது என்பதை பார்த்து விட்டு அதற்கான விடையை நீயே தெரிந்து கொள் என்றவர் மாறு வேடத்தில் மன்னனை அழைத்துக் கொண்டு சில ஆலயங்களுக்கும் ஆஸ்ரமங்களுக்கும் சென்றார்.
மனசு எங்கே போகிறது பார்த்தாயா ?
ஆலய சன்னதியில் அதிக மக்கள் இல்லை. வந்திருந்தவர்களில் நடுத்தர வயதினர், கிழவர்கள்,யுகவதிகள் என பலதரப்பட்டவர்களும் இருந்தார்கள். எடுப்பாக உடை அணிந்து கொண்டு வந்து சன்னதியில் நின்று இருந்தார்கள். அர்ச்சகர் பூஜை செய்தவாறு இருந்தார். உண்மையான பக்தி கொண்டவர்கள் சன்னதியில் இருந்த கடவுளின் சிலையை பார்த்தபடி கண்களை மூடிக் கொண்டு ஸ்லோகங்களை கூறிக் கொண்டு இருந்தார்கள். கண்களை திறந்தாலோ தெய்வ சிலையைத் தவிர வேறு எங்குமே பார்க்கவில்லை. ஆனால் ஆண்களில் சிலர் அழகிய பெண்களை நோக்கிக் கொண்டும், இடையிடையே பூஜையை நோக்கியவாறும் இருந்தார்கள். பாதி கவனம் சன்னதிக்குள்ளும், பாதி அழகை ரசிப்பதிலுமே இருந்தது. அதில் ஆச்சர்யம் என்ன என்றால், அப்படி இருநிலை கொண்டு இருந்தவர்களில் சில வயதானவர்களும் அடக்கம். சில நிமிடங்கள்தான் அத்தனை காட்சிகளும், ஆனால் அதிசயமாக அத்தனை பேரும், அர்ச்சகர் மணியடித்தபடி கல்பூர ஹாரத்தி எடுக்கத் துவங்கியதும் கனவு கலைந்தது போல தெய்வங்களின் சிலையை பார்த்தவாறு பக்தி பூர்வமாக வேண்டி வணங்கினார்கள். அது முடித்ததும், ஆலயவளாகத்துக்குள் மீண்டும் அவரவர்கள் பார்வை அவ்வப்போது அங்காங்கே திரும்பியது. மொத்தத்தில் பக்தி கால் பாகம், காம எண்ணங்களும் பிற எண்ணங்களும் அலை பாய்ந்து கொண்டு இருந்தது மீதி பாகம்.
உண்மையான பக்தி இல்லாமல் இல்லை.
அதுவும் சிலரிடம் உள்ளது.
பெண்கள் பக்கம் நோக்கினாலோ, அவர்களில் உண்மையான பக்தி கொண்டவர்கள் சன்னதியில் இருந்த கடவுளின் சிலையை விட்டு தனது கண்களை அசைக்கவில்லை. ஆனால் வேறு சிலரோ வைத்த கண்ணனை நகர்த்தாமல் மற்றப் பெண்கள் அணிந்து இருந்த புடவைகளையும், நகைகளையும் பார்த்தவாறு இருந்தபடி, இடையிடையே கடவுள் சன்னதியை நோக்கிக் கொண்டு இருந்தார்கள். அவர்கள் அணிந்து இருந்த உடையோ காம உணர்ச்சியை தூண்டுவதாகவே இருந்தது. அவர்கள் பாவனையோ அழகை வெளிப்படுத்தவே அங்கு வந்தது போல இருந்தது.
வயதானவர்களோ நடுநடுவே எதையோ பேசிக் கொண்டே அவ்வபோபது சன்னதிக்குள் நோக்கியபடி இருந்தார்கள். இந்த காட்சியும் சில நிமிடங்கள்தான் என்றாலும் அர்ச்சகர் மணியடித்தபடி கல்பூர ஹாரத்தி எடுக்கத் துவங்க அந்த சப்தத்தைக் கேட்டு கனவு கலைந்தது போல தெய்வங்களின் சிலையை பார்த்தவாறு நின்றபடி பக்தி பூர்வமாக வேண்டி வணங்கினார்கள். அது முடித்ததும், மீண்டும் அவரவர்கள் பார்வை மீண்டும் அவ்வப்போது அங்கும் இங்கும் அலைந்தது. மொத்தத்தில் பக்தி கால் பாகம், காம எண்ணங்களும் பிற எண்ணங்களும் அலை பாய்ந்து கொண்டு இருந்தது மீதி பாகம்.
நாரதர் சிரித்துக் கொண்டே அந்த சஞ்சலமான இருத்தலை மக்கள் மனதில் ஓடுவது என்ன என்பதையும், அவர்கள் என்ன பேசிக் கொண்டு இருக்கிறார்கள் என்பதையும் உனக்குக் காட்டுகிறேன் பார் என்று கூறியபடி அவனை கண்களை மூடிக் கொண்டு அமருமாறு கூறினார். மூடிக் கொண்ட மன்னன் கண்களுக்குள் ஆலயக் காட்சிகள் தெரிந்தன.
ஒருவன் நினைத்தான் ''ஆஹா, எத்தனை எடுப்பாக அவள் இருக்கிறாள், எனக்கு இப்படி ஒருவள் கிடைத்தால்....''
இன்னொருவன் அவள் அங்க அவயங்களை வெகுவாக ரசித்துக் கொண்டு இருந்தான்.
இன்னொருவன் அங்கிருந்த இரண்டு பெண்களின்- தாயும், மகளையும் - பார்த்து அவர்களின் நடை அழகையும், முக அழகையும் எடைப் போட்டுக் கொண்டு அவர்கள் எண்டு இருப்பார்கள் என எண்ணியவாறு இருந்தான்.
அடுத்து பெண்களின் காட்சி தெரிந்தது:
ஒருவள் தன் தோழியிடம் சற்று தள்ளி நின்று கொண்டு இருந்தவளைக் சைகையால் காட்டி கூறிக் கொண்டு இருந்தாள் '' அவள் காதில் உள்ளது எட்டுக் கல் பேஸரியை பார்த்தாயா?''
இன்னொருவள் மனதில் ''ஆஹா...அந்தப் புடவையை எங்கே வாங்கி இருப்பாள்? ''
இன்னொருவள் '' அந்தப் பையனின் டிரஸ் அழகாக இருக்கிறது இல்லை? ''
வயதானவர்கள் காட்சி:
ஒருவள் இன்னொருவளிடம் கூறிக் கொண்டு இருந்தால் 'வரவர என் நாட்டுப் பெண் ஒழுங்காக சமைப்பதே இல்லை. ஊரை சுற்றிக் கொண்டே இருக்கிறாள். தரித்திரம் என் பிராணன் போகிறது '
இன்னொருவள் ' இந்த மாசம் என்ன செய்வது என்றே தெரியலை. ஏகப்பட்ட செலவு. இதில் ஊருக்கு வேறு பணம் அனுப்பனும்'.
இன்னொருவர் ' பேசாமல் வயதானோர் இல்லத்துக்கு போய் விடு என்று என் மகன் கூறுகிறான். வீட்டில் நிலைமையே சரி இல்லை'.
இப்படியே பல விதமான தேவை அற்ற சம்பாஷணைகள்.
ஆனால் அதே சமயத்தில் பக்தி பூர்வமாக வேண்டிக் கொண்டு இருந்தவர்கள் மனதில் கடவுளை வேண்டிக் கொண்டே இருந்தார்கள் ' தெய்வமே, என் பிரச்சனையை நீதான் தீர்த்து வைக்க வேண்டும். உனக்கு உண்டியலில் காசு போடுகிறேன், விரதம் எடுக்கிறேன், நீதான் எனக்கு வழிகாட்ட வேண்டும்' . அவர்கள் மனதை அங்கு முழுமையாக ஆக்ரமித்துக் கொண்டு இருந்தது கடவுளே.
நாரதர் கூறினார் 'பார்த்தாயா மன்னா, இதைதான் பக்தி என்கிறாயா ?' மன்னன் வெட்கி தலை குனிந்து கொண்டான். அவனால் பதில் தர முடியவில்லை. நாரதர் மீண்டும் கூறினார் ' மன்னா பக்தி என்பது ஆத்மார்த்தமாக வர வேண்டும். மனதில் ஆழமாக இருக்க வேண்டும் . குடும்பஸ்தர்கள் அவரவர் வீட்டில் அவரவர் கடமையை செய்து கொண்டு இருந்தாலும்- கணவனாக மனைவியுடனும், மனைவியாக கணவனிடமும் தந்தையாக குழந்தைகளிடமும், மனிதாபிமான மிக்க மனிதர்களாக சமூகத்திலும் இருக்க வேண்டும். கணவன்-மனைவிக்கு இடையே உருவாகும் காமத்தையும், ஆசைகளையும், ஆசாபாசங்களையும், விருப்பு வெறுப்புக்களையும் ஆலய சன்னதியிலும் , பூஜைகள் நடைபெறும் இடங்களிலும், யாகசாலைகளிலும் வெளிப்படுத்தலாமா? ஆலய சன்னதிகள் வீண் பேச்சு பேசுவதற்கான இடம் அல்ல. அங்கு இறைவன் தியானத்தை தவிர வேறு எதுவுமே இல்லாமல் இருந்தால்தான் அது பக்தி என்பதாகும். வீட்டிலே உள்ள பிரச்சனைகளை ஆலயத்தில் தெய்வத்திடம் கூறாமல் அவரவர் பேசிக் கொண்டு இருந்தால் எப்படி ? அதை வெளியிலேயே பேசிக் கொள்ளலாமே. இப்படியாக புனித இடங்களில் செய்யும் தவறுகளினால் அவர்களுடைய பாபங்கள் அதிகரித்துக் கொண்டேதான் போகின்றனவே தவிர, குறைவதே இல்லை.கடவுளின் அருள் கிட்டுவதும் இல்லை. எப்போது இப்படிப்பட்ட காம, ஆசாபாச மற்றும் பிற உணர்வுகளை நம்மால் புனித இடங்களில் கூட அடக்க முடியவில்லையோ, கடவுள் எனக்கு கருணைக் காட்டுவதில்லை என்று அவர்கள் கடவுளை நொந்து என்னப் பயன் ? அவர்களுக்கு முக்திதான் கிடைக்குமா ?
சூதக முனிவர் இந்தக் கதையைக் கூறிவிட்டு கேட்டார் '' இது பற்றி நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள்?'' முனிவர்கள் மௌனம் சாதித்தார்கள்.

--பின் குறிப்பு: - இந்தக் கதை காலத்துக்கு ஏற்ப சிறிது மாற்றம்
செய்து தரப்பட்டு உள்ளது . மன்னிக்கவும் --

Monday 19 December 2011

Mayil Ravan and Panchmuki Hanuman

மயில்ராவணன் கதையும்
பஞ்சமுக ஆஞ்சனேயரும்
சாந்திப்பிரியா

பஞ்சமுக ஆஞ்சனேயர் அவதாரத்தைப் பற்றிய சில சுவையான செய்திகள் உள்ளன. மயில்ராவணன் ராம-லஷ்மணர்களை கடத்திக் கொண்டு போன போது, ஐந்து வண்டுகள் உருவில் இருந்த அவனை கொல்ல ஆஞ்சனேயர் ஐந்து முகங்களைக் கொண்ட அவதாரத்தைப் பெற்றுக் கொண்டு அங்கு செல்ல வேண்டி இருந்தது. அதனால் ஐந்து முகம் எடுத்துச் சென்றார். அந்த அவதாரத்தில் மயில் ராவணனைக் கொன்றப் பின், இராமாயண யுத்தம் முடிந்து அனைவரும் தத்தம் இடங்களுக்கும் செல்லத் துவங்கியபோது, பஞ்சமுகி அவதாரத்தைக் கொண்டு பூலோகத்திலேயே தங்க விரும்பிய ஆஞ்சனேயரை மனித குலத்தில் தீமைகளை அழிக்கவும், வேண்டுவதைக் கொடுப்பதற்கும், வியாதிகளை குணப்படுத்தவும், செல்வத்தை தரவும் மற்றும் அஞ்சானத்தை விலக்கி ஞானத்தையும் தரவும் ராமபக்த ஹனுமான் கோலத்திலும், ஐந்து முக அவதாரத்திலும் பூலோகத்தில் வந்து தங்க ராமபிரான் அனுமதித்தாராம்.
இனி மயில் ராவணன் கதையையும் ஹனுமார் எப்படி பஞ்சமுக அவதாரத்தைப் பெற்று அவரை அழித்தார் என்பதையும் படியுங்கள்.
இராமாயண யுத்தம் துவங்கியது. பல நாட்கள் தொடர்ந்து நடந்த யுத்தத்தில் முடிவாக போரில் ராவணனே நேரில் வந்து ராமருடன் மோதினார். பல நாட்கள் தொடர்ந்த அந்த சண்டையில் ஒரு கட்டத்தில் ராவணன் தனது அனைத்து ஆயுதங்களையும் இழந்து நின்றபோது, ராமர் அவரை' இன்று போய் நாளை வா' என - அப்போதாவது சீதையை அவர் தன்னிடம் மீண்டும் ஒப்படைத்து விடுவார் என நினைத்தே- இன்னொரு நாள் நேரம் கொடுத்தார். மேலும் ஆயுதங்களை இழந்து நிராயுதபாணியாக உள்ளவனை ஆயுதம் ஏந்திக் கொல்வது யுத்த தர்மம் ஆகாது என்பது ராமருக்கு தெரியும் என்பதினாலும் யுத்த தர்மத்தைக் கடைபிடிக்க அப்படி ஒரு முடிவை ராமர் அறிவித்தார்.
மாயாவி மயில் ராவணன் பல
அடுக்கு கோட்டைக்குள் இருந்தான்
மனம் துவண்டு போன ராவணன் வீடு திரும்பிய போது அவனுக்கு தனது சகோதரனான மயில் ராவணனின் நினைவு வந்தது. மயில் ராவணன் ஒரு மாயாவி. அவன் பல ரூபங்களை எடுப்பவன். பல கடவுட்களிடம் இருந்தும் பல வினோத வரங்களைப் பெற்று இருந்தவன். பாதாளத்தின் அதிபதி. எழு கடலை தாண்டி வசித்தவன் . அவனை அழைத்து தன்னுடைய பிரச்சனையை ராவணன் அவனிடம் கூற, அவன் ராம-லஷ்மணர்களை மாயாவி உருவில் சென்று தூக்கிக் கொண்டு போய் காளிக்கு பலியிடுவதாக சபதம் செய்து விட்டு அவர்களை தூக்கி வரப் போனான். அவன் பலத்தையும், மாயாவி தன்மைகளையும் அறிந்திருந்த விபீஷணன் அது குறித்து ஹனுமாரிடம் கூற ஹனுமானும், ராம -லஷ்மணர்களை ஒரு பெட்டி போன்ற அமைப்பில் பத்திரமாக வைத்து அதை சுற்றி தனது வாலினால் பெரிய கோட்டைப் போல சுற்றி வைத்து விட்டு அவர்களுக்கு பாதுகாப்பாக வாலின் மீதே அமர்ந்து கொண்டு இருந்தார்.
முதலில் மயில் ராவணனின் அமைச்சரான சதுரன் என்ற அரக்கன் அங்கு சென்று அவர்களை தூக்கி வரச் சென்றபோது, ஹனுமானிடம் மோதி அந்த சண்டையில் அவன் இறந்து போனான். அதனால் அவனை அடுத்து இரண்டாவது மந்திரியான சாந்தியன் என்பவன் ஒரு பறவை உருவில் மேலுலகத்துக்கு சென்று அங்கிருந்து பறந்து வந்து மேல் வழியே வாலுக்குள் நுழைய முயற்சி செய்தான். அப்போது எதேர்ச்சையாக அவன் ஹனுமானின் வாலில் பட்டுவிட ஹனுமான் அவனை தனது வாலினாலேயே நசுக்கிக் கொன்றார். மயில்ராவணன் பார்த்தான். இனி மாயாவித்தனத்தால் மட்டுமிய அதை சாதிக்க முடியும் என்பதை உணர்ந்தான். ஒரு நாள் விபீஷணன் நதியில் குளிக்கச் சென்று இருந்தபோது, அந்த நேரத்தில் அவன் உருவிலே ராம-லஷ்மணர்களை காணச் சென்றான். ராம-லஷ்மணர்களை காணச் செல்ல வேண்டும் எனில் ஹனுமானின் வாய் வழியேதான் செல்ல வேண்டும். விபீஷணன் உருவில் இருந்த மாயாவியான மயில் ராவணனை விபீஷணன் என நினைத்த ஹனுமார் தன் வாயைத் திறக்க மயில் ராவணனும் அவரது வாய் வழியே உள்ளே சென்று, ராம-லஷ்மணர்களை மயக்கம் அடையச் செய்து அவர்களை தூக்கிக் கொண்டு ஹனுமானின் வாய் வழியே வெளியில் வராமல் காது வழியே வெளியேறி பாதாளத்தை அடைந்து அவர்களை ஒரு பெட்டியில் வைத்து பூட்டி விட்டு, காளி பூஜையை துவக்கினான்.
குளித்துவிட்டு ஹனுமாரிடம் வந்த வீபிஷணனிடம் 'இப்போதுதானே நீங்கள் ராம லஷ்மணர்களைப் பார்த்து விட்டு வந்தீர்கள்' என ஹனுமான் கேட்க நடந்த விபரீத்தை புரிந்து கொண்ட விபீஷணன் ஹனுமாரிடம் நடந்ததைக் கூற 'ஐயோ மோசம் போனோமே' என அவர்கள் கவலை அடைந்து எப்படி அவர்களைக் காப்பாற்றுவது என யோசனை செய்தார்கள். விபீஷணன் கூறிய யோசனைப்படி ஹனுமான் பாதாள இலங்கைக்குப் போகும் வழியை கேட்டறிந்து அங்கு சென்றார். அரண்மனையை பாதுகாக்க ஏழு அடுக்காக பித்தளை, தாமிரம், வெள்ளி, இரும்பு, பவளம், முத்து மற்றும் வெண்கலம் போன்றவற்றால் கட்டப்பட்டு இருந்த கோட்டைகளைக் கடந்து உள்ளே செல்வது சுலபம் அல்ல. அது சிக்கல் நிறைந்த வழி. பலமான மாயாவிக் காவல் வேறு இருக்கும். அவற்றைக் காவல் காத்து வந்தவர்களும் மாயாவி கலையை பயின்ற வலிமை மிக்கவர்கள். ஹனுமாருக்கு மாயாவி கலை தெரியாது என்பதினால் தந்திரத்தால் மட்டுமே உள்ளே போக முடியும் என்பதை உணர்ந்தார்.
மயில் ராவணனுக்கு பல ரூபங்கள் உண்டு.
அவனைக் கண்டு பிடிப்பது எளிதல்ல
அனைத்தையும் யோசனை செய்து பார்த்தவர் முதலில் முதல் கோட்டையை அடைந்தவர் அங்கு காவலுக்கு இருந்த மச்சவல்லபன் என்பவனுடன் தனியாக போரிட வேண்டியதாக இருந்தது. மச்சவல்லபனுடன் போரிட்ட ஹனுமார் களைப்படைந்தார். அவனைக் கொல்ல முடியவில்லை. அவனும் களைப்படைந்தான். அவனாலும் ஹனுமாரை வெல்ல முடியவில்லை. ஆனால் அதே நேரத்தில் இருவரையும் எதோ பந்தம் இணைத்ததை உணர்ந்தார்கள். யுத்தத்தில் களைப்படைந்த இருவரும், மனம் விட்டுப் பேசினார்கள். அவனிடம் தான் வந்த காரியத்தை எடுத்துரைத்து தனக்கு உதவ வேண்டும் எனக் கேட்டார். மேலும், அவன் யார், எப்படி இத்தனை வலிமை கிடைத்தது என ஹனுமார் கேட்க , அவனோ தான் வாயுவின் ஒரு பேரன் என்றும், அவர் மூலம் பல வரங்களையும் பெற்றவன் என்றும் கூறி விட்டு, சந்தர்ப்பவசத்தால் தான் கடலுக்கு வந்து வாழ வேண்டி வந்துள்ளது என்றும், தன் வலிமையைக் கண்டே தன்னை மயில் ராவணன் தன்னுடைய கோட்டைக் காக்க நியமித்து உள்ளான் என்றும் கூற, அதைக் கேட்ட ஹனுமாரும் தன்னைப் பற்றிக் கூறி, தானும் வாயுவின் குமாரரே என்பதை தெரியப்படுத்த, இருவரும் இணைந்தார்கள் . அப்போதுதான் இருவருக்கும் புரிந்தது வாயுவின் சக்தியை இருவருமே பெற்று இருந்ததினால்தால் ஒருவரை ஒருவரால் வெல்ல முடியவில்லை என்பது. அதே நேரம் தன்னுடைய தந்தை ஸ்தானத்தில் இருந்த ஹனுமாரை தடுக்க அவன் மனம் விரும்பவில்லை. ஆனால் தான் மயில் ராவணனின் காவலர் என்பதினால் தர்மத்தை மீறி அவரை உள்ளே விட முடியாமல் இருப்பதால், தன்னை வெல்லும் உபாயத்தையும், கோட்டைக்குள் போகும் உபாயங்களையும் விவரமாக ஹனுமாரிடம் கூறினான்.
அவன் கூறியதைப் போல ஹனுமார் அவன் முகத்தில் ஓங்கிக் குத்து விட அவன் மயக்கம் அடைந்து விட அவர் கோட்டைத் தாண்டி உள்ளே சென்றார். அதன் பின் ஏழு அடுக்காக பித்தளை, தாமிரம், வெள்ளி, இரும்பு, பவளம், முத்து மற்றும் வெண்கலம் போன்றவற்றால் கட்டப்பட்டு இருந்த கோட்டைகளை காவல் காத்துவந்த அரக்கர்களுடன் போர் புரிந்து அவர்களைக் கொன்றப் பின் உள்ளே நுழைந்து ஒரு நந்தவனத்தில் பதுங்கி இருந்தார். முதலில் ராம-லஷ்மணர்கள் எங்கே ஒழித்து வைக்கப்பட்டு இருக்க வேண்டும் என்பதை அறிந்து கொல்ல வேண்டும். அது பற்றி யோசனை செய்து கொண்டு இருந்தபோது, தூரத்தில் யாரோ ஒரு பெண் அழுவது கேட்டது. அவள் யார் என்று அருகில் சென்று பார்த்தபோது அவள் சங்கலியால் கட்டப்பட்டு இருந்ததைக் கண்டு அவள் கதையைக் கேட்டார் . தான் எந்தப் பெண்ணையும் தொடக் கூடாது என்ற சபதத்தில் உள்ளதினால் அவளை தன்னால் விடுவிக்க முடியாது என்பதைக் கூறி விட்டு அவளது கதையைக் கூறினால் வேறு விதத்தில் அவளை விடுவிக்க முயலுவதாக கூற அவள் அழுது கொண்டே தன் கதையைக் கூறினாள், 'ஐயா, நான் மயில் ராவணனின் சகோதரிகளில் ஒருவள். ஒரு அசரீரி மூலம் மயில் ராவணனுக்கு பிறகு என்னுடைய பிள்ளையே பட்டத்தை அடைவான் என்பதைக் கேட்டு அறிந்த மயில் ராவணன்என் குமாரனையும் மாயத்தினால் கட்டி சிறை பிடித்து வைத்து உள்ளான். எங்களைக் காப்பாற்ற முடியாமல் என் கணவர் தூரதண்டி என்பவரையும் பயமுறுத்தி தன்னுடன் வைத்துக் கொண்டு உள்ளார். மயில் ராவணன் ராம-லஷ்மணர்களை காலி தேவதைக்கு பலிதர ஏற்பாடு செய்துள்ளார். ராம-லஷ்மணர்கள் பலியிடப்பட்டப் பின் பிறகு காளி தேவதைக்கு எங்களையும் பலியிடப் போகின்றான். அது என் கணவருக்கு தெரியாது .ஆகவே என்னையும், என் மகனையும் எப்படியாவது காப்பாற்று ' எனக் கேட்க ஹனுமாரும், முதலில் நீ ராம-லஷ்மணர்களை அடைத்து வைத்துள்ள இடத்தைக் கூறினால் அவர்களை மீட்டு பாதுகாத்தப் பின் உன்னையும் விடுவிக்கிறேன் என்றார்.
அவளும் தூரதண்டியை அழைக்கும் உபாயத்தை ஹனுமாருக்கு கூறினாள். தூரடண்டி அங்கு வந்ததும் அனைத்து விவரத்தையும் அவரிடம் கூறிவிட்டு, ஹனுமாருக்கு உள்ளே செல்ல உதவுமாறும் அவர் தன்னையும், தன் மகனையும் காப்பாற்றுவார் என்றும் கூறினாள். அவளும் ராம-லஷ்மணர் அடைத்து வைக்கப்பட்டு உள்ள இடத்துக்கு செல்லும் ரகசிய வழியையும், வித்தையையும் அவர்களுக்கு எடுத்துரைத்தாள். தூரதண்டி ஹனுமாரை சிறு வண்டு உருவம் எடுக்குமாறுக் கூறிவிட்டு , அதை மாங்காயில் பதுக்கி வைத்து, அதை நீர் குடத்தில் மறைத்து வைத்து எடுத்துச் சென்றார். வழியில் அவர்களை எதிர்த்த அசுரர்களை அவர்கள் இருவரும் சேர்ந்து அழித்தார்கள் . அதன் பின் ஹனுமார் அவள் கூறி இருந்தபடி வண்டு உருவில் உள்ளே நுழைந்து காளி கோவிலுக்குள் மாயத்தினால் கட்டப்பட்டு மயங்கிக் கிடந்த ராம- லஷ்மணர்களையும் பெட்டியுடன் தூக்கி , மாற்று ரகசிய வழிமூலம் வெளி வந்து ஒரு பாதுகாப்பான இடத்தில் வைத்தார். பூமாதேவியிடம் அவர்களை தான் வரும்வரை பாதுகாக்குமாறு வேண்டிக் கொண்டு சென்றவர் தனக்கு உதவிய அந்தப் பெண்ணின் மகனையும் மீட்டு வந்தார். அவர்களை மாயத்தினால் கட்டி வைத்துள்ள மயில் ராவணனைக் கொன்றால் மட்டுமே அவர்களது சங்கலியை அறுக்க முடியும் . அவனையோ கொள்வது கடினம். காரணம் அவன் தனது உயிரை ஐந்தாகப் பிரித்து ஐந்து இடங்களில் வண்டுகள் உருவில் பதுக்கி வைத்து இருந்தான். அவன் உயிர் நிலைகளான ஐந்து வண்டுகளும் ஹிமாலய பர்வதத்தில் வைக்கப்பட்டு இருந்தன. இதற்கு இடையே ஹனுமான் ராம - லஷ்மணர்களை ஹனுமார் மீட்டுக் கொண்டு சென்று விட்டதை அறிந்த மயில் ராவணன், அவரைக் கொல்ல மாய பூதத்தை முதலில் அனுப்பினான். ஆனால் அதையும் ஹனுமாரால் தோற்கடிக்க முடியவில்லை. அவர் திணறினார்.
யுத்தத்திலும் அவனைக் கொல்வது கடினம்.
எங்கு இருக்கிறான் என்பதே தெரியாதபோது
எப்படி அவனை கொல்வது?
அப்போது தர்ம தேவதை ஹனுமாரிடம் சென்று மயில் ராவணனின் யாக சாலையை முதலில் அழிக்குமாறு கூறியது. அது மட்டும் அல்ல அவன் மகாவிஷ்ணுவின் சுதர்ஷன சக்கரத்தையும் திருடிக் கொண்டு வந்துள்ளதினால் விஷ்ணுவும் பலம் இழந்து கவலையுடன் இருக்கின்றார் எனவும், அவரிடமும் யோசனைக் கேட்குமாறு கூறி விட்டு மறைந்தது. அதைக் கேட்டு ஹனுமான் மாய பூதத்துடன் சண்டை இடுவதை நிறுத்திக் கொண்டு யாகசாலையை அடைந்து அங்குள்ள யாக குண்டங்களை முதலில் அழிக்க பூதம் மறைந்தது. தன் சக்தியை பயன்படுத்தி அனுப்பிய மாய பூதம் மறைந்து போய் விட்டதினால் அடுத்து மயில் ராவணனே நேரடியாக யுத்தத்துக்கு வந்தான். இருவரும் நேருக்கு நேர் மோதிக் கொள்ளாமல் மறைந்து மறைந்தே சண்டை போட வேண்டி இருந்தது. காரணம் அவன் பிரயோகித்துக் கொண்டே இருந்த மாய வித்தைகளே. ஹனுமாரும் அவனை எத்தனை முறை வெட்டினாலும் அவன் மீண்டும் மீண்டும் உயிர் பிழைத்து எழுந்ததைக் கண்டு கவலையுற்றார்.
உடனே மெல்ல அங்கிருந்து கிளம்பிச் சென்று, தான் மறைந்து இருந்த சோலைக்கு வந்து விஷ்ணுவை நினைத்து பிரார்த்தனை செய்ய அவர் முன் தோன்றிய விஷ்ணு பகவான், மயில் ராவணனைக் கொல்ல வேண்டும் எனில் அவர் ஐந்து சக்தி வாய்ந்த முகங்களைக் கொண்டு அவன் உயிர் நிலை உள்ள ஐந்து வண்டுகளையும் பிடித்து வந்து ஒரே இடத்தில் வைத்து அவற்றை அவன் எதிரில் நசுக்கிக் கொன்றால் மட்டுமே அவன் மரணம் சம்பவிக்கும் என்று கூற அதற்கான வழியை கூறுமாறு ஹனுமார் கேட்டார்.
மயில் ராவணன் பெற்று இருந்த வரத்தின்படி ஐந்து சக்தி வாய்ந்த தலைகளை எவர் கொண்டுள்ளாரோ, அவர்களே அந்த ஐந்து தலைகள் மூலம் வண்டுகள் உள்ள இடத்தைக் காண முடியும். ஒவ்வொரு தலையும் ஒவ்வொரு இடத்தை மட்டுமே காண முடியும் என்பதினால் அவற்றைப் பிடிக்க ஐந்து கைகளும் வேண்டும். இல்லை என்றால் அவற்றை பிடிக்க முடியாது. ஆகவே ஹனுமானுக்கு உதவ விஷ்ணு பகவான் அவருக்கு தன்னுடைய கருட , ஹயக்ரீவ , வராஹா மற்றும் நரசிம்மர் போன்ற நான்கு முகங்களையும் கொடுத்து ஹனுமானை ஐந்து முகம் கொண்ட பஞ்சமுகி ஹனுமானாக்கினார். பார்வதி தேவி , யமன், கருடன் மற்றும் பிற தேவர்கள் தத்தம் மாய சக்திகளையும் ஹனுமாருக்குத் தந்தார்கள் . சில காரியங்களை சில அவதாரங்கள் மட்டுமே செய்ய முடியும் என்பதினால் ஹனுமாரால் மட்டுமே பஞ்ச முகத்துடன் அதை செய்ய முடியும் என்பதே விதியாக இருந்தது. அவற்றை பெற்றுக் கொண்ட ஹனுமார் பர்வத மலைக்கு சென்று, ஐந்து வண்டுகளையும் கையில் பிடித்துக் கொண்டு வந்தார்.
மயில் ராவணனின் உயிர் நிலை இருந்த
வண்டுகளை அவன் மீதே போட்டு அவற்றை
அப்படியே மிதித்துக் கொன்றார் . அவன் உயிரும் பிரிந்தது

மயில் ராவணனும் தன்னை வெள்ளி மலைப் போலவும், யானைப் போலவும் உரு மாற்றிக் கொண்டு வந்து அவருடன் யுத்தம் செய்தான். ஆனால் பல அசுர மாய சக்திகளையும் ஒருங்கே பெற்று, பஞ்சமுகத்தையும் பெற்றுக் கொண்டு இருந்த ஹனுமான் அவனைக் கீழே தள்ளி அவன் மீது காலை ஊன்றிக் கொண்டு அவன் மீதே அந்த ஐந்து வண்டுகளையும் காலில் போட்டு ஒரே நேரத்தில் நசுக்கிக் கொல்ல அவன் உயிர் பிரிந்தது. அதனால் அவன் உபயோகித்துக் கொண்டு இருந்த மாய சக்திகள் அனைத்தும் அழிய ராம-லஷ்மணர், மயில் ராவணனின் மனைவி, அவளது மகன் போன்ற அனைவரும் விடுதலை ஆனார்கள். ஹனுமார் நீலமேகனை அந்த ராஜ்யத்தின் அரசனாக பதவி ஏற்க உதவிய பின் ராம -லஷ்மணர்களை தூக்கிக் கொண்டு சென்றார். மீண்டும் ராம-ராவண யுத்தம் துவங்க ராவணனும் அழிந்தான். அது முதல் பஞ்சமுகி ஹனுமாரை துதிப்பது விஷேஷமானதாக கருதப்பட்டது.
பின் குறிப்பு: இந்தக் கதை வாய்மொழிக் கதையாகவே, தெருக் கூத்தாகவே கிராமங்களில் வளர்ந்து உள்ளது. இதற்கான புராண ஆதாரங்கள் உள்ளதாக தெரியவில்லை. அவற்றில் இருந்து கிடைத்த சாரத்தைக் கொண்டே இந்தக் கட்டுரை எழுதப்பட்டு உள்ளது. ஆனால் பஞ்சமுகி ஹனுமானை மயில் ராவணனுடன் சம்மந்தப்படுத்தி காட்டும் சில குறிப்பு அங்கும் இங்கும் உள்ளது.

Saturday 17 December 2011

Chennai- Periandavar Temple

திருநிலை பெரியாண்டவர் ஆலயம்
சாந்திப்பிரியா

திருக்கழுக்குன்றத்தில் இருந்து 8 கிலோமீட்டர் தூரத்திலும், செங்கல்பட்டில் இருந்து 14 கிலோ தொலைவிலும், திருப்போரூரில் இருந்து 12 கிலோ தொலைவிலும் உள்ளது திருநிலை பெரியாண்டவர் ஆலயம் . பல நூற்றுக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னர் எழுந்துள்ள ஆலயம் இது. மலைகளும் குன்றுகளும் சூழ்ந்த அடர்ந்த காடு போன்ற பகுதியில் உள்ளது திருநிலை கிராமம். இரு குளங்களின் மத்தியில்- கிழக்கு பகுதியில் ஒரு குளமும் தெற்குப் பக்கத்தில் மற்றொரு ஏரியும் உள்ள இடத்தில்தான் சிவபெருமான் வந்து தன் பாதத்தைப் பதித்து நின்றார் என்பது தல வரலாற்றின் ஒரு செய்தி. மேலும் அங்கு சுயம்புவாகத் தோன்றிய வரை சுற்றி இருபத்தி ஒரு சிவ கணங்கள் மண் உருண்டை உருவில் அவரை வணங்கியபடி உள்ளன. இவை அனைத்தும் இங்கு வந்தக் கதை சுவையானது.
கைலாயத்தில் ஒரு நாள் சிவபெருமான் பார்வதியோடு அமர்ந்து கொண்டு இருந்தார். அப்போது அங்கு வந்த நாரத முனி அவர்களை வந்து வணங்கினார். வந்தவர் ஏழேழு உலகங்களிலும் -தேவலோகம் முதல், அனைத்து உலகிலும் அதர்மம் பெருகி விட்டது என்றும், தேவர்களும், தேவகணங்களும் அசுர கணங்களின் தொல்லையை தாங்க முடியாமல் தத்தம் இடங்களை விட்டு ஓடி காட்டிலும், பிற இடங்களிலும் மறைந்தவாறு வாழ்ந்து கொண்டு இருக்கின்றார்கள் என்றும், அதை கட்டுப்படுத்த முடியாமல் திருமால் கஷ்டப்படுவதாகவும், சிவபெருமான் அவருக்கு உதவி அதர்மங்களை ஒழிக்க உதவுமாறு வேண்டிக் கொண்டார்.
சிவன் பாதம்

அதைக் கேட்ட சிவபெருமான் வருத்தம் அடைந்தார். கோபத்தில் அவர் உடலில் வியர்வை வழிந்தது . உடனே அந்த வியர்வை துளிகளில் இருந்து தனது சக்திகளைக் கொண்ட இருபத்தி ஒரு சிவகணங்களை உருவாக்கினார். சிவபெருமானினால் தோற்றுவிக்கப்பட்ட சிவகணங்கள் சிவன் மற்றும் பார்வதியை வணங்கி நின்று, தாம் என்ன செய்ய வண்டும் என அவரைக் கேட்டு பணிந்து நின்றன. சிவபெருமானும் அவர்களை உடனே அனைத்து உலகங்களுக்கும் சென்று அதர்மங்களை அழித்து விட்டு வருமாறு கூற அந்த சிவகணங்களும் உடனேயே அனைத்து இடங்களுக்கும் சென்று அதர்மங்களை அழித்தப் பின் சிவபெருமானை சென்று தாம் முடித்து விட்ட வேலையைப் பற்றிக் கூறாமல் பூலோகத்துக்கு சென்றுவிட்டன. அந்த சிவகணங்களுக்கு பூலோக மனிதர்களின் பக்திமுறை பிடித்து இருந்ததினால் இன்னும் சில நாட்கள் பூலோகத்தில் தங்கிவிடலாம் என அங்கு வந்தார்கள். அதே நேரத்தில், தமக்கு இட்ட பணியை முடித்து விட்டதாக சிவபெருமானிடம் சென்று கூற வேண்டும் என அவைகளுக்கு தோன்றவில்லை. அந்த சிவபெருமானின் பூதகணங்களுக்கு பூமியில் இன்னமும் சில வேலைகள் மீதம் இருந்தன என்பதினால் அந்த இருபத்தி ஒரு கணங்களும் பூலோகத்துக்கு சென்று அங்கு ஒரு வனப் பகுதியில் வாழத் துவங்கின. அசுரர்களால் அவதிப்பட்ட தேவர்களும், தெய்வ கணங்களும் அசுரகணங்கள் அழிந்துடன் தத்தம் இடங்களுக்கு மகிழ்ச்சியுடன் திரும்பிச் சென்றார்கள்.
தேவலோகத்தில் அமைதி திரும்பியதும், நாரதரின் அறிவுரையை ஏற்று தேவர்கள் அனைவரும் சிவபெருமானிடம் சென்று தம் நன்றியை தெரிவித்துக் கொண்டார்கள். அப்போது அவர்கள் அசுரர்களை அழித்த சிவ கணங்களுக்கும் நன்றி தெரிவிக்க அவர்களை தேடிய போது, சிவ கணங்கள் அங்கு இல்லை. ஆகவே அவர்களை தேவர்கள் உடனே சிவபெருமானின் தர்பாருக்கு வருமாறு செய்தி அனுப்ப சிவகணங்களும் அங்கு வந்து சிவனை வணங்கினார்கள். தான் கொடுத்த வேலையை முடித்ததும் வந்து தமக்கு சேதியை அந்த சிவகணங்கள் சொல்லவில்லை என்பதினால் கோபமுற்ற சிவபெருமானும் தாமதமாக அங்கு வந்து சேர்ந்த சிவ கணங்களை இனி பூமியிலே சென்று மண்ணாக கிடைக்குமாறு சபித்தார். தாம் செய்துவிட்ட தவற்றுக்கு மனிப்புக் கோரிய சிவகணங்கள் அவரிடம் தம்மை மன்னித்து மீண்டும் சிவகணங்களாக மாற அருள் புரிய வேண்டும் எனக் கேட்டார்கள். சிவபெருமானும் அவர்களை பூமியிலே சென்று மண்ணாகக் கிடந்தால் தான் தக்க சமயத்தில் வந்து அவர்களை ஆசிர்வதித்து மீண்டும் சிவகணங்களாக மாற்றுவதாக உறுதி கூறினார். சிவ கணங்களும் வருத்தத்துடன் பூமிக்கு சென்று விட்டன.
அங்காள பரமேஸ்வரியாக பார்வதி
காலம் ஓடியது. மீண்டும் அசுரர்களின் தொல்லை துவங்கியதும் தேவர்கள் சிவபெருமானிடம் சென்று அவர்களை அழித்து தம்மைக் காக்குமாறு வேண்டினார்கள். அந்த அசுரர்களில் சுந்தரபத்மன் என்பவன் ஒருவன். அவன் முன்னர் சிவபெருமானிடம் பெற்று இருந்த வரத்தின்படி சிவபெருமான் பூமியிலே மனித அவதாரம் பெற்று சிவன் பாதி- உமை பாதியாக வந்தால் மட்டுமே, அவரால் அவனை அழிக்க முடியும். இப்படியான வினோத வரம் பெற்று இருந்தவன் இந்திரன் முதலான தேவர்களை விரட்டியடித்து அவர்களின் ஆட்சியை கைப்பற்றி பல வகையில் தொல்லை கொடுத்து வந்தான். ஆகவே சிவபெருமான் மனித உருவெடுத்து அவனை அழிக்க வேண்டியதின் அவசியத்தை உணர்ந்த நாரத முனிவர் நடத்திய நாடகத்தினால் ஒரு சம்பவம் நடந்தது.
ஒருநாள் கைலாயத்தில் பார்வதி கண்களை மூடியபடி தியானத்தில் இருந்தாள். அதைக் கவனிக்காத சிவபெருமான் அங்கு சென்று அவளிடம் 'உடனே புறப்படு, அசுரர்களை அழிக்க வேண்டிய நேரம் நமக்கு வந்து விட்டது ' என்று அழைத்தார். ஆனால் தியானத்தில் இருந்த பார்வதி அவர் கூறியதைக் கேட்கவில்லை. அதைப் புரிந்து கொள்ளாத கோபமுற்ற சிவபெருமான் தன்னை அவள் அவமதித்துவிட்டால் என நினைத்து, அவளை பூமியிலே சென்று மனிதப் பிறவி எடுத்து வாழுமாறு சாபம் இட்டார். அவர் கோபமாகக் கூறியது பார்வதியின் காதுகளில் விழ அவளும் அவரை பூமியிலே சென்று மனிதப் பிறவி எடுத்து தன்னுடன் பாதியாக இணையுமாறு திருப்பி சாபமிட சிவபெருமான் அடுத்த வினாடி மனிதனாக மாறி பூலோகம் செல்ல வேண்டியதாகி விட்டது .
பல இடங்களிலும் சுற்றித் திரிந்தவண்ணம் இருந்த அவருடைய இயக்கம் நின்றுவிட மூன்று உலகிலும் இயக்கங்கள் தடைபெறலாயின .உலகமே அழிந்துவிடும் அளவுக்கு நிலைமை செல்லத் துவங்கியது. தேவர்கள் பயந்து நடுங்கினார்கள். யாராலும் சிவனைக் கண்டு பிடிக்கவும் முடியவில்லை. இந்நிலையைக் கண்டு பார்வதி அச்சமுற்றாள். என்ன செய்வது எனப் புரியாமல் சற்றும் தயங்காமல் தனது பெண் சக்தியை உள்ளடக்கிய சூலாயுதத்தை வீசி பூமியில் எறிந்தாள். அது விழும் இடத்தில் இருந்து வெளியேறிச் செல்லும் ஒளிக் கதிர்களால் சிவனார் ஈர்க்கப்பட்டு அங்கு வந்து சேருவார் என்பது அவளுக்கு தெரியும். அதுவும் பிரகாசமாய் சென்று பூமியில் தற்போது ஆலயம் உள்ள இடத்தில் நிலையாய் நின்றது. சூலாயுதம் வீழ்ந்த வேகத்தில் அந்த இடத்து பூமியில் இருந்து இருபத்தி ஓர் மண் உருண்டைகள் சிதறி சுற்றி விழுந்தன. அவை ஒவ்வொன்றும் சிவகணங்களாக உருமாறி அங்கேயே சுற்றி அலைந்தவாறு சிவபெருமானின் வருகைக்காக காத்து நின்றன.
இருபத்தி ஒரு சிவகணங்கள் சுற்றி நிற்க
சிவலிங்க வடிவில் சிவபெருமான்
எங்கேயோ இருந்த சூவன் அந்த சூலாயுத ஒளியைக் கண்டு ஓடோடி வந்து அங்கு தனது பாதத்தைப் பதித்து நிலையாக நின்றார். பார்வதியும் ஓடோடி வந்து அவரை வணங்கி நிற்க மண் உருண்டை வடிவில் அங்கு இருந்த சிவ கணங்களும் தமது உருவைப் பெற்று சிவபெருமானை சுற்றி நின்றவாறு அவரை வணங்கி நின்றார்கள். வானில் இருந்து தேவர்கள் பூமாரி பொழிந்தார்கள். தனது பாதத்தை அங்கு பதித்து நிலையாக நின்ற அந்த இடத்தின் பெயர் திரு+ நிலை = திருநிலை என ஆயிற்று. பெரிய மனிதராக உலகெங்கும் சுற்றி விட்டு இங்கு வந்த சிவபெருமான் பெரிய ஆண்டவர் என்ற பெயரில் பெரியாண்டவராக ஆனார். அங்கு வந்து தன்னை வழிபட்டு வேண்டுபவர்கள் இருபத்தி ஒரு மண் உருண்டையை வைத்தே தனக்கு பூஜிக்க வேண்டும் என அவர் கூறி அந்த இடத்தில் சாப விமோசனம் பெற்ற சிவகணங்களுக்கும் பெருமை சேர்த்தார். பார்வதியும் சிவனுடன் ஐக்கியமாக, அந்த உருவில் இருந்த சிவபெருமானும் அங்கிருந்து சென்று சுந்தரபத்மனையும் அசுரர்களையும் அழித்து தேவர்களைக் காத்து அருளினார்.
பின்னர் வெகு காலத்துக்குப் பின்னர் அங்கு பெரியாண்டவருக்கு ஆலயம் எழும்பியது. அதில் அண்டத்துக்கும் அன்னையான பார்வதி பார்வதி அங்காள பரமேஸ்வரி ரூபத்தில் வந்து அமர்ந்தாள். ஆலயத்தில் நீண்ட சதுரத்தில் இருபத்தி ஒரு சிவகணங்கலான லிங்கங்கள் சூழ ஒரு பெரியாண்டவரான சிவலிங்கம் உள்ளது காணுவதற்கு அறிய காட்சியாகும்.
இந்த ஆலயத்தின் அருகில் உள்ள சித்தாமிர்த குளத்தில் நீராடி இறைவனை வணங்கி நெய் திபம் ஏற்றினால் குழந்தைகள் இல்லாத எந்த ஒரு தம்பதியும் குழந்தை பேறு பெருவார்கள் என்பது அசைக்க முடியாத நம்பிக்கையாக விளங்குகிறது. அது போல சாப விமோசனங்கள் பெறவும் இங்கு வந்து வேண்டுதல் செய்கிறார்கள்.

No comments:

Post a Comment